Thursday, September 27, 2012

வாழ்க்கைக்கல்வி - கவிதை

கல்லில் தடுக்கி விழுந்து எழுந்து
அதனை நகர்த்தி நடக்கக் கற்றேன்

மழையில் நடந்தால் இன்பம் எனினும்
ஒதுங்கி நின்று ரசிக்கக் கற்றேன்

வெயிலில் நடந்து வியர்க்கும் என்று
நிழலில் மறைந்து இயங்கக்கற்றேன்

சொல்லில் பொல்லாத நஞ்சைக்கேட்டு
அந்த வஞ்சனையை அஞ்சக்கற்றேன்

சிரிப்பே உயர்ந்த நகைஎன்றறிந்து 
அதனை அணிந்து திருப்திப்பெற்றேன்

வாழ்க்கையே கற்ப்பிக்கும் பாடமென்று
அதனைப்படித்து வாழக்கற்றேன்  

Sunday, September 16, 2012

காசேதான் கடவுளடா

நான் ஒழைச்சு சம்பாதிக்கிறேன். அந்த காசுல என் குடும்பம் நடக்கறது. எனக்கு தான் முதல் மரியாதை என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஆணவத்திற்கு இன்று சவால் விடுவதுப்போல் கல்லூரி படித்து முடித்த உடனேயே நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஒரு சவால்.

இதை ஒரு பத்திரிகையில் படிக்கும்பொழுது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பல ஆண்கள் தற்கொலைசெய்துக்கொள்கிறார்களாம்! தன் மகனோ மகளோ தன்னைவிட அதிகமாக சம்பாதித்து தன்னை அவமதிக்கிறார்கள் என்ற கவலைப்போல!

ஆனால் சிறு வயதிலேயே அந்த பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு கற்றுக்கொடுப்பது யார்? அன்பும் ஆதரவும் கொடுத்திருந்தால் இன்று யார் சம்பளம் யாரைவிட பெரிது என்ற கேள்வி எழுந்திருக்குமா? தன்னுடைய அடையாளமே அந்த வாங்கும் சம்பளமும் அடையும் கவுரவமும் தான் என்று நாம் நினப்பதைத்தானே அந்த குழந்தைகளும் கற்றுக்கொள்ளும்? அப்போ அவர்களுக்கு சரியான வழிகாண்பிப்பது நம் கடமை அல்லவா? பணம், சம்பாத்தியம் முக்கியம் என்றாலும் அதுவே வாழ்க்கை ஆகி விடுமா?