Sunday, September 22, 2013

பெயரில்லாத ஒரு ஜீவன் - கவிதை

என் வீட்டின் மிக அருகில்
வளரும் ஒரு பெரிய மரம்
பெயரோ குலமோ அறிவதற்கு
என்ன பெரிய சாதனை செய்தாய்?

பல மரங்களில் அதுவும் ஒன்று
பிறந்து, வளர்ந்து, மறையும் இது
இதற்குப்போய் ஒரு கவிதையும்
நம் நேரத்தையும் வீணடிப்பதா?

ஒரே நொடியில் அழித்துவிட
ஒரு தீட்டிய கோடாரி போதும்
அதன் அழிவை வருந்துவதற்கு
எந்த ஜீவனும் இங்கே அன்று

இதை நினைத்து முடிப்பதற்குள்
பறந்து வந்தது ஒரு மரங்கொத்தி
கிளி, காகம், புறா என்று
அதில் வாழும் வாழ்வு பல

அந்த மரத்தில் வாழ்பவர்க்கு
அந்த மரமே ஒரு உலகம் அன்றோ?
அதற்கு வரும் துன்ப இன்பம்
அவைகளுக்கும் அதில் பங்குண்டோ?

பறவைகளுக்கு உணவு அதில்
கூடு கட்டி வாழ இடம்
பாம்பு ஒளிய அது புகல்
மழையில் வெய்யிலில் கிடைக்கும் நிழல்

இப்படி அதற்கு பொறுப்புகள் பல
தன்னைப் பற்றிய கவலை இல்லை
கடமை என்ற ஒரே கருத்தில்
'நான் நான்' என்ற பீத்தல் இல்லை

இருப்பதும் இறப்பதும் அவன் கையில்
பேரும் புகழும் விதியன்றோ?
தன்னிடம் இருப்பது நேர்மையொ ன்றே
உண்மையாக உழைத்திடுவோம்.