Sunday, February 22, 2015

திறனோ திறன்

"ம், ஸ்ருதி நன்னா பிடி," குரு அதட்டினார். கற்பகம் முயற்சி செய்தாள். பிருந்தா செய்வது போல பாவனை செய்தாள். "பலே" என்று குரு சொல்லும் பொழுது தனக்கும் சேர்த்துதான் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டாள்.

"போட்டில கலந்துக்க போற. மனசுல அந்த தெய்வத்தை நெனச்சிண்டு பாடு. பரிச நெனச்சிண்டு இல்ல," குரு மேலும் கற்பகத்திற்கு உபதேசித்தார். "வெற்றி உனக்கே," என்றும் ஆசிர்வதித்தார்.

கற்பகம் வழி முழுக்க தான் கற்றுக்கொண்ட பாடத்தையே மனுதிலேயும், மெதுவாகவும் பாடிப்பார்த்துக்கொண்டாள். பிருந்தாவோ மனதில் பொறுமிக்கொண்டே வந்தாள். வெற்றி உனக்கே என்று அவர் கற்பகமிடம் மட்டுமே சொன்னார் என்பதை அவளால் மறுக்க முடியவில்லை.

"ஏண்டி முகம் வாடிற்கு?" என்று பிருந்தாவின் அம்மா உருகினாள்.

"நான் நன்னா பாடலையா மா?" என்று பிருந்தா கண்ணில் நீருடன் கேட்டாள்.

"யாருடா அப்படி சொன்னா?" என்று அம்மா பொங்கி எழுந்தாள். நடந்ததை சொன்னாள் பிருந்தா. "கவலைப்படாதே," என்று தேத்திய அம்மா உடனே ஒரு பெரிய வங்கியில் நிர்வாகியாக இருக்கும் தன் கணவருக்கு போன் செய்தாள். "குழந்த மனசு ஒடஞ்சி இருக்கா. ஏதாவது செய்யக் கூடாதா?" என்று அவரையும் கிளப்பி விட்டாள்.

போட்டியை ஏற்பாடு செய்பவர்களுக்கு அடித்தது  யோகம். திடீரென்று ஒரு பெரிய வங்கி அவர்களுடைய நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய தொகை கொடுப்பதாக முன் வந்தது. என்ன, அவர்கள் சொல்லும் போட்டியாளருக்குத்தான் முதல் பரிசு கொடுக்கணமாம். யோசிப்பதற்கு என்ன இருந்தது? சரி என்று பணத்தையும் வாங்கி பெயரையும் குறித்துக்கொண்டார்கள்.

"நீ நன்னா பாடு. பரிசு உனக்குத்தான்," என்று அம்மா ஆசுவாசப் படுத்தினாள்.

போட்டி முடிந்தது. "ஆறுதல் பரிசு ஒன்று - மீனாக்ஷி," என்று அறிவித்தது ஆச்சர்யத்தில் மூழ்கினர் பார்ப்பவர்கள். முதல் பரிசோ, இரண்டாவது பரிசோ என்று எதிர்பார்த்தப்பெண்ணிற்கு ஆறுதல் பரிசா?

"இரண்டாவது - குமரேஷ்."

மௌனம் நிலவியது. நிச்சயமாக மூன்றாவது இடத்தை பிடிப்பான் என்று நம்பினார்களே!

ஏற்பாடு செய்தவர்களும் இந்த மௌனத்தை பார்த்தார்கள். சற்றென்று "மூன்றாவது பரிசு, பிருந்தா, இரண்டாவது, ஸ்ரீசரண், முதல் பரிசு, கற்பகம்," என்று சொல்லி முடித்தார்கள். அந்த சபையே கை தட்டி உர்ச்சாகப்பட்டதைப் பார்த்து பெரிய நிம்மதி மூச்சு விட்டார்கள்.

"என்ன இது?" என்று பிருந்தா அப்பா சினம் கொண்டதை பார்த்து, அவசரமாக சமாதானப்படுத்தினார்கள். "திறமைக்கு பரிசு குடுக்கலைன்னா இந்த நிகழ்ச்சிய மதிச்சு யாரும் வர மாட்டாங்க. அப்புறம் இந்த பணத்தை வெச்சு நான் என்ன செய்யறது?" என்று புரிய வைத்தான். இன்னும் மெல்லிய குரலில், தயங்கி சொன்னான், "கொஞ்சம் நன்னா பயிற்சி எடுத்துண்டு, சாதனை பண்ணி போட்டில கலந்துக்க சொல்லுங்க. இந்த பணம் வாங்காமலேயே பரிசு கொடுக்கிறோம்."

முகத்தில் பளார் என்று அறைந்தார்போல் இருந்தது, பிருந்தாவின் பெற்றோர்களுக்கு.