வெய்யிலில் நின்று, குனிந்து வயலில் வேலை செய்யும் தன் தந்தையை பார்க்கும் சரவணனுக்கு மனதில் எதோ ஒரு ஏக்கம். குளிர்ந்த காரில் முதலாளி வந்து, வெள்ளை வேட்டியில் அழுக்கு படாமல் நிலங்களை பார்த்து விட்டு, அங்கு வேலை செய்பவர்களுக்கு பத்து ரூபா ரொம்ப தாராளமாக கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு சென்றவரை அவனும் கவனித்துக்கொண்டிருந்தான். அவர் மகள் கலா வண்டியில்தான் உட்கார்ந்திருந்தாள் . காரின் எசியை பெரிதாக்கி, பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள். இவனை விட ஓரிரண்டு வயதுதான் அதிகமாக இருக்கும். பட்டிணத்தில் படிக்கிறாள் என்று கேள்விப்பட்டிருந்தான்.
இவன் பக்கம் முதலாளியின் கண் திரும்பியது. "என்னடா? என்ன செய்யற?"
"படிக்கறேன்...அய்யா." அந்த கடைசி வார்த்தை அவனையும் மிஞ்சி ஒரு பழக்கத்தில்தான் வந்தது.
"படிச்சி என்ன கிழிக்கப்போற? வயல்லத்தானே வேல செய்யணம். உன் அய்யாக்கு உதவலாமில்ல?"
இவன் தலை குனிந்து பதில் பேசவில்லை.
அய்யாவும் வண்டியில் ஏறிச்சென்று விட்டார். அப்பொழுது கலா அந்த ரேடியோவுடன் இசைந்துப் பாடிக்கொண்டிருந்தாள். அவனுக்கும் இதையெல்லாம் அடையவேண்டும், அவன் தந்தை தாய் தங்கை இந்த சுகங்களை அடைய வேண்டும் என்றுதான் ஆசை...
தானும் தந்தையை போல சேற்றில்தான் வாழ வேண்டுமா? இல்லை, அவன் இந்த வயலில் வேலை செய்யமாட்டான் என்று தீர்மானித்துக்கொண்டான்.
அவனைப்போல பல இளைஞர்களும் அவன் வகுத்த பாதையை கடைப்பற்றி இன்ஜினியரிங் படித்தனர்... அவர்கள் வாழ்க்கையும் மேன்பட்டன. ஆனால் என்ன, நம் நாட்டில் யாரும் பயிரிடத்தான் ஆளே இல்லை.
No comments:
Post a Comment