Tuesday, January 31, 2012

நிம்மதி

சத்தம் சுற்றும் முற்றும்
பறக்கும் புழுதியும் தூசும்
வண்டிகளும் வெய்யிலும்
வெப்பமும் வேர்வையும்

இதையெல்லாம் தாண்டியும்
இதே வறண்ட பூமியிலும்
இருக்குமா இப்படி ஒரு இடம்
சொர்கத்தை மெச்சிடும்

நீர், பசுமை, பறவைகளும்
மிருதுவான குளிர்ந்த காற்றும்
நிசப்தம் நிறைந்து எங்கும்
மனதில் பரவும் நிம்மதியும்

Tuesday, January 24, 2012

மாற்றம்

சிங்கம் வேட்டையாடும்
மான்தான் ஒளிய வேண்டும்
பருந்து முயலை கவ்வ தான் செய்யும்!
முயல் தானே பதுங்க வேண்டும்!

பாம்பு தவளையை தின்னுமென்று தெரிஞ்ச
தவளை தன் வாயை மூட வேண்டும்
ஆண் மனது தத்தளிக்கும் என்று அறிந்த 
பெண் தானே அடக்கமாக இருக்க வேண்டும்!

ஆஹா! முன்னேறி விட்டோம்
என்று நினைக்கும் நாம் தான்
நம் நினைப்பை சுதாரித்துக்
கொள்ள வேண்டும்!

இங்கு இன்றும் காட்டு ராஜ்ஜியம்
வெளியில் மாறினாலும்
மனிதன் இன்னும் தன் 
மிருகத்தனத்தை மறக்க வில்லை 



Wednesday, January 18, 2012

1970யிலிருந்து இன்று வரை

 எமெர்ஜென்சி காலத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் நினைத்ததை சாதித்துக் கொள்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கேன். ஒரு புத்தகமும் இதை பற்றி சமீபத்தில் படித்தேன். அந்த காலத்தில், யாராவது அரசுக்கு எதிராக நடந்து கொண்டால், அவர்களை போலீஸ் காரர்களே விசாரணை என்று கொன்று விடுவார்களாம்.  நல்ல வேளை அந்த காலம் முடிந்து போயிற்று என்று நிம்மதியாக இருக்க முடியவுல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.


எங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் பைக் மீது இன்னொரு பைக் மோதிற்று. தொடர்ந்த வாக்குவாதத்தில் அந்த இன்னொருத்தர் இவரை வந்து நன்றாக அடித்திருக்கிறார். போலீஸ் புகார் கொடுக்க போகும் இடத்தில் அந்த ஆளும் வந்திருக்கிறான். அவனும் ஒரு போலீஸ்  கான்ஸ்டபள்    என்று அங்கு சென்ற உடன் தெரிய வந்தது. அந்த  கான்ஸ்டபலோ 'எனக்கு எதிரா புகார் செய்வாயா! என்ன செய்கிறேன் பார்' என்று மிரட்டியதால் இவர்கள் வந்து விட்டார்கள். ஆலோசனை கேட்டால் மற்றவர்களும் 'விட்டு விடு' என்று சொல்லி விட்டார்கள்.


இப்படி இருக்கு, என்ன செய்ய முடியும்? சாதாரண மனிதர்களுக்கு நீதி பெற என்ன வாய்ப்பு?


Sunday, January 15, 2012

Chasing Her Shadow - Literary Fiction Novel - love, unrequited, short

Chasing Her Shadow - Literary Fiction Novel -  on modern complexities of human relationships. My official debut novel, which my friends liked and encouraged me to write more. Only now woke up to the fact that I can share this on blog too...

Awaiting your feedback

வெய்யில் - நிழல்

இன்னிக்கு எதை நாம் கொண்டாடுகிறோம் என்று என் மகள் மூன்று முறை கேட்டு விட்டாள். அவளுக்கு அவளுடைய பள்ளியிலும் பொங்கலைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் வயல் என்பதையே எதோ காரில் துலைவு தூரம் போகும் பொழுது தான் கண்டிருக்கிறாள். அவளிடம் இதுதான் வயல், இங்கிருந்துதான் உணவு வருகிறது. சில நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. வயலில் யாருக்குமே வேலை செய்ய இஷ்டமில்லை என்றெல்லாம் நாம் சொன்னால் என்ன புரிய போகிறது?


சரி, புரியும் படி அந்த கதிரவனை வணங்கு என்று சொன்னால், அது மட்டும் போதுமா? அதை கண்டு பயந்து தானே நாம் இன்று அறைகளுக்குள்ளேயே பதுங்கி இருக்கிறோம்! யாரை கேள், வைட்டமின் டி பத்தவில்லை என்ற குறைபாடு கண்டு பிடித்திருக்கிறார்களாம். ஏன் இருக்காது! வெய்யிலில் சென்றால் தோல் கருத்துவிடும் என்று வெய்யிலே படாமல் நிழலிலேயே வாழ்வதின் விளைவுதானே இது! இவ்வளவு வெய்யில் இருக்கும் நம் நாட்டிலே வெய்யில் பற்றாகுறை வியாதி கேட்கும் பொழுது ஆச்சர்யமாக இருக்கிறது.

அறிவியலினால் நாம் பல விஷயங்களை சுலபமாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கூடவே அதின் தீங்குகளையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்கிறோம். நன்மை இருந்தால் தீமையும் கூடவே வரும் என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.

காலச்சக்கரத்தில் நாம் மீண்டும் இருளில் தள்ளப்படப்போகிறோம், அந்த நாளை நோக்கி மிகு வேகமாக நாம் போய்  கொண்டிருப்பது பீதியை கிளப்புகிறது. கொஞ்சம் நிதானம், கொஞ்சம் விவேகம்... தேவை இன்று நமக்கு.



Tuesday, January 10, 2012

தேடல்

வானை நோக்கி
எழும்பிய அலைகள்
பூமியை நோக்கி
பாயும் மழை


அக்கரையிலிருந்து
வரும் பறவைகள்
அக்கரைக்குப் போக
ஏங்கும்  மிருகங்கள்


அது கிடைக்காதா
என்று ஏங்கும் மனம்
கிடைத்தது வேண்டாம்
என்றும் புறக்கணிக்கும்


இந்த தேடலிலேயே
வாழ்க்கைச் சக்கரம்
சுழண்டு சுழண்டு
தன்னை ஓட்டும்


முன்னேற இதுதானா
ஒரே வழி?
எப்பொழுதுமே ஒரு
நீங்காத ஏக்கம்?

Wednesday, January 4, 2012

வசதி: சிறுகதை

குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பதே அவளுக்கு ஒரு பொழுதுபோக்கு. தன் வீட்டு மாடியில் இருந்து அவர்கள் பந்தாடுவதை மணிகணக்காக பார்க்க முடியும் அவளால். ஆனால் இன்னும் ஒரு மாதத்தில் இதெல்லாம் போய் விடுமே என்று மனம் வருந்தியது. புது வீடு கட்டியாயிற்று. இந்த இடத்தை விட இன்னும் வசதியான இடம். வீடும் பெரிது. பார்த்து பார்த்து, ஒவ்வொரு கல்லாக கட்டிய வீடு. அக்கம்பக்கத்தில் குழந்தைகள் இருப்பார்களா என்று தெரிய வில்லை. இருந்தாலும் இந்த மாதிரி வந்து விளையாடுவார்களா? இல்லை கம்ப்யூட்டர் கேம்ஸ், டிவி என்று வீட்டிலேயே அடைந்திருப்பார்களா?


ஒரு மாதம் கழித்து வீடு மாற்றியாகி விட்டது. பரீட்சை நேரம், அதனால் குழந்தைகள் இருப்பதும் இல்லாததும் தெரியவே இல்லை. ஆனால் சில நாட்களில் சத்தம் கிளம்ப ஆரம்பித்தது. பெண்கள் கயிறை வைத்து குதிப்பது... பசங்கள் பந்தை வைத்து விளையாடுவது.

வெளியில் ஓடி வந்து பார்த்தாள். சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள். அந்த பந்து வீட்டுச்சுவரை தாண்டி உள்ளே விழுந்தது. அவள் மனம் பக்கென்றது. அந்த ஜன்னல் கண்ணாடிக்கே எவ்வளவோ நூறு செலவாயிற்று!

"ஆன்டி," என்று ஒரு பையன் மேலே பார்த்தான்.

"எடுத்துக்கோ. ஆனா இனிமே இந்த பக்கம் அடிக்கக்கூடாது, சரியா?" என்று எச்சரித்தாள்.

"ஓகே" என்று அந்த பையன் உள்ளே வந்தான். ஐயோ! அவள் ஆசையாக வைத்த செடிகள் மீதெல்லாம் நடந்து நாஸ்தி செய்ய போகிறான்! ஓடி கீழே வந்தாள். "நானே எடுத்து தரேன்" என்று அவனை வாசலிலேயே நிறுத்தினாள்.

இரண்டு நாள் இதே மாதிரி ஆயிற்று. அவர்களுடைய கார் வேற சில நேரங்களில் வாச பக்கத்தில் நிற்கும்.

"இந்த பக்கம் விளையாடாத. அந்த பக்கம் போ," என்று விரட்டிநாள்.  "உங்க வீட்டு பக்கம் போங்க. ஏன் இங்க வெளயாடறீங்க!" என்று கோபித்துக்கொண்டாள். பார்த்து பார்த்து கட்டின வீடு. விலை உயர்ந்த கார்!  இதற்க்கெல்லாம் இந்த குழந்தைகள் சேதம் செய்தால் யார் ஈடு கட்டுவது! பொருப்பே  இல்லாத பெற்றவர்கள். வீட்டிலேயே எதையாவது விளையாட வைக்க வேண்டியது தானே! என்று புலம்பத் தொடங்கினாள்.