Monday, October 24, 2011

Vattam

பள்ளிக்கூடம், வீடு. இதுதான் அவள் உலகம். அவள் வயதினர் எல்லாரும் மால், சினிமா என்று செல்வார்கள். இவளையும் ஓரிரண்டுமுறை அழைத்திருக்கிறார்கள். ஆனால், இவள் தயங்குவாள். 

அவர்களைப்போல் இவளிடம் அழகிய ஆடைகள் இல்லை. மொபைல் கூட இவளுக்கு தேவை என்றுதான் பெற்றோர்கள் வாங்கியிருந்தார்கள். காசுக்கு குறைவு என்று சொல்ல முடியாது. மற்றவர்களைப்போலதான். ஆனால் இவளுடை பெற்றோர்கள் எளிமையாக வாழவிரும்புவர்கள். இந்த காலத்திற்கு அது ஒத்துவராத விஷயம். அதனால் அவர்கள் மகள் பாதிக்கபடுகிறாள் என்று கூட அறியாமல் இருந்தனர். அவர்களை பொறுத்தவரை, இது படிக்க வேண்டிய வயது. இவள் அடம் பிடித்திருந்தால், அவர்கள் கேட்டுர்பார்களோ என்னவோ. ஆனால் இவளும் விட்டுவிடுவாள்.

அதனால் இவள் இரண்டு உலகங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாள். பெற்றோர்களுக்கு இவள் வேதனை புரியவில்லை. இவள் வகுப்பில் இவளை எல்லோரும் ஒதுக்கவில்லை என்றாலும் அவர்களுடன் கலந்துகொள்ள இவளுக்கு தயக்கமாகவே இருந்தது. அவர்களுக்கும் இவள் வித்தியாசமாக தென்பட்டாள்.

படிப்பு ஒன்றுதான் இவளுக்கு ஆறுதல். பரிட்சையின் பொழுது இவளை சுற்றி பல பெண்கள் இருப்பார்கள், சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள. ஆனால் முடிந்த அன்றைக்கு அவர்களெல்லோரும் படத்துக்கு போடும் ப்ளானில் இவள் சேர மாட்டாள். "போயேண்டா கண்ணு?" என்று தாய் வற்புறுத்தினால், "இல்லைமா போர்" என்று பொய் சொல்லுவாள். தாய்க்கு ஒரு புறம் கவலையாக இருந்தாலும், இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா என்று வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கும். அவள் மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்வாள். அதை கேட்டு இவள் இன்னும் கூனி குறுகி போவாள். இவள் ஒரு வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து விட முயற்ச்சி செய்தாள். ஆனால் அந்த வட்டம் குறுகிக்கொண்டே போனது. ஒரு நாள் அது கழுத்தில் ஏறி மேலே இருக்கும் பானில் இருந்து தொங்க செய்தது.

தாய் பதறிப்போனாள். "என்ன குறை வைத்தேன் உனக்கு?"

குறை வெளியிலா, அவள் மனதிலா என்று இனிமேல் ஆராய்ந்து என்ன பயன்?

No comments:

Post a Comment