Friday, January 10, 2014

அழகைத்தேடி

சுவாமியும் ரமணியும் அந்தப் பெண்ணையே பார்த்து நின்றனர். கண்ணைப் பறிக்கும் பளிச்சென்ற நிறம், தீர்க்கமான முகம், மெல்லிய உடல், நீளக் கருநிறக் கூந்தல் - வைத்த கண் வாங்காமல் அவர்கள் மட்டும் இல்லை, இன்னும் பலர் அப்படித்தான் மெய் மறந்தனர்.

"டேய், கல்யாணம் பண்ணிண்டா இவளதாண்டா," சுவாமி சபதம் செய்தான்.

சில மாதங்களில் அவன் தன் சபதத்தின் பாதியை அடைந்து விட்டான் - ரமணியிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டான், "ரமாவும் நானும் ஒரு கபுள் டா."

"எப்படி டா! எப்படி வலைல சிக்க வெச்ச?" ரமணி சுவாமியை ஆச்சர்யத்துடன் பார்த்தான். ஒரு மாதம் தான் ஆகியிருந்தது

"வலை இல்லைடா! அப்படில்லாம் துச்சப்படுத்தாத!" சுவாமி எச்சரித்தான். "ரமாவும் நானும் பல தடவ சந்திக்க நேர்ந்தது. அவ பாக்கறதுக்கு எவ்ளோ அழகோ, மனசும் அவ்ளவு சுத்தம். பூ மாதிரி..."

"குடுத்து வெச்சவண்டா..." ரமணி பெருமூச்சு விட்டான்.

சுவாமி அவனை தட்டிக்கொடுத்தான். "உனக்கும் யாராவது கிடைக்காம போக மாட்டா."

சுவாமியுடைய போன் அடிக்க, ஜன்னலோரமா அவன் போய் மெதுவா பேச, ரமாவிடமிருந்துதான் கால் என்று புரிந்து, நமுட்டுச் சிரிப்புடன் வெளியேறினான் ரமணி.

நல்ல நண்பன், தன் காதலிக்கு தன்னை அறிமுகப்படுத்துவான் என்ற எதிர்பார்ப்பு நாளாக ஆகக் குறைந்து வந்தது. "என்னடா, நம்பிக்கை இல்லையா?" என்று அப்பட்டமாகக் கேட்டேவிட்டான், ரமணி.

"அப்படி எல்லாம் இல்லடா. எத்தன நாள் தாக்குப் பிடிக்கும்னு தான் தெரியல."

"ஏன்டா?" ரமணி தன் நண்பனின் சுரத்தில்லாத குரல் கேட்டு அவனை உற்றுக் கவனித்தான். "எல்லாம் சரிதானே?"

"ம்ம்ம்..." என்று மழுப்பிவிட்டான் சுவாமி.

நாளடைவில் தன் நண்பன் ஏதோ குழப்பத்தில் இருப்பது தெரிந்தது. ரமாவுடனும் நேரம் கழிப்பதாகத் தெரியவில்லை. "ரமாவ பத்தி வீட்ல சொல்லிட்டயா?" என்று கேட்டான் ரமணி.

சுவாமி வெகு நேரம் பதில் சொல்லாதது போல இருந்தது ரமணிக்கு. தான் நோண்டுவானேன் என்று எண்ணி வேறு எதையோ பேச ஆரம்பித்த பொழுது சுவாமி தடுத்தான். "எங்களுக்கு ஒத்துப்போகவில்லை, அதனால நான் ரமாவோட பிரியறதுன்னு முடிவு பண்ணிட்டேன்."

ரமணி ஸ்தம்பித்து நின்றான். "தேவதை போல இருக்கற பொண்ண..."

"தேவதை... தேவதைதான். ஓவியமா இருந்தா மணிக்கணக்கா பாத்துட்டிருக்கலாம். வீட்ல மாட்டிக்கலாம், கழுத்துல இல்ல."

"புரியல," ரமணி திணறினான். "மர்மமா இருக்கு நீ சொல்றது."

"வாயத்திறந்தா பொலம்பல் தான். மொதல்ல நன்னாதான் இருந்தது. ஹீரோ மாதிரி தோணித்து. அபலைப் பெண்ணக் காப்பாத்தர வீரன் மாதிரி தோணித்து. இப்போ விட்டா போரும்னு இருக்கு." சுவாமி அவனைத் திரும்பிப் பரிதாபமாகப் பார்த்தான்.

சுவாமி அனுபவத்துல கற்றுக்கொண்ட பாடத்தை ரமணியுடன் பகிர்ந்துக்கொண்டான் - "அழகு முகத்தில் மட்டும் இல்லடா... வாழ்க்கைய ரசிக்கரதுலையும் இருக்கு. ரமா அழகுதான் ஆனா எத எடுத்தாலும் ஒரு நெகடிவ் ஆட்டிட்யூட். என் நிம்மதியே கெட்டுடுச்சுடா. சிரிக்கவே மறந்துட்டேன்!"

"என்ன சொல்ல வர?" ரமணி கேட்டான். "அழகான பொண்களப் பாத்தா நீ தூர ஓடப் போற?" என்று கிண்டலடித்தான். "எனக்குக் காம்பெடிஷன் கொறஞ்சுது..."

சுவாமி சிரித்துக்கொண்டே சொன்னான். "ரொம்ப சந்தோசப்படாத! சபதம் விடறதுக்கு முன்னாடி யோசிக்கப் போறேன்னு சொன்னேன்!"

சுவாமி பல நாட்களிற்குப் பிறகு பழைய கலகலப்புடன் இருப்பதை கண்டு ரமணி நிம்மதி மூச்சு விட்டான்.