Saturday, May 26, 2012

தோல்வி

வெகு நாட்களுக்கு பிறகு நேற்று கிரிக்கெட் பந்தயம் பார்த்தேன். குழந்தைகள் சென்னை சூப்பர் கிங்க்சுக்கு விசல் போட்டார்கள், ஆனால் எனக்கோ ஒரே கடுப்பு. கொஞ்ஜம் தோல்வியும் வாழ்க்கையில் முக்கியம் இல்லையா!

முரளி விஜய் வெளுத்து வாங்கினான். ஆனால் என்னை பொறுத்த வரையில் அது மட்டும் இல்லை சென்னையின் வெற்றிக்கு காரணம். டெல்லி குழு பந்து வீசும் பொழுதே தோல்வியை எதிர்பார்த்தார் போல் இருந்தது. ஒவ்வொரு ஆறுக்கும், நான்குக்கும் பந்து வீசுபவன் தன் தோல்வியை ஒப்புகொண்டார்போல முகத்தை தொங்க போட்டுக்கொண்டனர். ஒரு கேட்ச் மிஸ் ஆகும் பொழுது அந்த பீல்டர் அழுது விடுவானோ என்று தோணியது.

ஏனோதானோ என்று தான் டெல்லி ஆட்ட வீரர்கள் பேட் செய்ய வந்தார்.

எனக்கு ஆட்டத்தைப்பற்றி ரொம்ப தெரியாது என்றாலும் இப்போதெல்லாம் பேச படும் 'பாடி லாங்குவேஜெய்' வைத்து தோல்விக்கு அறிகுறி என்ன என்பதற்கு அவர்கள் பலத்த உதாரணம்.

கொல்கடாவாவது இன்னும் தைரியத்துடன் ஆடும் என்று எதிர்பார்க்கிறேன்.

Monday, May 21, 2012

மேகத்தின் நடுவில்

 மலை பிரதேசம். சுத்தி தேனீர் செடிகள். நதியும் நீர் மலையிலிருந்து கொட்டும் காட்சிகளும் மனத்தை ப்ரமிக்க வைத்தன. இந்த கோடை காலத்திலும் இப்படி குளுமையா என்று ஆச்சர்யமாக இருந்தது.

முன்னார் மற்ற மலை பிரதேசங்களை விட இயற்கையில் செழிப்பாக இருந்தது. செயற்கையான இயற்கை - ஏன்னென்றால் மரங்களை வெட்டி தேனீர் எஸ்டேட்கள் உருவாயிருக்கும் அல்லவா? ஆனாலும் பசுமையை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது.

ஆனால் ஊர் முழுதும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணியா பொழுது ஒரு மலை மேல்  காத்திருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி. வெய்யிலில் செல்லும் பொழுது ஒரு மலை புகைத்து கொண்டிருப்பது போல் இருந்தது. அங்கு தான் செல்கிறோம் என்று கூட அறியாமல் இரு பாறைகளுக்கு இடையில் புகுரும் பொழுது எதோ தேவலோகம் சென்று விட்டார் போல பிரமிப்பு. அப்படிஒரு மேக மூட்டம். பத்தடி தாண்டி தெரியக்கூட இல்லை.

ஏழாவது சொர்க்கம் என்பது இது தானோ என்று கூட தோணியது. அந்த மாதிரி அனுபவம் இந்த ஜன்மத்தில் நான் எதிர்பார்க்க வில்லை...

Friday, May 11, 2012

சுற்று சூழல்


 ஒரு இடத்திற்கு சென்ற உடனே நம்மை அது சில சமயம் கவர்ந்து விடுகிறது. சில நேரங்களில், என்ன தான் அழகாக இருந்தாலும் அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று தோணி விடும். சில மனிதர்களை பார்த்தால் சுகமாக இருக்கும். சிலர் என்ன சிரித்துப் பேசினாலும் மனதிற்கு கசப்பாகவே இருக்கும். 

எத்தனை சபைகளில் ஆடினாலும், கோவில்களில் ஆடுவது போன்ற ஒரு சுகம் கிடைப்பது அறிது. முயற்சி, உழைப்பு எல்லாவற்றிற்கும் ஒன்றுதான் என்றாலும் சாமிக்கு முன்னால் ஆடுவது போன்ற சுகம் சபையில் ஆடும் பொழுது கிட்டாது. இதுவும் அந்த இடத்தின் ஆற்றலை காமிப்பது என்று நான் எண்ணிக்கொள்வதுண்டு. 

பூஜை, தியானம், இதற்க்கு உள்ள வலிமை, நிறைய மக்கள் திரண்டு, தன் நினைவுகளை எல்லாம் ஒரு சிலையின் மேல் செலுத்தும் பொழுது அதற்க்கு எல்லாருடைய மன ஆற்றலும் போய் சேர்வதுதான் இதற்க்கு காரணம் என்றால் நாம் கூடி சாதிக்க கூடியது எவ்வளவு இருக்கிறது! இந்த ஆற்றலை நல்ல வழியில் செலுத்துவதற்கும் அதே மனோபலம் தானே தேவை! நல்லது செய்ய என்ன தடை?

Tuesday, May 1, 2012

பூஜையில் கரடி

 என்னையே கரடி என்று சொல்லிக்கொள்ளும் நிலமைக்கு வரவல்லை இன்னும். ஆனால் இந்த சிந்தனை ஒன்று மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

இருவர் தோழர்கள். மூன்றாவது தோழன் அவர்களுடன் சேரும் பொழுது கலக்கம் ஏற்படுவது ஏன்? இது கணவன் மனைவி விஷயத்தில் மட்டும் அல்லாமல், நட்பில் கூட பாதங்கள் ஏற்படுத்துகிறது.

"உனக்கு அவன் சொன்னால் ஒசத்தி,அவன் தான் முக்கியம்" என்று டக்கென்று ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.

"அவள் உன்னை பத்தி என்ன சொன்னா தெரியுமா?" என்று வம்பு பேச தூண்ட வைக்கிறது.

"அவ எப்பவுமே ப்படித்தான். நான்தான் விட்டு கொடுக்கணம்," என்று குறை பட வைக்கிறது.

ஒரு நேரத்தில் நம்மால் ஒருவருடன் தான் நட்பு வைத்துக்கொள்ள முடியுமோ? அதை விட அதிக பேர்கள் இருந்தால் அது கட்சியாக மாறி விடுகிறதே! ஒரு வித அச்சம் - நம்மை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம் - அந்த உறவை மாற்றி விடுகிறது. எவ்வளவு இருந்தும் என்ன, நமக்கு நம் மேலேயே நம்பிக்கை இருப்பதில்லையே! மற்றவர்கள் ஆமொதிப்பதற்கு தானே காத்திருக்கிறோம்!