Saturday, December 12, 2015

மழையில் அகப்பட்ட ஜீவன் - சிறுகதை


நரேன் ஆபீசை விட்டு கிளம்பலாம் என்று வெளியே எட்டிப்பார்த்தான். மழை பெரிதாக பெய்துக்கொண்டிருந்தது. மத்தியத்திலிருந்து பெயந்த மழையினால் வாசலில் நீர் தேங்கியும் இருந்தது. பாண்டும் ஷூவும் கெட்டுப் போய்விடும் என்று அவன் மீண்டும் உள்ளேச் சென்றான்.

குருட்டு உலகம்

 விலை மதிப்புள்ள கற்கள் 
எதை எடுக்க எதை விட!

கண்கள் கூசும் வெளிச்சம் 
அவைகள் பளிச்சிட.

சில கீழே ஒளியும் 
பல எடுப்பாக ஜொலிக்கும் 

அவைகளின் மதிப்பு குறையாது 
கண்கள் செய்த பிழைக்கு 

பகட்டை பார்க்கும் மனிதர்களுக்கு
மின்னுவதெல்லாம் வைரம்  

சூரியனின் பிரதிபலிப்பில் மயங்கி 
கண்ணாடியை விரும்பும் உலகம்.

Sunday, November 22, 2015

பூமியில் ஒரு நட்சத்திரம்

வானில் மின்மின்னுக்கும்
நட்சத்திரங்களே
நானும் உங்களில்
ஒருவளே!

இருதயம் மினுக்கும்
கண்கள் சிமிட்டும்
உதட்டில் உதிரும் வார்த்தை
பளிச் பளிசெனுமே

வானில் மிதக்கும்
விண்மீன்கள்
கண்டு வியக்கும்
இந்த உலகம்

அதில் ஒன்று உதிர்ந்து
மிதக்கும்  அவர்கள் நடுவிலே 
என்று கண்டும் காண 
தேவை ஆழ்ந்த பார்வையே.

   

Sunday, October 11, 2015

என்றும் காதல்

பதினாறே வயதுதான் தேவியிற்கு. அதற்குள் ஒரு ஏமாற்றம் - படிப்பை நிறுத்தி அவளுக்கு திருமணம் முடிக்கப்போறதாக அவளுடைய தந்தை அறிவித்தார்.

தாய்மாமனுடந்தான் என்ற அடுத்த கனவு உடைந்தது. "உன்னோட அத்தப்பையன் உன்னத்தான் பண்ணிப்பேன்னு ஒத்தக்கால்ல நிக்கறானாம்," என்று தாய் சொன்னாள். முகத்தில் ஒரு உணர்வும்  இல்லை. கணவனை எதிர்த்துப் பேசும் துணிச்சலும் இல்லை. மகளுக்கு எங்கிருந்து வரும்? வருத்தத்தில் தலையை குனிந்தாள். அது நாணம் என்று பாட்டி சிரித்துக்கொண்டே அதற்கு பெயர் சூட்டினாள்.

மாமனாவது கேட்டிருக்கிலாம்.  அவனும் இவளில்லை என்று அறிந்தவுடன் வேறொருத்தியை மணந்து கொண்டான்.

அதாவது அவள் வலியை குறைத்ததா? இல்லையே!

மணம் முடிந்த மூன்றாவது மாதம் உண்டாகினாள். சந்தோசத்தில் உதித்த கரு இல்லை அது. கடமையால் பிறந்தது. அங்கு மாமனுக்கும் ஒரு மகள் பிறந்தாள். சின்னதாக இருந்த வீடு இரண்டு மாடி கட்டிடமாக மாறியது. "உடம்புதான் எப்பவும் படுத்திண்டே இருக்கு தம்பிக்கு," என்று அவள் தாய் வருத்தத்துடன் சொன்னாள்.

"சந்தோசமா இருக்காறா?" தயக்கத்துடன் கேட்டாள் அவள்.

மௌனம் சாதித்தாள் தாய். ஏக்கம் அவள் மனதை துளைத்தது. அவளும் மௌனத்தில் அதை மறக்க முயற்ச்சித்தாள். இரண்டாவது குழந்தையும் பிறக்கப் போகும் தருணத்தில் வேற்றாரை நினைப்பது தவறல்லவோ?

அந்த வருடத்தில் மாமாவின் வீடு இன்னும் பெரிதாகி விட்டது ஆனால் குடும்பம் அதே அளவாக தான் இருந்தது. பூஜைக்கு சென்றிருந்த போது மாமாவை வீல்சேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். "என்ன மாமா?" என்று தன்னையும் மிஞ்சி கேட்டு விட்டாள் .

அவளை நிமிர்ந்து பார்த்தான் அவள் மாமன். "ஒண்ணுமில்லமா, முந்தா நேத்து வண்டிலேர்ந்து விழுந்து அடி பட்டிடிச்சு."

"அம்மா உனக்கு உடம்பு சரியா இல்லன்னு சொன்னாங்க."

"வந்து பார்க்கணம்னு தோணலையா?" அவளையே உற்றுப்பார்த்துக் கேட்டான்.

"வரேன்..." அவள் மெதுவாக பதில் அளித்தாள்.

போய் பார்க்கவேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் கடவுள் வேறு கணக்கு போட்டிருந்தார். திட்டீரென்று அவள் கணவன் இறந்து விட்டான். தன் சிறு குழந்தைகளை அழைத்து அவள் தாய் வீட்டிற்கு திரும்பினாள்.

வயது 20. விதவை என்ற பட்டம், முயற்சி எடுக்காமலேயே அவள் தலையில் விழுந்த பட்டம்! அவள் வாழ்க்கையை இருட்டறையில் பூட்டிய பட்டம். இந்த காலத்திலா என்று ஆச்சர்யப்  படுவர் சிலர். ஆனால் அது நிஜம். முடங்கி விட்டாள் அவள். தந்தை அவளை, "நான் காப்பாத்துகிறேன்," என்றும் அவளை, "குழந்தைகளை பார்த்துக்கோ போரும்," என்றும் சொல்லிவிட்டார்.

"மேல படிக்கிறேன்பா, வேலைக்கு போறேன்," என்று கேட்டுப்பார்த்தாள்.

"நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன்," என்று அவளை அடக்கி விட்டார்.

ஒரு அறை, அது ஒரு சிறை. அவளை பாதுகாப்பதின் பேரில் உருவாக்கப்பட்ட ஒரு திறை. 

அதை மிஞ்சி வர தைரியம் இல்லாத, அதற்கு வழி அறியாத ஒரு பேதையாக அவளை வளர்த்த தந்தைதான் அவளுக்கு காவலர்.

குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் அவளுடைய வாழ்க்கையில் மட்டும் கடிகார முள் நின்று விட்டது போல் இருந்தது.

ஒரே பொழுதுபோக்கு, பக்கவாதம் வந்து அவளைப்போலவே முடங்கி கிடந்த அவள் மாமனுக்கு பணிவிடை செய்வதுதான். மாமி வெளியே போகும் நேரங்களில் அவருடன் மனது விட்டு பேசி இன்னும் தன் மனதில் அடங்கி இருக்கும் தன் காதலுக்காவது ஒரு புது வாழ்க்கை  கிடைத்ததே என்று பெருமிதம் அடைந்தாள் அவள். 






Sunday, September 13, 2015

அமாவாசையா பௌர்ணமியா? பாகம் 3

கல்யாண தேன்நிலா - பாகம் 1
தேய் பிறை பாகம் 2

இவனையா ஆசைப்பட்டு கல்யாணம் செய்துகொண்டோம் என்ற சந்தேகம் பிரபா மனதில் வேர் பிடித்து ஆட்டிப்படைத்தது. மணம் முடிந்த ஆரம்ப காலத்தில் இருந்த அன்பு இன்று எங்கு காணாமல் போய் விட்டது? தன் செல்வத்துடன் சிரித்து விளையாடும் நேரத்தில் கதிர் ஞாபகம் வந்தால் அப்படியே அந்தச்  சிரிப்பு மறைந்து விடும். குழந்தை மீது அந்த கோவம் பிரதிபலிக்க போகிறதே என்ற ஐயம் அவளை தன் கோவத்தை அடக்கிக்கொள்ள உதவியது. ஆனால் சில நேரங்களில், ச்சே, இதற்கு இவ்வளவு பாடு பாடுவது அவசியமா என்ற விரக்தியும் மனதை வாட்டியது.

அவன் வந்தவுடன் குழந்தையை அவனிடம் விளையாட விட்டு, வீட்டு வேலைகளில் மும்முரமாக இருப்பது போல் பாவனை செய்வாள் - சண்டைகளை தவிர்க்கத்தான். அவன் நெருங்கினால் இணங்கினாள். வெளியே அழைத்துச்சென்றால் பின் தொடர்ந்தாள். ஆனால் பாட்டை விட்டு விடு என்றால் மட்டும் மனம் ஒப்புக்கொள்ள வில்லை. அதுவே அவர்களுக்குள் நடுவில் சுவர் போல் நின்றது.

"நானும் தான் கிரிக்கெட் விளையாடின நாட்கள் உண்டு. குடும்பத்துக்காக அத விடல?" என்ற அவன் கேட்க ஆரம்பித்தான்.

"நான் விடச் சொல்லலையே," என்று அவனுக்கு அவள் நினைவூட்டினாள். "ஆசையா இருந்தால் திரும்பி போ வளையாட. நான் தடுக்கல," என்று கூட வற்புறுத்திப்பார்த்தாள்.

"என்னால் முடியாது," என்று அவன் அதை நிராகரிக்கும் பொழுது ஏமாற்றம் அதிகரித்தது.

"வெறும் வீடு, வேலைன்னு இருந்தா வாழ்க்கை எப்படி நன்னா இருக்க முடியும்? உனக்குன்னு ஒண்ணு இருக்க வேண்டாமா?" என்று மெதுவாக சுருதிப் பிடித்தாள். மனதில் ஒரு தெளிவு வந்தது. அவனைப் பற்றி தனக்கு தெரிந்தவற்றை ஆராய்ந்தாள். வேலைக்குபோகும் அவனுக்கு தன்னை பற்றிய சிந்தனை இல்லை, தான் வேலையை தவிர கூட ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்புக் கூட இல்லாமல் ஒரு யந்திரம் போலே இயங்கி வருகிறான் என்று புரிந்துக் கொண்டாள். அவன் மீது அனுதாபம் ஏற்பட்டது. விளையாட்டில் ஈடுபட்டிருந்த அவன் வாழ்க்கையில் விளையாட்டு சம்பந்தமாகவே ஏதாவது ஒரு வடிகால் இருக்க வேண்டும் என்று அவள் தீவிரமாக யோசிக்கலானாள்.

மெதுவாக அவன் கவனத்தை மரதோன் மீது ஈர்த்தாள். முதலில் ஏக்கத்துடன் அதைப் பற்றி பேசின அவனில் அதில் முயற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தாள். பாட்டுகற்றுக்கொள்ள ஆரம்பித்த பொழுது தன்னுள் எழுந்த சந்தேகங்கள் தான் இன்று அவனையும் தயங்க செய்தது என்று நன்று அறிந்தாள். ஊக்கம் அளித்து அதில் முன்னேற அவனுக்கு அவள் தோள் கொடுத்தாள்.

சண்டை சச்சரவு இல்லாத வீடா? ஆனால் கூடவே சிரிப்பொலியும் போட்டிப்  போட்டுக்கொண்டு கேட்கும் இப்பொழுதெல்லாம் அவர்கள் வீட்டில்.

அமாவாசை போல் இருட்டிவிடுமோ அவர்கள் இல்லற வாழ்க்கை என்ற பயம் போய் பௌர்ணமிபோல் பிரகாசிக்கும் அன்பு நிலவில்  ஜொலித்தது கதிர்-பிரபா இல்லம்.

முற்றும்

Saturday, September 5, 2015

தேய் பிறை - பாகம் 2



"நீ எப்பவும் பிஸி," கதிர் கடு கடுத்தான். "ஏன் இவ்வளவு இழுத்து விட்டுக்கற? குழந்தைக்கு நீ வேணும் இந்த சமயத்துல... இப்போ நீ பாட்டு கத்துக்கலன்னு யாரு அழுதா?" மேலும் ஏசினான்.

பிரபா முறைத்தாள். "நா யாருக்காக பாட்டு கத்துக்கணம்? எனக்காக பாடறேன். உன்ன கேக்க சொன்னேனா?" பதிலுக்கு எகிறினாள். "குழந்தைய உன் கிட்ட பாத்துக்கோன்னு சொன்னேனா?"

"நீ தான் அம்மா. மத்தவங்க கிட்ட விட்டுட்டு போறதுல என்ன அர்த்தம்? எனக்கு உன் ப்ரெண்ட்ச துளிக் கூட பிடிக்கல..."

"எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு. அதுவுமில்லாம, அவங்க கொஞ்ச நேரம் பாத்துகிட்டதுனால நா அம்மா இல்லன்னு ஆயிடுமா? அவங்க கொழந்தைய அவங்களுக்கு தேவங்கரச்சே நான் பாத்துக்கறேன். எங்களுக்குள்ள ஒரு understanding... நீ மூக்க நுழைக்காத..." என்று கண்டித்துக்கொண்டாள்.

"அது என் கொழந்தையும் தான்," அவன் அவளுக்கு நினைவூட்டினான். 

"எனக்கு ஞாபகமிருக்கு... உனக்கு இருக்கான்னுதான் தெரியல," என்று பதிலடி கொடுத்தாள். 

"உன்னோட பேசறதே waste. எதுக்கெடுத்தாலும் argue பண்ணுவ," அவன் நகர்ந்தான்.

"அனாவச்யத்துக்கு என்ன வம்புக்கு இழுத்ததும் நீதான்," அவள் விடாமல் பின் தொடர்ந்தாள்.

"அம்மா தாயே, என்ன விட்டுடு. இந்த குட்டி மட்டும் இருந்திருக்காட்டா நான் எங்கேயாவது  தனியா போயிருப்பேன்... நமக்குள்ள இருக்கற உறவு அவளுக்காகவாவது தாங்கணும்னா கொஞ்சம் நீ விட்டு கொடுக்க கத்துக்கணம்."

"உனக்கு அந்த பொறுப்பில்லையா?"

"நான் எவ்வளவு பொருத்து போறேன்னு உனக்கு தெரியாது."

பிரபா அவனை முறைத்தாள். "நான் பண்ற adjustments எல்லாம் நான் உங்களுக்கு எடுத்து சொல்லட்டுமா?"

"என்ன, போட்டி வெச்சுக்கலாமா? உன் பிரெண்ட்ஸ வேணும்னா ஜட்ஜ் ஆக்கிடலாம்!" கதிரும் சலிக்காமல் பதில் கொடுத்தான்.

"என் பிரெண்ட்ஸ இழுக்காதீங்க இதுல. அவங்க கொழந்தைய பாத்துக்கறது உங்களுக்கு பிடிக்கலன்ன நீங்க ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்து குழந்தைய பாத்துக்கங்க."

இருவரும் முகம் சுளித்து ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் தத்தம் வேலையில் மூழ்கினார்கள். இந்த சண்டை ஒரு தினசரி காட்சியாக மாற ஆரம்பித்தது. 

இப்படியும் ஒரு மண வாழ்க்கை தேவையா? குழந்தையை பாதிக்கும் அளவுக்கு இப்பொழுது இல்லையென்றாலும் ஒரு நாள் அது புரிந்துகொள்ளத்தான் போகிறது. அப்பொழுது தாய் தந்தை சேர்ந்து இருக்கிறார்கள் என்பதில் சந்தொசப்படுமா? இல்லை பிரிந்து போய் மரியாதையை காபாற்றிக்கொண்டு குழந்தைக்கும் நல்ல வாழ்க்கை அமைப்பதா? பிரபா குழம்பினாள்.

திருமணமான ஆரம்பத்தில் இருந்த சுகமான நாட்களை எண்ணி, அவை எங்கு பறந்து விட்டன என்ற நினைப்பில் அடிக்கடி மூழ்கினாள். அந்த சந்தொசமில்லாத மண வாழ்க்கை தேவையா என்ற கேள்வி அவளை வாட்டியது...

அடுத்த வாரம் - அமாவசையா பௌர்ணமியா, மூன்றாம் பாகத்தில் பார்க்கலாம். 
 

 

Monday, August 31, 2015

கல்யாண தேன்நிலா - பாகம் 1


"ஆபீஸ் போயே ஆகணுமா?" சிணுங்கினாள் பிரபா.
அவள் கன்னத்தை ஆசையாகக் கிள்ளிய படியே, "ஆமாண்டா... ஆனா சீக்கிரம் வரப் பாக்கறேன்,"
நாள் முழுக்க வீட்டு வேலைகளை சீக்கிரமாக முடித்துக்கொண்ட அவள் அவன் வரவை எதிர்பார்த்து தன்னை சிருங்காரம் செய்து கொண்டு காத்திருந்தாள். வந்ததும், "எங்க போகலாம்" என்று வெளியே கூட்டிட்டுப் போக தயாரானான்.
என்ன இன்பமயமான காலம் அது. சண்டை போட்டாலும் அதிலும் தனி இன்பம். ஒருவரை ஒருவர் நெருங்க அதுவும் ஒரு காரணம். ஆறு மாதம் கழித்து மனைவி முழுகாமல் இருக்கிறாள் என்பதில் தான் கதிருக்கு என்ன பெருமை.
அவள் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்குப் போயிருக்கும் பொழுது அவனுக்கு இருப்பு கொள்ள வில்லை. அடிக்கடி அங்கு சென்று வந்தான். குழந்தை பிறந்ததும் எப்பொழுது திரும்பி வருவாள் என்று நச்சரித்தான்.
குழந்தையும் கையுமாக வீடு திரும்பிய பிரபாவிற்கு கொஞ்சம் பயம் தான். "நான் இருக்கேனில்ல," என்று கதிர் ஆசுவாசப்படுத்தினான்.
ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக அவனுக்கு ஆபீசில் வேலை அதிகம் ஆகி விட்டது. குழந்தைக்கு அது தெரியுமா? அப்பா வந்தால் விளையாட்டு என்று முழித்திருக்கும். அப்பா வந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும். அம்மா திட்டினால் அப்பாவிடம் போய் அழும். "கொஞ்சம் நிம்மதியா இருக்க விடேன்," என்று அவன் அவளைக் கடிந்து கொள்வான். "கொழந்த தானே. கொஞ்சம் பொறுத்துக்கக் கூடாதா?" என்று கெஞ்சுவான்.
அவனுக்கு என்ன தெரியும், நாள் முழுவதும் அவள் படும் திண்டாட்டம்? சாப்பிடப் படுத்தும், அடம் பிடிக்கும்,தூங்க வேண்டிய வேளையில் விளையாடும், விளையாடலாம் என்று நினைக்கும் பொழுது தூங்கும். தனியாக விடவும் முடியாது. குழந்தையயைப் பற்றின கவலை கோவமாக மாறும். யாராவது சிறிது நேரமாவது தனக்கு ஒத்தாசையா இருக்க மாட்டார்களா என்று ஏங்கும் அவள் கணவன் வரும் வேளையில் அப்பாடா என்று ஓய்வு எடுக்க நினைப்பது தவறா?
சிறிய சிறிய சிக்கல்கள்தான். மற்றத் தம்பதிகள் பார்க்காததா? ஆனால் இப்பொழுதெல்லாம் அவன் வீட்டிற்கு தாமதமாக வரத் தொடங்கினான். அவளுக்கும் குழந்தை வளர வளர மற்றப் பொறுப்புகள் வந்துவிட்டன. பிக் அப், ட்ராப் என்ற சக்ரவ்யூஹத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாள்.
ஆனால் கூடவே அற்புதமான தோழிகள் கிடைத்தார்கள். அவளைப்போலவே அவர்களும் தாய்மார்கள். இவளுடைய சந்தோசங்களையும் வருத்தங்களையும் அனுபவித்தவர்கள். இவள் சொல்லாமலே சொல்வதைப் புரிந்துகொண்டவர்கள். இவளுக்குத் தேவை என்ற பொழுது காது கொடுத்துக் கேட்டு தோள் கொடுத்து நிமிர்த்துபவர்கள்.
கார் பூலிங் செய்து அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த கர்நாடக சங்கீதப் பயிற்சி பெற்றாள்.
அவன் இப்பொழுதெல்லாம், "இன்னிக்கு சீக்கிரம் வந்துடுவேண்டா, " என்றால், "அப்படியா... ம்ம்ம்ம்.... என்ன விசேஷம்? வேலை இல்லையா?" என்று தயங்கிக் கேட்பாள்.
'மெதுவாக வாயேன்' என்பதை சொல்லாமல் சொல்லுகிறாள்.

தேய் பிறை - பாகம் 2

Saturday, July 25, 2015

குறை ஒன்றும் இல்லை

"என் பக்கத்துல படுத்துக்கோ," ஒன்பது வயது மாதவன் சிணுங்கிவான்.
"வேலை இருக்குடா கண்ணா..." அவன் தாய் ஜெயா கொஞ்சிவாள்.
அவன் முகம் வாடுவதைக் கண்டு பொருக்க மாட்டாமல் அவன் இழுத்த இழுப்புக்கு அவன் பின்னோடு சென்று அவனுடன் படுத்துக்கொண்ள்வாள். தலையை வருடிவிட, மகன் உலகமறந்து உறங்குவதை கண்டு மகிழ்வாள்.

"உப்புமாவா?" என்ற முகம் வாடினால் உடனே தோசை செய்து அவன் முகம் மலருவதை ரசிப்பாள்.

 தந்தை கோபித்து கொண்டால், அவன் கண்ணீரை துடைத்து, அவனை மடியில் அமர வைத்து, இனிப்பு பண்டம் கொடுத்து, கதை சொல்லி அவனை சிரிக்க வைப்பாள்.

படிப்பில் முதல் ரேங்க் வரவில்லை என்றால் என்ன, என் பிள்ளை கெட்டிக்காரன், பெரிய மனுஷனாக வருவான் என்று முதலில் நம்பியது இந்த தாய்தான்.

இன்று கூடதான், வேலையில் முன்னேற, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய பாவம் எவ்வளவு கடமைகளில் சிக்கி கொண்டு சமாளிக்க முயற்சி செய்கிறான் அவள் மகன். தன்னால் முன்னை போல் உதவ முடியவில்லையே என்று ஏங்குகிறது மனமே தவிர தன்னை கண்டுகொள்வதில்லை என்று மகன் மீது ஒரு துளி கோவமோ வருத்தமோ இல்லை.
 

Sunday, June 7, 2015

வாழ்க்கையின் லட்சியம்


ஒரு 22 வயதே ஆன இளைஞன், வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்க முடியாமல் மாய்ந்தான் என்ற செய்தி நம்மை ஆட்டி வைத்தது. இது வருத்தத்துக்குரிய விஷயம்தான், ஆனால் இதில் ஆச்சரியமென்ன?

இன்று நம் வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், எல்லாருமே பணம் சம்பாதித்தும் அதை செலவழிக்க வழியை தேடியும், அதை ஈடு கட்ட மேலும் இன்னும் சம்பாதிப்பதிலே தானே நேரத்தை செலவழிக்கிறோம்? டார்கெட் என்று நம் தலையில் நம் மேலாளர்கள் ஏதோ கணக்கு போட்டு ஒரு எண்ணை கட்டி விடுகிறார்கள். அது கொண்டுவந்தால் மேலும் இன்சென்டிவ் என்ற சலனத்தையும் நம் மனதில் ஊசி போல் நுழைத்து விடுகிறார்கள். வேலையில் உயர்வையும் அந்த டார்கெட்டை சந்திப்பதுடன் பிணைத்துவிடுகிறார்கள். மொத்தத்தில் பணம் செய்யும் ஒரு கருவியாகி விடும் நம் வாழ்க்கையில் அழுத்தமே நிஜமாக நிற்கிறது.

இந்த சிந்தைனைகளுடன் நான் போராடிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு வீடியோ பார்த்தேன் - ஒருவர் 2 லக்ஷம் சம்பளம் கிடைக்கும் தருணத்தில், போதுமடா சாமி உனக்கு அர்பணித்த அடிமை வாழ்க்கை என்று அந்த வேலையில் இருந்து தப்பித்து ஓடி விவசாய துறையில் இறங்கி இருக்கிறார். இப்படி பல நல்ல வேலைகளில் இருக்கும், 30இலிருந்து 50 வயதுவரையானவர்களை இண்டர்வ்யு செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தன் திறமைகளை அவர்கள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று சோஷியல் செக்டரில் இறங்குகிறார்கள்.

நம் புராணங்களில் எதையுமே அளவோடு செய் என்ற அறிவுரை ஓங்கி நிற்கிறது. சம்பாதிப்பது என்பது உடலை காத்து, மனது, ஆத்மாவுக்கு வேண்டிய நற்பணிகளையும், நல்ல சிந்தனைகளை வளர்க்கவும்  வழி தேடுவதற்கே. ஆனால் இன்று, சம்பாதிப்பதொன்றே நம் வாழ்க்கையின் குறிகோளாக மாறி விட்டது. அதை வேண்டாம் என்று ஒதுக்குபவற்களுக்கு வேண்டிய தைரியமும், வாழ வழியும் கிடைப்பது அரிது. விலைவாசியோ தாண்டவமாடுகிறது. எங்கே பார்த்தாலும் பணத்தின் ஆதிக்கம்.

ஒரு சக்கிரவ்யுஹத்தில் மாட்டிக்கொண்ட பயமே நம்மை இதை விட்டு வெளியே வர விடாமல் தடுக்கிறது. நம் குழந்தைகளையும் நாம் அதே வழியில் தள்ளுகிறோம்.

வாழ்க்கையின் லட்சியம் என்ன - இதை சிந்தித்து, சம்பாதிப்பது மட்டுமல்ல என்று அறிந்து, மற்ற மனதிற்கு இதமான, நம் ஜீவனுக்கு பயனான விஷயங்களில் ஈடுபட நாம் வழி வகுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்த 22 வயது இளைஞனை போல பல இளைஞர்களை நாம் பலியாகுவதை பார்க்கத் தான் போகிறோம். சில நாட்களில், இப்படி ஒரு செய்தி நம்மில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, என்ற பயமும் உண்டாகிறது.


  

Thursday, March 26, 2015

கள்ளக் காதல்

"அடுத்த சந்திப்பு எப்போ?" விஜயன் கேட்டான்.

"இது என்ன கேள்வி! வேலன் அடுத்த தடவ ஊருக்கு போகரச்சே தான்..." என்று சொல்லி ராதா படுக்கையை விட்டு எழுந்தாள்.

அவள் பின்னழகை ரசித்தவாறே விஜயன் பெரு மூச்சு விட்டான். "இப்படி மாசத்துக்கொரு தடவ சந்திக்கறது கஷ்டமா இருக்கு."

"என் மீது காதல் கொண்டாயோ என் மன்னவனே?" என்று ராதா நகைத்தாள்.

அவன் ஒரே எட்டில் எழுந்து அவள் மீது பாய்ந்து அவளைப் பின்னாடியில் இருந்து கட்டிப்பிடித்தான். "என்ன பேர் வேண்ணா வெச்சுக்கோ. இப்போல்லாம் வீட்ல கூட உன் ஞாபகம் தான்."

எதிரே இருந்த கண்ணாடியில் கண்கள் சந்தித்தன. "எசகு பிசகா எதையாவது செஞ்சு வேச்சிடாதே," ராதா சிரித்துக்கொண்டே எச்சரித்தாள். "உமாக்கு சந்தேகம் வரக்கூடாது."

"பேசாம எங்கேயாவது ஓடி போய்டலாம்."

"சீ! ஓடற வயசா இது!" என்று சிரித்தாள்.

"என்ன வயசாயிடுத்து இப்போ உனக்கு? உன் டீனேஜ் பொண்ணுக்கு அக்கா மாதிரி இருக்க," என்று சீண்டினான்.

மனதுக்கு இதமாக இருந்தது இந்தப்பேச்சு. "இப்படியே பேசிண்டிருந்தா நீ உன் மீட்டிங்குக்கு போனா மாதிரி தான்." அவனைத் தள்ளி விட்டு உடைகளை அணிந்து கிளம்பினாள் ராதா.

தனித்தனியாக வெளியேறினார்கள். போன இரண்டு வருடங்களில் எப்படி எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் சந்திப்பது என்பதற்கு நிறைய வழிகள் கண்டுபிடித்தவர்கள் இவர்கள். ஒரு புத்தகமே போடலாம். குடும்ப நண்பர்கள், அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள் - குடும்பத்துடன். எங்கேயோ, எப்பவோ, அவர்கள் மனங்கள் பிணைந்து விட்டன - கவற்ச்சியில். அது இப்படி உருவம் எடுத்தது. குடும்பத்தை விடவும் இஷ்டமில்லை, இந்த உறவை அறுக்க மனதும் இல்லை. உல்லாசம் ஒன்றுதான் இப்பொழுதிற்கு ஓங்கி நின்ற குறிகோள்.

நடக்கற வரைக்கும் நடக்கட்டும் என்ற மனப்பான்மை.

**

எப்பவும் போல் அந்த ஞாயிறு ராதாவின் கணவன் வேலன் ஊரிலிருந்து திரும்பிய பின் குடும்பங்களுடன் சந்தித்தனர். விஜயன் மகன் ஆதியும், ராதா  மகள் பூஜாவும் தான் இந்த முறை எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.

"அம்மா, அப்பா," என்று குசல விசாரணைக்குப் பிறகு ஆதி ஆரம்பித்தான். "அங்கிள் ஆண்டி," என்று ராதவையும் வேலனையும் பார்த்துச்சொன்னான்.

"என்ன, பீடிகை பலமா இருக்கு," என்று வேலன் சிரித்தான்.

"ஆமாம்பா," என்று பூஜா ஆதி பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். ராதா மனம் சஞ்சலப்பட்டது.

"நானும் ஆதியும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறோம்," என்று பூஜா தைர்யமாக பேசினாள். ராதாக்கு தலை சுற்றியது. "பூஜா. உனக்கு இப்போதான் 18 வயது முடிந்திருக்கு!"

"கவலப்படாதம்மா, நாங்க நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கணம்னு சொல்லல! ஆனா, எங்களுக்குள்ள இருக்கற காதல வச்சு நாங்க கல்யாணத்த நிச்சயம் பண்ணிக்கலாம்னு நினைக்கறோம். போன இரண்டு வருஷமா எங்களுக்குள்ள ஏற்பட்ட காதல் இப்போ வளர்ந்து எங்கள வாட்டுது. ஆனா நாங்க அவசர பட விரும்பல. கல்யாணம் நாங்க படிச்சு முடிச்சப்பறம்தான்," என்று சிரித்துக்கொண்டே பூஜா சொன்னாள்.

ராதாவும் விஜயனும் தலையில் விழிந்த இடியை பொறுக்கவும் முடியாமல், வலியை சொல்லவும் முடியாமல் திணறினர்.

Sunday, February 22, 2015

திறனோ திறன்

"ம், ஸ்ருதி நன்னா பிடி," குரு அதட்டினார். கற்பகம் முயற்சி செய்தாள். பிருந்தா செய்வது போல பாவனை செய்தாள். "பலே" என்று குரு சொல்லும் பொழுது தனக்கும் சேர்த்துதான் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டாள்.

"போட்டில கலந்துக்க போற. மனசுல அந்த தெய்வத்தை நெனச்சிண்டு பாடு. பரிச நெனச்சிண்டு இல்ல," குரு மேலும் கற்பகத்திற்கு உபதேசித்தார். "வெற்றி உனக்கே," என்றும் ஆசிர்வதித்தார்.

கற்பகம் வழி முழுக்க தான் கற்றுக்கொண்ட பாடத்தையே மனுதிலேயும், மெதுவாகவும் பாடிப்பார்த்துக்கொண்டாள். பிருந்தாவோ மனதில் பொறுமிக்கொண்டே வந்தாள். வெற்றி உனக்கே என்று அவர் கற்பகமிடம் மட்டுமே சொன்னார் என்பதை அவளால் மறுக்க முடியவில்லை.

"ஏண்டி முகம் வாடிற்கு?" என்று பிருந்தாவின் அம்மா உருகினாள்.

"நான் நன்னா பாடலையா மா?" என்று பிருந்தா கண்ணில் நீருடன் கேட்டாள்.

"யாருடா அப்படி சொன்னா?" என்று அம்மா பொங்கி எழுந்தாள். நடந்ததை சொன்னாள் பிருந்தா. "கவலைப்படாதே," என்று தேத்திய அம்மா உடனே ஒரு பெரிய வங்கியில் நிர்வாகியாக இருக்கும் தன் கணவருக்கு போன் செய்தாள். "குழந்த மனசு ஒடஞ்சி இருக்கா. ஏதாவது செய்யக் கூடாதா?" என்று அவரையும் கிளப்பி விட்டாள்.

போட்டியை ஏற்பாடு செய்பவர்களுக்கு அடித்தது  யோகம். திடீரென்று ஒரு பெரிய வங்கி அவர்களுடைய நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய தொகை கொடுப்பதாக முன் வந்தது. என்ன, அவர்கள் சொல்லும் போட்டியாளருக்குத்தான் முதல் பரிசு கொடுக்கணமாம். யோசிப்பதற்கு என்ன இருந்தது? சரி என்று பணத்தையும் வாங்கி பெயரையும் குறித்துக்கொண்டார்கள்.

"நீ நன்னா பாடு. பரிசு உனக்குத்தான்," என்று அம்மா ஆசுவாசப் படுத்தினாள்.

போட்டி முடிந்தது. "ஆறுதல் பரிசு ஒன்று - மீனாக்ஷி," என்று அறிவித்தது ஆச்சர்யத்தில் மூழ்கினர் பார்ப்பவர்கள். முதல் பரிசோ, இரண்டாவது பரிசோ என்று எதிர்பார்த்தப்பெண்ணிற்கு ஆறுதல் பரிசா?

"இரண்டாவது - குமரேஷ்."

மௌனம் நிலவியது. நிச்சயமாக மூன்றாவது இடத்தை பிடிப்பான் என்று நம்பினார்களே!

ஏற்பாடு செய்தவர்களும் இந்த மௌனத்தை பார்த்தார்கள். சற்றென்று "மூன்றாவது பரிசு, பிருந்தா, இரண்டாவது, ஸ்ரீசரண், முதல் பரிசு, கற்பகம்," என்று சொல்லி முடித்தார்கள். அந்த சபையே கை தட்டி உர்ச்சாகப்பட்டதைப் பார்த்து பெரிய நிம்மதி மூச்சு விட்டார்கள்.

"என்ன இது?" என்று பிருந்தா அப்பா சினம் கொண்டதை பார்த்து, அவசரமாக சமாதானப்படுத்தினார்கள். "திறமைக்கு பரிசு குடுக்கலைன்னா இந்த நிகழ்ச்சிய மதிச்சு யாரும் வர மாட்டாங்க. அப்புறம் இந்த பணத்தை வெச்சு நான் என்ன செய்யறது?" என்று புரிய வைத்தான். இன்னும் மெல்லிய குரலில், தயங்கி சொன்னான், "கொஞ்சம் நன்னா பயிற்சி எடுத்துண்டு, சாதனை பண்ணி போட்டில கலந்துக்க சொல்லுங்க. இந்த பணம் வாங்காமலேயே பரிசு கொடுக்கிறோம்."

முகத்தில் பளார் என்று அறைந்தார்போல் இருந்தது, பிருந்தாவின் பெற்றோர்களுக்கு.