Friday, October 10, 2014

கேள்வி எழும் நேரம்

"ஏன் இவ்வளவு கம்மி மார்க் வாங்கிருக்கே?" லக்ஷ்மி கோவமாக தன் மகளைக் கேட்டாள்.

சுவாதி வாயை இறுக மூடிக்கொண்டு நின்றாள்.

"என்ன கொழக்கட்டையா முழுங்கிருக்க? கேக்கறேனில்ல?"

அப்பவும் சுவாதி பதில் சொல்லாமல் இருக்க லக்ஷ்மி இன்னும் கோபமாகக் கேட்டாள், "மாசத்துக்கு அவ்வளவு காசு கொடுத்து ட்யுஷன் அனுப்பறேனே? வாங்கற பாதி சம்பளம் அதுக்குத்தான் போறது, தெரியுமில்ல? ஒன்ன கூட்டிட்டு பொய் வர ஒரு கார், ஒரு டிரைவர் வேற! மாசத்துக்கு இருபதாயிரமாவது உன் படிப்புக்கே போறது. அது தவிர ஸ்கூல் பீஸ் வேற. கணக்கு போட்டுப்பார்!"

"நானா கேட்டேன்?" என்று வடுக்கென்று சுவாதி கேட்டாள். பளார் என்று கன்னத்தில் அறை விழுந்தது. "என்ன திமிரொனக்கு!"

கன்னத்தில் கை வைத்துக்கொண்டே, கண்ணில் பொங்கிய நீரை அடக்கிய சுவாதி எதிர்த்துப் பேசினாள், "எனக்கு நீயே வீட்ல சொல்லிக்கொடு, நான் படிக்கறேன்னு நான்தான் திருப்பி திருப்பி சொல்றேனே!"

அந்து 13-வயதுப் பெண் குரலில் தன் தாயுடன் சிறிது நேரமாவது கழிக்க வேண்டும் என்ற ஏக்கம் அந்த கோவத்தில் குமுறும் ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பொறுப்புகளில் அமுங்கி இருக்கும் லக்ஷ்மிக்கு கேட்டால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த சண்டை இப்படியே நீடிக்க, பக்கத்துக்கு அறையில் துணிகளை மடித்துக்கொண்டிருந்த பாக்கியம் கண்களில் நீர் ததும்பியது.

"நீ மட்டும் படிச்ச்சிருந்தன்னா எனக்கு ஒத்தாசையா இருந்திருக்கும் இல்லையாம்மா?" என்று ஊரில் இருந்த மகள் வித்யா இன்று பகல் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. அவளும் சுமாராகத் தான் மார்க்ஸ் வாங்கி இருந்தாள்.

"படிச்சிருந்தாலும் இப்படி வேற ஊருல இருந்தா என்ன பலன்?" என்று பாக்கியம் அலுத்துக்கொண்டாள்.

"படிச்சிருந்தா நம்ம ஒரே எடத்துல இருந்திருக்கலாம். உன்னால என்னையும் சென்னை கூட்டிட்டு போயிருக்க முடியுமே!" என்று வித்யா கூரியப்பொழுது பெருமையாக இருந்தது.

ஆனால் தான் வேலை செய்யும்  இடத்தில் நடக்கும் கூத்தைப்பார்த்தால் சந்தேகம் எழுந்தது. படித்திருந்தால் தன் மகளுக்கு ஒத்தாசையாக இருந்திருப்போமா அல்ல தன் வேலையில்  மூழ்கி இருந்திருப்போமா என்ற கேள்வி மனதை உளைத்தது. அருகில் இருந்தும் இல்லாத தாய்மார்கள் போல் ஆகி விட்டிருப்போமா என்று தன்னையே  ஆராய்ந்தாள்.

படிப்புடன், வேலையில் பொறுப்புகளுடன், பணம் சம்பாதிக்கும் ஆவலுடன், தன் குடும்பத்தை பராமரிக்கவும் தன் மகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மறுநாளே லீவெடுத்துக்கொண்டு அவளைத் தேற்றி விட்டு, படிக்க ஊக்கம் கொடுத்து கிளம்பி விட்டாள் பாக்கியம்.