Friday, June 30, 2017

இறுதியில்

இந்நாள், இந்நொடி, இக்கணம்
இனிதே கிடைக்கும் நிஜ சுகம்
பத்து நிமிடம், பத்து நாள், பத்து வருடம்
யாருக்குத் தெரியும் என்ன நடக்கும்?

இப்பொழுதை வீணாக்கும் பாவம் மனம்
நாளையில் தேடும் பேரின்பம்
நேற்றைய நினைவுகளை இறுக்கமாக பிடிக்கும்
சோகமே வாழ்க்கை என்றுகூட நினைக்கும்

இந்த ஒரே நொடி வாழ உனக்கு
என்ன செய்வாய் நீ இதற்கு
எப்படி வாழ்ந்தாய் என்ற கணக்கு
இழுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் இருக்கு

வாழ்க்கை அநித்தியம் என்று அறிந்தும்
மனம் வீணாக சஞ்சரிக்கும்
இறுதியில் ஒரே முடிவு எல்லோர்க்கும்
அது ஒன்றே நினைவில் இருக்கட்டும்.


Tuesday, June 20, 2017

முதல் மழை

வறண்ட பூமியில் பிளவுகள்
நரம்புபோல் ஓடும் கோடுகள்
உறுப்புகளைபோல் மண் கட்டிகள்
காணவில்லை எங்கும் நீர்ப் புனல்

வெப்பத்தில் காய்ந்த பூமி
ஒரு துளி நீருக்காக ஏங்கி
வானத்தைப் பார்த்து கைகளை ஏந்தி
மழைபெய்வதற்காக வேண்டி

காற்று மெல்ல வீச
மேகங்கள் மெதுவாய்த் திரள
கதிரவன் சற்றே இணங்க
மனதில் நம்பிக்கை வளர

முதல் மழையில் பூமி நனைய
மரங்கள் அதன் வேகத்தால் பணிய
நீர்ப் புனலில் பிளவுகல் ஒளிய
பூத்தெழுந்ததே பூமி இனிய.

Saturday, June 10, 2017

குருவே நமஹ

அவர் வகுப்பில் நுழைந்தாலே எனக்கு குலை நடுக்கம் தான். அதுவரைக்கும் ஆடிக்கொண்டிருந்த வால் தானே சுருண்டு காணாமல் போய் விடும். அவர் என் பக்கம் பார்க்க மாட்டாரா என்ற ஏக்கம் ஒரு பக்கம், பார்க்கும் பொழுது கண்களில் தீ பொறி தட்டினால் - ஐயோ சாமி. இதற்கு பார்க்காமலேயே இருக்கலாம், என்று தோன்றும்!

தெரிந்த பாடங்கள் கூட மறந்து போகும். "ஏண்டா, ஒன்பதாம் வகுப்புல நான் உனக்கு பெருக்கக் கற்றுக்கொடுக்கணுமா?"  என்று எல்லோர் முன்னேயும் அவர் கேட்கும் பொழுது அவமானமாக இருக்கும். என்னுடைய ஒரு வடிகால், தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, கணக்கை சிரத்தையுடன் போடுவதுபோல நடித்து நான் வரையும் கேலிச்சித்திரங்கள்தான்.