Saturday, August 24, 2013

உள்ளே வெளியே: கவிதை

பார்க்க என்ன அழகு
ஒன்றை போல மற்றொன்று!
சிறிய பெரிய வேற்றுமை
சில கருப்பு, சில வெள்ளை

கவனித்தால் இன்னும் பல
நுணுக்கங்கள், கோணங்கள் சில
கண்ணைப் பறிக்கும் ஜொலிப்பு ஒன்றில்
மனதை துளைக்கும் இருட்டு மற்றொன்றில்

ஏழ்மை, செழுமை எனப் பல எதிர்ச்சொற்கள் 
மனிதன் வாழ்க்கைக்குக் குறிக்கோள்கள்
ஆண் பெண் என்ற பிரிவினையால் 
ஊசலாடுகிறது மனிதாபிமானமாம்

வெளியில் ஒரே ஆடைஎன்றாலும்
உள்ளே நடக்கும் போர்கள் வெவ்வேறு
அதில் விளங்கும் நன்மை தீமையில்
எரியும் மனித இனம் பல்வேறு

Tuesday, August 6, 2013

பாசம் - சிறுகதை

"என்ன ஜொலிக்கர?" பவானி அகிலாவைப் பார்த்துக்கேட்டாள்.
"புது வைரத்தோடு" என்று பெருமையுடன் அந்த சிறியத் தோடை காட்டினாள் அகிலா. "என்னோட சண்ட போட்டார். அதுக்கு சமாதானமா," என்று சிரித்தாள் அவள்.
"ஓ! சண்ட போட்டா இதெல்லாம் கடைக்குமா?"
அகிலா சிரித்துக்கொண்டே, "நானும் தான் வாங்கிகொடுத்தேன், ஒரு ஸ்மார்ட் போன்."
பவானி ஆச்சர்யத்தில் பார்த்தாள். "பலே! அப்ப நறைய சண்ட போடுவயா?"
மறுபடியும் ஒரு சிரிப்பு. "அப்படி இல்ல. ஆனா சண்ட போட்டா, சமாதானம் இப்படித்தான்."
அதற்குள் அங்கு நித்யாவும் வந்து விட்டாள். "எங்க வீட்டுக்காரருக்கு எவ்வளவு ஜாடமாடையா சொல்லிப் பார்த்தாலும் இதுக்கெல்லாம் மனசே வராது. வெறும் ஹொடெல்ல போய் ஒரு வேள சாப்பாடுதான் அவர் செய்யற சமாதானம்."
பவானிக்கு ஒரு மாதிரி இருந்தது. பேச்சை மாற்றி வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். அவள் வீட்டில் சண்டை நடக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று மனதில் கணக்கிட்டுக்கொண்டாள். வேலை மும்முரத்தில் அதையும் மறந்தாள்.
ஒரு வாரமிருக்கும். பலமான சண்டை, அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையில். யார் ஆரம்பித்தார் என்று தெரியவில்லை, ஆனால் இருவரும் முடிப்பதாகவும் தெரியவில்லை.
ஒரு மாதிரி சத்தம் அடங்கியதே தவிர, ஆத்திரம் அடங்க வில்லை. நேரம் ஆக ஆக, அதுவும் சிறிது சிறிதாக தணிந்தது.
 அவள் சமையலறையில் வேலை செய்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவன் அருகே வந்து அவளுடைய இடையை பிடித்து தன்னுடன் அணைத்துக்கொண்டான். அவள் வேண்டுமென்றே முகத்தை சுளித்துக்கொண்டாள். "என்னடா," என்று அவன் அவள் கன்னத்தில்  முத்தமிட்டான். சிணுங்கினாள், அவன் தோளில் சாய்ந்தாள், காதலில் மெய் மறந்தாள்.
மறுபடியும் அகிலாவை இரண்டு நாள் கழித்துப்பார்த்த பின்புதான் தான் கணக்கிட்டது ஞாபகத்தில் வந்தது.
ஆனால் அந்த முத்தத்தில் கிடைத்த திருப்தி பொருளில் கிடைக்குமா?  தான் போட்டது தப்பு கணக்கு. அன்பிற்கும் பாசத்திற்கும் ஏது விலை?