Sunday, October 8, 2017

அன்பின் பல முகங்கள்

"உங்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது," என்று சுகுணா மறுபடியும் லதாவிடம் கூறினாள்.

அவர்கள் சந்தித்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது, ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அடிக்கடி சந்திக்க வேண்டி இருந்தது. பழக்கம் அதிகரிக்க சுகுணாக்கு லதாவின் வேகம், விவேகம், திறமை, எல்லாமே ஆச்சர்யத்தை அளித்தன.

வேலைக்கு போய் கொண்டிருந்த லதா, தன் மாமனாருக்கு உடல் நலம்  சரியாக இல்லாத போது, வேலையை விட்டு அவரைப் பார்த்துக் கொண்டாள். அந்த சில மாதங்களில் அவள் நகை செய்யக் கற்றுக்கொண்டாள். தெரிந்தவர்கள் மூலம் விற்பனை செய்ய, அவளுடைய பொருள்கள் பிரசித்தி பெற்று, இப்பொழுது தெரியாதவர்கள் கூட அவளிடம் வாங்க வந்தார்கள்.

ஒரு சிறிய கடை ஆரம்பித்து, இரு பெண்களை அமர்த்தி, இப்பொழுது அவளுடைய கடை ஓகோ என்று ஓடியது. மாமனாரிடமும் நல்ல பெயர். வேலை அனுபவத்தினால்  நிர்வாகமும் நன்றாகச் செய்தாள். சுயமாகக் தொழில் செய்வதினால் அவளுடைய தன்னம்பிக்கையும் மெச்சிக்கொள்ளும் படி இருந்தது. அவளுடைய குழந்தைகளும் பொறுப்பாக, தாய்க்கு பெருமை சேர்ப்பவர்களாக, சுதந்திரமாக வளர்ந்தார்கள். கணவன் எல்லாவற்றிற்கும் பக்க பலமாக இருந்தான்.

லதா தானே எல்லாம் செய்வதையம், அவள் குடும்பம் அவளுக்கு ஆதரவாக இருப்பதையும் கண்டு சுகுணா மாய்ந்து போனாள்.  அவளும் நன்றாகப் படித்தவள் தான். ஆனால் படித்து  முடித்த உடனேயே திருமணம், பின்னோடு குழந்தைகள், அவர்களின் பராமரிப்பு... தனியாக எங்கேயும் செல்லவோ, எதையும்  செய்யவோ வேண்டிய அவசியமே எழவில்லை. எல்லாவற்றிற்கும் கணவன் வரதன் துணையாக இருந்தான். போராததற்கு வேலை ஆட்கள் வேறு.

லதா எப்பவும் போல் புன்னகையுடன், "நீ படித்தவள்... உன் திறமையை நன்றாக உபயோகிக்கலாம்," என்று ஊக்குவிட்டாள்.

"அவரும் அதையேத் தான் கூறுகிறார். என்ன வேண்டுமோ எடுத்துச் செய் என்று. குழந்தைகளும் வளர்ந்துவிட்டார்கள். சில நேரங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை நச்சு செய்கிறேன்," என்று அவளே சிரித்துக் கொண்டாள்.

"நீங்கள் கணக்கு வழக்கு பார்ப்பேள் என்றால் எனக்கே ஒத்தாசையாக இருக்கலாமே," என்று லதாவும் எப்பவும் போல் கூறினாள்.

"ஆமாம், இல்லை? நீங்களும் என்னிடம் இதை கூறியிருக்கிறீர்கள். எனக்கு தான் தயக்கம். இன்றைக்கே அவரைக் கேட்கிறேன்."

அன்று மாலை, இரவு உணவு உண்ணும் பொழுது, தான் லதாவை சந்தித்ததைப் பற்றிக் கூறினாள். "கெட்டிக்காரி," என்று வரதன் லதாவைப் புகழ்ந்தான். "கொஞ்சமாவது அவளை போல ஆக வேண்டும் என்று என்றைக்காவது நினைத்திருக்கிறாயா?" என்று மனைவியையும் விளையாட்டாக இடித்துப் பேசினான்.

"அதையேத்தான் சொல்ல வந்தேன். அவள் கடையிலேயே கணக்கு பார்க்க கூப்பிடுகிறாள்."

"நீயா! உனக்கு என்ன அனுபவம் இருக்கிறது? நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் அவளுடைய கடையையும் இழுத்து மூடிடுவாய்!" என்றான் அவன்.

முகம் சுளித்தாள் சுகுணா. "உங்களுக்கு என் மீது நம்பிக்கையே இல்லை."

"அப்படி இல்லைடா, கண்ணா," என்று வரதன் உடனே தன் தொனியை மாற்றிக்கொண்டான். "நீதான் குழந்தைகளை இவ்வளவு நன்றாக வளர்த்தாய், வீட்டை நன்றாகக் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நமக்கு வேற என்ன வேண்டும்? வேலைக்கு போனால்தான் திறமையா?"

சுகுணாக்கு பெருமையாக இருந்தது. "ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள்."

"நீ குழந்தைத் தனமாகப் பேசுகிறாய். இனிமேல்தான் அவர்களுக்கு நீ தேவை... எதுவாக இருந்தாலும் நீ தானே பார்த்துக்கொள்ள வேண்டும்!"

ஆமாம் என்பது போல் தலையாட்டினாலும் மனதில் சந்தேகம் தொக்கி நின்றது. "இன்னும் அவர்களுடைய கல்யாணம், காட்சின்னு பார்க்க வேண்டும். எத்தனை பொறுப்புகள் உன் மீது. நான் சம்பாதிக்கிறேன், நீ பராமரிக்கிறாய்... எவ்வளவு பெரிய விஷயம் அது," என்று அவளை சமாதானப் படுத்தினான் வரதன்.

அதற்கு பிறகு அவள் லதாவை வேலையைப் பற்றி கேட்கவில்லை, அவளுடன் பழகுவதும் குறைத்துவிட்டாள். ஒரு வித சங்கோசம் என்றும் சொல்லலாம்.

லதாவும் அதை பற்றி கவலைப்படாமல் தன் வேலையில் மும்முரமாக இருந்தாள். பெண்கள் அவளிடம் கேட்டு பிறகு எங்கே சென்றார்கள் என்றே தெரியாமல் அவள் வாழ்க்கையிலிருந்து விலகுவது பழகிவிட்டது.

ஆசை நிராசை