Saturday, February 25, 2017

இக்கரைக்கு அக்கரை - II

ருக்கு மனதில் அலைப்பாய்ந்தது . அவன் காதலித்தவளைத் திருமணம் செய்துக் கொள்ள முடியாததற்காக வருந்துவதா, தன்னிடம் மறைத்ததற்காக கோபப்படுவதா, இல்லை தன்னை ஏமாற்றிவிடுவானோ என்று பயப்படுவதா?
பதினோரு வருடங்கள் பட்டாபியுடன் குடும்பம் நடத்தின அவளிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை அவன் மறைத்திருக்கிறான். தனக்கு அதைப்பற்றி சந்தேகம் கூட எழவில்லையே?


உணர்ச்சிகளின் தாக்குதலில் உடல் நடுங்குவதை உணர்ந்தாள். அவன் அவள் பக்கம் திரும்பவே, துடிக்கும் சப்த நாடிகளையும் அடக்க முயன்றாள்.

அவள் முகத்தைப் பார்க்கவே பட்டாபிக்கு பயமாக இருந்தது. தப்பு பண்ணிட்டோமோ என்ற குற்ற உணர்வு குறுகுறுத்தது. என்றுமில்லாமல் இன்று ஏன் அவளிடம் விஷாகாவைத் தான் காதலித்த விஷயத்தை சொன்னோம். சே... ஒன்று, முன்கூட்டியே அதைக் கூறி, விஷாகாவை சந்திக்க விருப்பமா என்று கேட்டிருக்க வேண்டும். இல்லை சந்தித்தப் பின், தேவைப்பட்டிருந்தால், அதைச் சொல்லியிருக்கலாம். தன்னையும் அறியாமல், இதை இன்று ஒப்பிக்கப் போகிறோம் என்று எதிர்பார்க்காமல் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொன்னதன் விளைவு அவள் முகம் இப்படி வாடியிருந்தது.

"காபி ஏதாவது குடிக்கிறயா," என்று கேட்டான்... அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றியது, ஆனால் என்ன என்று தான் புரியவில்லை. அவள் இல்லை என்று தலை ஆட்டினாள்.

கதவைத்திறந்து காபி ஷாப்பில் நுழைந்த விஷாகாவின் கண்கள் முதலில் பட்டாபி மீது தான் பட்டது. அப்படியே உறைந்து விட்டாள். இத்தனை வருடங்கள் பிறகும், இன்றும் அவனைப்பார்த்த உடன் அவள் மனம் படபடக்கும் விந்தையை கவனித்தாள். ஐயோ, தவறு செய்து விட்டோமோ! என்று வருந்தினாள். அவன் மீது தனக்கு இருந்த உணர்கவுகளுக்கு ஒரு முடிவு கட்டத்தான் அவர்களை அழைத்திருந்தாள். அவன் நினைவுகள் இன்றும் அவள் நெஞ்சில் பசுமையாக இருப்பதை, அவனைப் பார்த்தால் மாறிவிடும் என்று எண்ணினாள். ஆனால் அவனோ... இன்னும் அன்றைப்போலவே இருக்கிறானே!

வேண்டாம் என்று தலையசைத்த ருக்கு, அவன் கண்கள் வியப்பில் அகல்வதைப்பார்த்து அது தனக்கில்லை என்று அறிந்து, ஒரு வித படபடப்புடன் பின்னாடித் திரும்பிப் பார்த்தாள்.

சினிமா நடிகைப்போல் ஒரு பெண் நிற்பதைக்கண்டு தயங்கினாள்.

"ஏய் பட்டாபி," என்று அவனை ஒரு எட்டில் வந்து உரிமையுடன் கட்டிக்கொண்டாள் விஷாகா. பட்டாபிக்கு சங்கடமாக இருந்தது, ஆனால் மறுக்கவும் முடியாமல்,ஏற்கவும் முடியாமல், அரைகுறையாக அவளைத் தழுவினான். ருக்குக்கு உடல் கூசியது.

"என் மனைவி, ருக்மிணி," என்று விஷாகாவிடமிருந்து விலகி ருக்குவை அறிமுகப்படுத்தினான். ஒரு புன்முறுவலை வரவழைத்துக்கொண்டாள் ருக்கு. விஷாகா அன்புடன் அவள் தோள் மீது கைப் போட்டாள்.

ருக்கு நெளிவத்தைப் பார்த்து, "டெல்லிக்காரியாக மாறி விட்டாயே," என்று விஷாகாவை நையாண்டிச் செய்தான் பட்டாபி.

"நியூ யார்க்ல வசித்து வந்த உன்ன பாக்கறச்சே, பழைய விஷுவா சந்திக்க முடியுமா?" என்று அவளும் குறும்பாக பதிலளித்தாள்.

பழையக்கதைகளை விஷாகா தொடுத்துவிக்க, பட்டாபியும் சேர்ந்து தன் நினைவுகளால் உயிர் கொடுக்க, ருக்கு மௌனமாக அவர்களைப் பார்த்து உட்கார்ந்தாள்.

"சாரி! போர் அடிச்சிருக்குமே!" விஷாகா ருக்குவிடம் திரும்பி மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். ருக்குவுடன் சில நேரம் பேச்சுக்கொடுத்தாள்.

கண்களில் ஜொலிப்பு,  பேச்சில் தன்னம்பிக்கை, சிரிப்பில் அலட்சியம்... விஷாகாவைப் பார்க்கப் பார்க்க ருக்குவுக்கு வியப்பு அதிகரித்தது. நேரம் போவதே தெரியவில்லை. "சுமிக்கு ஸ்கூல் இருக்கு நாளைக்கு," என்று மெதுவாக பட்டாபியை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தாள். "நீங்கள் வேண்டுமென்றால் பேசிக்கொண்டிருங்கள், நான் ஆட்டோ பிடித்து திரும்புகிறேன்," என்று கூறினாள்.

"நீ கொடுத்து வெச்சவன். இப்படி அமைதியான மனைவி கிடைத்திருக்கிறாள். உனக்கு அப்படித்தானே பிடிக்கும்," என்று விஷாகா பட்டாபி தோளை தட்டிக்கொடுத்தாள். ருக்கு பதிலுக்கு சிரித்தாளே தவிர, ஒரு வித வலியும் தெரிந்தது.


"ஏய், டெல்லிக்கு ஒரு பிளான் போடு... என்கூடத்தான் வந்து இருக்கணும். நல்ல பெரிய வீடு, பார்த்துக்க ஆட்கள் இருக்காங்க," என்று  விஷாகா அழைத்தாள்.

"அங்க கோவிலிருக்கா? அவர் அம்மாக்கு அதுதான் பிடிக்கும்," என்று தன்னையும் மிஞ்சி குத்திக்காட்டினாள் ருக்கு. மனதில் அடைத்து வைத்திருந்த ஏமாற்றம் இப்படி அசந்தர்பமாக வெளியே வந்ததற்கு வருத்தப்பட்டாள். "நான் வெளியே நிக்கறேன்," என்று சொல்லி கிளம்பியவளிடம், "இரு நானும் வந்துட்டேன்," என்று விஷாகாவிடம் விடைபெற்றுக் கொண்டு ருக்குவைத் தொடர்ந்தான்.

அவர்களுக்கு விடை கொடுத்து அறைக்கு திரும்பிய விஷாகா கண்களில் நீர் ததும்பியது. மனதுக்கு பிடித்த துணையில்லாமல் தனிமை வாட்டும். நேரத்தை எப்படி போக்குகிறது என்று புரியாமல், வேலையில் மூழ்குவாள். சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். ஊர் ஊரகச் சுற்றுவாள். பல நண்பர்கள். ஆனால் தனக்கென்று யாருமில்லை. இந்த பாழாப்போன உத்யோகத்திற்காக தங்கமான பட்டாபியை துலைத்தோமே என்று மனதில் எழும்பிய  ஏக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள்.

ருக்கு கார்  ஜன்னலிலிருந்து வானத்தை வெறிச்சென்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கே பட்டாபிக்கு எதிரில் அழுது விடுவோமோ என்று பயந்தாள்.

"என்ன யோசிக்கிறாய்?" என்று அவன் அக்கறையுடன் கேட்டான். அது அவளை ஒரு நிமிடம் தடுமாறச்செய்தது. "என்ன யோசிக்கிறாய்?" என்பது ஒரு சாதாரணக் கேள்வி, ஆனால் அவளுக்கு இது புதுமை. அவன் கேட்பது புதுமை. அவள்  என்ன யோசிக்கறாள், அவள் எண்ணங்கள் என்ன... கடைசியாக என்று அவளிடம் இதைக் கேட்டான் என்று அவளுக்கு நினைவில்லை.

அவனை மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். "விஷாகாவைப்பற்றி... பறவை போல் பறக்கிறாள், எந்தத் தடையுமின்றி... கூண்டு எவ்வளவு அழகா இருந்தாலும் அதுல மயங்கி, அடைப்படாம இருக்கணும்..."

அவன் முகம் மாறியது. "எத கூண்டுன்னு சொல்ற?" என்று சற்று கடுமையுடன் கேட்டான்.

அவள் அதற்கு நேரடியாக பதில் சொல்லவில்லை. சற்று பொறுத்து, பின், "உங்களை நான் இவ்வளவு மனம் விட்டு சிரித்துப் பார்த்ததே இல்லை," என்றாள்.

அவன் கண்கள் சாலையை விட்டு நகரவில்லை. முகம் கடுமையாக இருந்தது. கோபப்பட்டு கத்தும் வழக்கம் அவனுக்கு கிடையாது. நச்சுன்னு ஆணியில் அடித்தார் போல் ஒரு வார்த்தை வரும். அதுகூட இல்லாதது வேதனைப்படுத்தியது. அந்த உரிமையாவது எடுத்துக்கொண்டவன், இன்று அதைக்கூட எடுக்காதது மனதில் ஒரு நடுக்கத்தை உண்டாக்கியது.

அவள் தாய் வீடு வந்ததும் மௌனமாக பிரிந்தனர். தன் தாய்க்கும் மகளுக்கும் தெரியாமல் தலையணையில் முகத்தைப்பதுக்கி அதை நனைத்தாள். இனியும் சேர்ந்து எப்படி வாழப்போகிறோம் என்ற நினைப்பு வேற நெஞ்சைத் தைத்தது.

மூன்று நாள் பிறகு வீடு திரும்பும் ருக்மிணிக்கு ஒரு சின்ன அதிர்ச்சி காத்திருந்தது.

"இனிமே நீ உங்கம்மா வீட்டுக்கு போக வேண்டாம், ருக்கு. நாம் எப்படியோ சமாளித்துக்கொள்ளலாம்," என்று பட்டாபி சொன்னது முதல் அதிர்ச்சி. "அப்பறம், சுமிக்கு ஏதோ ப்ரோக்ராம் இருக்கு, பணம் கேட்டாங்கன்னு சொன்ன இல்ல? அதை ஞாபகமா கட்டிடு."

பையை அலமாரியில் வைத்தவள் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். அவன் சங்கோஜத்தில் முகம் திருப்பி, "ம்ம்ம், உனக்கு மறுபடியும் வேலைக்கு போக வேண்டும் என்றால் போயேன்... சுமிதான் பெரியவள் ஆகி விட்டாளே... அவள் வரும் பொழுது நீயும் திரும்பிவிடுவாய் அல்லவா?"

சந்தோசத்தில் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்ய கிளம்பியவளிடம், "நானும் கூட வரட்டுமா," என்று பட்டாபி கேட்கும் பொழுதுதான் தலைச் சுற்றி விழுந்துவிடுவோமோ என்று பயந்தாள். விஷாகாவிற்கு மனமார்ந்த நன்றி கூறினாள்.

அவன் அடியோடு மாறிவிட்டான் என்று சொன்னால் அது நடக்கிற விஷயமில்லை. ஆனால், "நீ என்ன நினைக்கிறாய்?" என்ற கேள்வி அவ்வப்போது அவளிடம் கேட்க ஆரம்பித்ததே அவளுக்கு பசுமை திரும்பியது போல் இருந்தது.

தன்னில் மாற்றங்கள் காண ஆரம்பித்தாள். கண்களில் ஜொலிப்பு,  பேச்சில் தன்னம்பிக்கை, சிரிப்பில்... குறும்பு...

சில நேரங்களில் பட்டாபி ருக்குவைப் பார்க்கும் போது கண்களில் வியப்பு எட்டிப் பார்க்கும். ருக்குவுக்கு பத்து வயது குறைந்த மாதிரி தோன்றும்...

முதல் பாகம் படிக்க 

No comments:

Post a Comment