மணி தான் இளம்வயதில் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கு முன்னே வந்து நின்றான். பல வருடங்கள் கடந்துவிட்டன என்பதற்கு அறிகுறியாக ஏற்கனவே பாழடைந்த கட்டிடங்கள், இப்பொழுது பார்த்தால் இன்னும் பயங்கரமாக சேதம் அடைந்திருந்தன. அவன் வேலை பார்க்கும் கட்டடம் எழுப்பும் நிறுவனம் இந்த இடத்தைப் புதுப்பிக்கும் பணியை செய்ய இருந்தது. நாளை, புல்டோசர் வந்து கட்டிடங்களை இடிக்கும் பணியைத் தொடங்கி விடும். அதற்கு முன் அவன் இங்கு வர விரும்பினான்.
பத்து வருடங்கள்! ஆனால் இன்றும் அந்த நாள் அவன் மனதில் நேற்று நடந்தது போல் தெள்ளத் தெளிவாக இருந்தது.
கலை ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்று ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான். அவளிடம் தனியாக இருக்கும்போது தவறாக நடந்துகொண்டதாக பழி சுமற்றினாள். கலை வீட்டிலிருந்து வந்த பின் நீண்ட நேரம் சிந்தித்து மணிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவனுடைய உலகமே சுக்குநூறாகி விட்டதாகத் தோன்றியது.
ஒரு காலத்தில் பொறுக்கிப் பயல் என்ற பட்டம் அவனுக்கு பெருமையளித்தது. ஆனால் அந்த நிழலிலிருந்து வெளியே வந்த பின், நல்லவன் என்ற பெயரை அவன் தக்கவைக்க பல பாடுகள் பட்டான். பழைய நண்பர்களை விட்டு விலகியதே ஒரு பெரிய சாதனை.
ஆனால் பொறுக்கியாக திரிந்த காலத்திலும், பெண்களிடம் அவன் தவறாக ஒரு நாளும் நடந்து கொண்டதில்லை. ஊர் சுற்றுவது, படிக்காமல் எப்பொழுதும் விளையாட்டு, தெருவில் மற்றவர்களுக்கு உபத்திரவமாக இருப்பது போன்ற விஷயங்களினால்தான் அவனுக்குக் கெட்டப் பெயர்.
செய்யாத ஒன்றை அவன் செய்துவிட்டதுபோல் கலை நடிக்க, அவன் ஒன்றும் புரியாமல் ஸ்தம்பித்து நின்றான். அவனுடைய பெற்றோர் கூட அவனை நம்ப விரும்பவில்லை.
சட்டென்று எழுந்து நின்றான். வயிறு கலக்கியது. வீட்டை விட்டு வெளியே செல்ல வாசல் அறைக்கு வந்தான். அவனுடைய தந்தை, "இந்த வேளைல எங்கடா போற, பொறுக்கி பயலே?" என்று கேட்டது அவனுக்கு சுறுக்கென்று குத்தியது.
"நான் அப்படிப்பட்டவன் இல்லப்பா! என்ன நம்புங்க. அந்த பொண்ணு ஏன் அப்படிச் சொன்னான்னு எனக்கு தெரியல?" என்று அவன் கதறுவது அவனுடைய தந்தை காதில் விழவில்லை. நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுவான் என்று நம்பிய சிவாவுக்கு தன் மகன் அதள பாதாளத்தில் விழுந்தது போல் இருந்தது.
அங்கு சுற்றியிருந்தவர்களுக்கும் கலையிடம் அவன் தவறாக நடந்து கொண்டான் என்று அரசால் புரசலாக தெரிய வர, அவனை பார்க்கும் விதம் அவனை மேலும் சுருங்க வைத்தது. படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. என்ன நடந்தது என்று கூட தெரியாமல் எல்லோரும் அவன் மீது பழி சுமற்றியது அவனுக்கு வாழ்க்கை மீதே வெறுப்பை அளித்தது. கலை மீது கோபம் வந்தது. அவளை நேரே சந்தித்து நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று துடித்தான். ஆனால் அவள் வீட்டு பக்கம் போவதற்கே பயந்தான்.
அந்த வார கடைசியில் அவர்கள் ஊரை விட்டு கிராமத்திற்கு சென்றுவிட்ட செய்தி வந்தது. "அநியாயமா ஒரு பொண்ணோட வாழ்க்கைய வீணாக்கிட்டயேடா," என்று சிவா மேலும் அவனை கடிந்துகொண்டான். "மேல படிச்சு அவ முன்னுக்கு வந்து அந்த குடும்பத்த காப்பாத்துவான்னு அவளோட அம்மா எவ்வளவு நம்பிக்கையா இருந்தா. படிப்பு சொல்லிக்கொடுக்க போனவன் இப்படி செய்யலாமா," என்று நொந்துகொண்டான்.
கனகாவுக்கு மகன் மணியை பார்க்கப் பார்க்க துக்கம் பொங்கி எழுந்தது. "என்னடா, என்ன ஆச்சு அன்னிக்கு உனக்கு?" என்று அவள் நல்லவிதமாகத்தான் கேட்டாள். ஆனால் மணிக்கு அவளுக்கும் அவன் மீது நம்பிக்கை இல்லை என்பது உறுதி ஆயிற்று.
மேலும் மேலும் அடி விழுவதை மணியால் தாங்க முடியவில்லை. மருந்து கடைக்குச் சென்று தூக்க மாத்திரை வாங்கி வந்தான். அன்று இரவே தன் வேதனையை நிரந்தரமாக தீர்க்க முடிவு செய்தான். வீட்டிற்கு வர பிடிக்காமல், எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் தெருக்களைச் சுற்றி வந்தான். அவ்வப்பொழுது தன் பாண்ட் பாக்கெட்டில் மாத்திரைகளை குலுக்கிப் பார்த்துக்கொண்டான். அது ஒன்றுதான் அவனுக்கு ஆதரவாக இருந்தது.
வழியில் ஒரு பெரிய கோயில் தெரிந்தது. அவனுக்குத் தெரிந்து அவனுடைய 8வது வகுப்புக்குப்பின் அவன் ஒருநாளும் கோயிலுக்குச் சென்றதில்லை. இன்றும் அவன் கோயிலைத் தேடி வரவில்லை. ஆனால் நிறைய நேரம் நடந்ததால் களைப்பாக இருந்தது போல் தோன்றியது. கோயிலுக்குள் சென்று ஒரு மண்டபத்தில் அமர்ந்தான். எதிரே ஓர் சொற்பொழிவாளர் உபந்நியாசம் செய்து கொண்டிருந்தார்.
"யார் வாழ்க்கைலதான் கஷ்டங்கள் வரதில்லை? பகவானே மனுஷனா பொறந்தா கஷ்டத்தை அனுபவிசிச்சுத்தான் ஆகணும். ராமரை எடுத்துக்கோங்கோ. சக்ரவர்த்தியுடைய மகன். பட்டாபிஷேகம் ஆகப்போறது. காட்டுக்கு போக வேண்டியிருந்தது. கிருஷ்ணர் - அரசனுக்கு பொறந்து மாடு மேச்சிண்டிருந்தார். பாண்டவர்கள்... காட்டுலயே தான் வாசம். ஆனா, இவாள்லாம் எப்படி வாழ்ந்தா? அதுதான் முக்கியம். கஷ்டங்கள் வரும்போது... நதிய எடுத்துக்கோங்கோ. அதோட வழில பெரிய மலையெல்லாம் நிக்கறது. ஆனா அது அந்த மலையை சுத்தியோ, துளை போட்டோ தாம்பாட்டுக்க ஓடிக்கிட்டே இருக்கு. கடல்ல போய் சேரணும் - அவ்வளவுதான் அதனுடைய நோக்கு. அப்படி ஓடிக்கொண்டே இருக்கறதுனாலதான் நிர்மலமா இருக்கு.
"இப்ப, இந்த குளம் குட்டைல எல்லாம் தண்ணி தேங்கி நிக்கறது. பாசி படிஞ்சு, அசுத்தமா... நாமும் அப்படித்தான் இருக்கம். அதை அப்ப அப்ப சுத்தம் செய்யறா மாதிரி நம்ப மனசையும் சுத்தம் செய்யணும். அந்த கடவுள் திருவடியை போய் சேரறதுக்கு செய்ய வேண்டியதை எதையும் யோசிக்காம செய்யணும். ஐயோ எனக்கு இப்படி ஆயிடுத்தே, ஐயோ என்ன யாரும் மதிக்கலையே, என்ன இப்படிச்சொல்லிட்டாளே, அப்படி சொல்லிட்டாளே... எப்பத்தான் முடிவு இதுக்கெல்லாம்? சிலபேர் இந்த பாரம் தாங்காம தற்கொலை வேற செஞ்சின்றா! மஹா பாவம்.
"ராமருக்கு பதிநாலு வருஷம் காடு. பாண்டவர்களுக்கு பதிமூணு. பொறுத்துக்கொண்டா... ஏன், சந்தோஷமாவே இருந்தா. தனக்கு தேவையான வித்தைகளை கத்துண்டு, அஸ்திரங்களை சேர்த்துண்டு தன்னை வலு படுத்திக்கொண்டா. நாம இப்பவே, இப்பவே எல்லாம் மாறணும்னு எதிர்பார்க்கக் கூடாது... அதுவும் பகவத் அனுக்கிரகம் கிடைச்சா ஒரு நொடில எல்லாம் சரியாயிடும். அப்படி இல்லைன்னாலும், பகவானை தியானம் பண்ணிகிட்டே இருக்கணும். வழி பிறக்காம போகாது."
மணி தன்னையும் அறியாமல், நேரம் போவதயே கவனிக்காமல் அங்கேயே உறைந்து போய் அமர்ந்திருந்தான். அவன் பயணம் எப்படி ஆரம்பித்தது, எப்படி சுதாரித்தது, மீண்டும் எப்படி திசை திரும்பியது என்பதை பற்றி எண்ணி பார்க்கும்போது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. உபந்நியாசத்தைக் கேட்கும்போது அவன் மனம் முதலில் ஆத்திரம் வந்தது. அவனுடைய கஷ்டத்தைத் துச்சப் படுத்துவதை போல் இருந்தது. இந்த கதையெல்லாம் கேட்க நன்றாக இருக்கும். அனுபவிப்பவனுக்குத்தானே அந்த கஷ்டம் தெரியும்!
அவன் எழுந்து மீண்டும் நடக்கலானான். கோயில் அருகில் இருந்த குளம் வழியில் இருந்தது. அங்கே சற்று நின்றான். இருட்டிலும் அதில் ஓரத்தில் படிந்திருந்த பாசி தெரிந்தது. அதை அவ்வப்பொழுது சுத்தம் செய்வார்கள் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் தேங்கி இருக்கும் நீர் என்பதால் மீண்டும் மீண்டும் அது அழுக்காகும்.
அவனுடைய மனமும் தேங்கி விட்டது. அன்று இரவு நடந்த சம்பவத்தில் மாட்டிக்கொண்டு தூண்டிலில் சிக்கிய மீன் போல் துடித்துக்கொண்டிருந்தது.
படிகளில் அமர்ந்து சிந்திக்கலானான். அவன் ஒரு இலக்குடன் வாழ்ந்துகொண்டிருந்தான். ஒரு சம்பவத்தினால் அவன் எப்படி உடைந்து போனான்! தன் வாழ்க்கையையே முடித்துக்கொள்ள துணிந்துவிட்டானே! மீண்டும் ஓட்டம் பிடித்தால், நிஜமாகவே நதியைப் போல் இதையும் கடந்து விட முடியுமா? அவனால் அப்படி மற்றவர்கள் சொல்வதை கேட்காமல், அதனால் பாதிக்கப் படாமல் இருக்க முடியுமா?
இன்று வேண்டாம். சற்று பொறுத்துதான் பார்ப்போமே என்று அவன் உள்ளம் கூறியது. கையில் இன்னும் தூக்க மருந்து இருக்கிறது. என்றைக்கு வேண்டுமென்றாலும் அவனால் அதை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் வாழ்ந்து சாதிக்க முடிந்தால்?
அது நினைத்த அளவு சுலபமாக இல்லை. ஆனால் அவன் படிக்கும் நேரங்களிலாவது அவனுடைய பெற்றோர் அவனை தனியாக விட்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல அதைப் பற்றி பேசுவது குறைந்து வந்தது.
அவன் பரிக்ஷையில் தேர்ச்சி பெற்று, நல்ல வேலையும் கிடைத்தது.
ஒரு நாள் அவன் வீடு திரும்பும்போது ஆனந்தி அமர்ந்திருந்தாள். "தம்பி," என்று அவனை நெகிழ்ந்த குரலில் அழைத்தாள். "உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்பா. கலைக்கு உன்ன பார்க்க சங்கோசமா இருக்கு. அவ சார்பா நானே மன்னிப்பு கேக்கறேன்..."
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுடைய பெற்றோர் அவனை ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
"இங்கேர்ந்து போன பிறகு கலை ரொம்பவே சுருங்கி போயிட்டா. இங்க நடந்த சம்பவத்துனாலன்னு நெனச்சேன். ஊர விட்டு போனதுனாலன்னு நெனச்சேன். ஆனா ஒரு நாளைக்கு உண்மைய சொன்னா. உன் மேல தப்பா பழிய சொமத்தினதா சொன்னா. ஏண்டீன்னு கேட்டேன். அவளுக்கு நாங்க கிராமத்துக்கு போயிடுவோமோ, இங்கயே இருக்க என்ன வழின்னு தெரியல. இப்படி உன்ன சொன்னா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சுடுவோம்னு நெனச்சா. கண்ட கண்ட சினிமாவ பார்த்து இப்படியெல்லாம் அவளுக்கு தோணியிருக்கு. இதெல்லாம் தெரியாம உன்ன இப்படி தப்பா பேசிட்டோமேன்னு நான் முன்னாடியே வந்த மன்னிப்பு கேக்கணும்னு தான் இருந்தேன். ஆனா அவ மனசு சரியா இல்லாம ஆஸ்பத்திரி, டாக்டர்னு மாறி மாறி போனதுல தாமதமாயிடுச்சு..."
இரு கைகளையும் கூப்பி அவன் காலை தொட எழுந்தாள். அவன் பின்னால் தாவிஅடி எடுத்து வைத்து அவளை தடுத்து நிறுத்தினான். என்ன சொல்வதென்று தெரியாமல் சிவாவை பார்த்தான்.
"இதெல்லாம் வேண்டாம்மா. சின்ன பொண்ணு, தெரியாமல் பண்ணிடுச்சு. மன்னிச்சிட்டோம்னு சொல்லுங்கம்மா," என்று கூறி அனுப்பிவிட்டார். ஊர் அறிய பழி சுமற்றி, ரகசியமாக மன்னிப்பு கேட்டு ஆனந்தி சென்று விட்டாள்.
சிவா கண்களில் நீர் வழிந்தன. மகன் காலில் அவன் விழ முயற்சி செய்தான். "என்ன மன்னிச்சிடுடா," என்று கதறினார்.
மணி கண்களைத் துடைத்துக் கொண்டான். அன்று நடந்த சம்பவங்கள் இன்றும் அவன் மனதில் பளிச்சென்று நின்றன. நம்பிக்கை, பொறுமை, உழைப்பு ... அன்றிலிருந்து அவனது தாரக மந்திரமாக மாறின. முன்னேற்றம் அவனை பின் தொடர்ந்து வந்தது.