வடிவேல் கடையைத் திறந்து, தன் பையை உள்ளறையில் வைத்து, முகத்தைத் தன் கைகுட்டையால் துடைத்துக்கொண்டு, ஏஸி ஆன் செய்தான். ஒரு பழைய துணியை எடுத்து, மேஜை, ஷெல்ஃப் மீது படர்ந்திருந்த தூசியை துடைத்தான். அழகு பொருள்களை சீராக வைத்தான்.
இன்று அவனுடைய கடைசி நாள். இன்று மாலை வீட்டிற்குச் சென்றபின் இந்த கடைப் பக்கம் வர வேண்டிய அவசியம் இல்லை. அவன் இருபத்தைந்து வருடங்களாக வேலை செய்த இந்த கடையை நோட்டம் விட்டான். அதோ, அந்த டெட்டி (teddy) - எத்தனை காலங்களானாலும் அதனுடைய மவுசு குறையாது.
அந்த ஜோடியாக ஆடும் பெட்டி - அது ஒரு காலத்தில் புதுமையாக இருந்ததால் நன்றாக ஓடியது. இபோ அதைக் கேட்பார் இல்லை.
லாஃபிங்க் புத்தா - பார்க்கும் பொழுதே என்ன இன்பம்! அதற்கு வந்த யோகம், வருபவர்களெல்லாம் அதில் பெரிதோ சிறியதோ, ஒன்றை வாங்காமல் போவதில்லை.
இந்த பொருள்களின் நடுவில் அவன் ஒரு வாழ்க்கையையே அமைத்திருந்தான். இந்த வாழ்க்கையை விட்டுச் செல்வதில் ஒரு கலக்கம் எழுந்தது. கடையில் இன்னும் இரண்டு பெண்கள் அவனுக்கு உதவியாக இருந்தனர். அவர்களில் ஒருத்தி, கண்ணம்மா, கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இவனுடன் வேலை செய்திருக்கிறாள். இதோ, கதவை திறந்து அவள்தான் வருகிறாள். "என்ன அண்ணே, இன்னிக்கும் சீக்கிரம் வந்துட்டீங்க," என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள். "பழக்கம் விட்டுப்போகலையா?"
"உங்களுக்கு பதிலா யாரையாவது வேலைல வைக்கப்போறாங்களா?" என்று கேட்டாள்.
அதைப்பற்றி முதலாளி ஒன்றும் பேசவில்லை என்று முணுமுணுத்தான். "தெரியவில்லை. நீங்கதான் இருக்கீங்களே," என்று வடிவேல் அவளைப் பார்த்து புன்முறுவலுடன் சொன்னான்.
"ஆனால் இப்பொழுதெல்லாம் முன்ன மாதிரி இல்லையே. வாடிக்கையாளர்கள் எங்கு வருகிறார்கள்?" கண்ணம்மா பெருமூச்சுடன் சொன்னாள். வடிவேல் மௌனமாக இருந்தான். "இப்பல்லாம் யாரும் வீட்டை அலங்கரிக்கறதில்லையா? இல்ல, ஒருத்தருக்கு ஒருத்தர் கிப்ட் கொடுப்பதில்லையா?" அவள் மேலும் கேட்டுக்கொண்டே போனாள்.
"கொடுக்கறாங்க... ஆனா இன்டர்நெட் வந்ததிலிருந்து, வீட்டில் உட்கார்ந்த படியே வியாபாரம் முடிந்துவிடுகிறது," என்று வருத்தத்துடன் கூறினான் வடிவேல்.
"எப்படித்தான் ஒரு பொருளை தொட்டு ஆராயாம வாங்கறாங்களோ!" என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள். "இப்படியே இருந்தால் நம் கடைக்கு என்னாகும்?" என்ற கவலையும் கூட தொத்திக்கொண்டது.
"உங்க காலம் வரிலாவது இப்படியே கழியட்டும்," என்று வடிவேல் அவளை வாழ்த்தினான். "பெண்ணை நல்லா படிக்க வைங்க. சொந்த கால்ல நிக்க கத்துக்கொடுங்க," என்றும் உபதேசித்தான்.
"உங்க பெண்ணை மாதிரி வளர்க்கப்போகிறேன்," என்று அவளும் குதூகலமாக பதிலளித்தாள்.
அன்று மாலை, சற்று முன்கூட்டியே கிளம்பினான். கடையை விட்டு விலக விலக மனம் பொங்கி எழுந்தது. இன்னும் அவனுக்கு வேலை செய்யும் வயதுதான். ஆனால் வாடிக்கை குறைந்ததால், ஆட்களைக் குறைக்க வேண்டும் என்று எண்ணிய முதலாளி, சூட்டிகையாக இருக்கும் கமலாவையும், நல்ல அனுபவம் உள்ள இவனையும் வைத்துக்கொண்டு, நடுத்தர கண்ணம்மாவை அனுப்புவதாக சொன்னார். கண்ணம்மாவிற்கு இன்னும் பள்ளிக்கூடம் போகும் வயதில் ஒரு பெண். அவள் உழைத்து சம்பாதித்துதான் அந்தப்பெண்ணை கரை சேர்க்க வேண்டும்.
இவனுக்கோ வேலைக்கு செல்லும் மகள் இருந்தாள். சொந்தக்காலில் நிற்கும் அளவுக்கு அவளுக்கு வடிவேல் கல்வியும் தைரியமும் கொடுத்திருந்தான். தனக்கும் தன் மனைவிக்கும் வேண்டிய அளவு அவன் சேமித்திருந்தான். வேலை செய்தே தீர வேண்டும் என்ற அவசியமில்லை, செய்தால் நல்லதென்று கருதிய அவன், இன்று கண்ணம்மாவிற்காக தன் இடத்தை விட்டுக்கொடுத்தான்.
தன் வாழ்க்கை இதுதான் என்று எண்ணிய அந்த கடையிடம் கனத்த மனத்துடன் விடைபெற்றுக் கொண்டான்.