Wednesday, June 20, 2012

பறவைகளின் விளையாட்டு

பள்ளிகரணை ஏரியின் அருகில் நிற்க முடியாது! அவ்வளவு துர்நாற்றம்!

ஆனால் அதையும் மிஞ்சி ஒரு அதிசயமான காட்சி கண்ணை பறித்தது! சிறிய பறவைகளும் காக்கையும் காற்றுடன் விளையாடும் விளையாட்டு. அந்த வேகமாக அடிக்கும் காற்றில் இந்த பறவைகள் சிறகடிப்பதை நிறுத்தி காற்றில் பின்னால் தள்ளப்படுவதை மிக ரசித்தன. அதை பார்க்க பார்க்க, நாமும் அப்படி பறந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

அதே காட்சி, இந்த வாரம் மகாபலிப்புரத்திலும் கண்டேன். கடலோர கோவில் உச்சியில் காகங்கள் பறப்பதை நிறுத்தி காற்றால் பின்னால் தள்ளப்பட்டதை ரசித்துககொண்டிருந்தன.

நமக்கு மட்டும்தானா விளையாட்டுகள்! உண்ணுவதையும் பெறுவதையும் தவிர இந்த பறவைகளுக்கும் தான் வாழ்க்கையை ரசிக்க தெரியும் என்று அன்று நான் கண்டுகொண்டேன். 

Tuesday, June 12, 2012

முள்

பூவில் மட்டுமா?
நாவிலும் அல்லவா?
சுள்ளென்று தைத்ததெது?
உன் வாயிலிருந்து உதிரும்
ஆணியைப்போல சுளீரென
குத்தும் வார்த்தைகள் தானே?

நான் உன்னில் காணும்
அந்த முள்ளை
என்னிலும் காண்கிறாயா!
என்ன அதிசயம்!
என் தேனையும் விட
இனிய சொற்களில் விஷமா!

இருவரும் மனதில்
ஒருவரை ஒருவர்
தேளைப்போல கொட்ட
என்ன அற்புதமான
உறவிது! பூப்போல
மலரும் சிரிப்பில்
ஒளிந்திருக்கும் ஒரு முள்

Friday, June 1, 2012

மூடிய கதவு

ஹீனமாக 'காப்பாத்து'
என்றது அந்த குரல் 
அதை நெருங்கினாலோ
ஆபத்து தெரியவில்லை
விலக விலக அதே குரல்
நெருங்க நெருங்க 
மாயமாக மறைந்ததேன்! 

தட்டினாலோ யாரும் இல்லை
ஆனால் உதவியோ தேவை
நீட்டிய கையை தள்ளுவது யார்?
எனக்கா! என்று கேட்பது யார்?
எனக்கென்ன அபாயம்
என்று சீறுவது யார்?
நீயா இல்லை உன் அஹமா!