Saturday, July 26, 2014

சிதறியப் பூக்கள் - பாகம் 3

"ஹாய் காவ்யா! என்ன, ஜாக்பாட் அடிச்சிருக்க போல இருக்கு?" என்று நயனா கேட்டாள். அவள் மகள் கீர்தி அதிதியின் வகுப்பில் படித்தாள். என்ன என்பதுபோல காவ்யா பார்த்தாள். "ஐ, ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கற பார்த்தயா? நீங்கெல்லாம் அமெரிக்கா லீவ்ல போறதா அதிதி சொன்னா?"

காவ்யா முழித்தாள். "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே..." கேதார் ஏதாவது உளறினானோ அதிதியிடம் என்று யோசித்தாள். "என்னடா, அமெரிக்கா போகப்போறதா சொன்னயாமே?" என்று தன் மகளை அன்றிரவு மெதுவாகக் கேட்டாள் அவள்.

"சும்மா தமாஷுக்கு" என்று அதிதி சொன்னதும் நிம்மதியாயிற்று.

ஆனால் இந்த சின்னப் பொய்கள் துளிர் விட்டு பெரிய மரமாகுவதை அவள் முதலில் கவனிக்கவில்லை. சிறிய பெரிய புகார்கள் வர ஆரம்பித்தன. வீட்டில் சண்டைகள் அதிகரித்தன. இப்பொழுது அதிதிக்கு 10 வயது. விவரம் புரிய ஆரம்பிக்கும் வயது. பொய்களின் மாளிகையோ அவள் வயதிற்கு மீறியவையாக வளரவே காவ்யா திக்குமுக்காடினாள். படிப்பிலோ சறுக்கு மரம் போல விளையாடினாள். ஒரு முறை மதிப்பெண் ஏறினாள், மறுமுறை அதள பாதாளம் தான்! படிக்க வைப்பதைவிட இமாலய மலை ஏறி விடலாம்.

அப்படி மோசமாக ஏதாவது நடக்கும் நேரத்தில் கேதார் பேசினால் அன்று முழுவதும் ஏதோ ஒரு சச்சரவு, சொல்ல முடியாத கோபம். சின்னச்சின்ன விஷயங்களிற்கு அழுகை, எரிந்து விழுதல், கூச்சல், சண்டை.

 விசாரிக்கக் கூட பயந்தாள். அதிதியை விட்டு  கேதார் தாராவிடம் பேச ஆரம்பிக்கும் பொழுது விஷயத்தை ஊகித்துக்கொண்டாள் காவ்யா.

அப்பவும் பெரிய மகளிடம் பேசத் தயங்கினாள். எப்படி விபரீதமாக போகமோ என்று பயந்தாள்.

ஆசிரியர்கள் அழைத்துப் பேசினார்கள். "கிளாஸ்ல கவனிக்க மாட்டேங்கறா, மத்தப்பசங்களையும் தொந்தரவு பண்ணறா."

"இந்த மாதிரி மக்கு நம்ப குடும்பத்துல இருந்ததே இல்ல. அந்த தறுதலையன் கொடுத்த சொத்து," என்று தந்தையும் சேர்ந்து தன் மகளைத் திட்டும் பொழுது உடைந்து போனாள் காவ்யா.

வேறு வழி இன்றி மகளை இது அது என்று ஏதோ விஷயங்களைத்தொட்டு என்ன பிரச்னை என்று தயங்கித்தயங்கி பேச்சைத்தொடங்கினாள்.

"அப்பா ராணி ஆண்டிய அம்மான்னு கூப்ட சொல்றாங்க. நான் மாட்டேன்னு சொன்னதுனால என்கூட பேச மாட்டேன்னு சொன்னார்," அதிதி சொல்லி முடிப்பதற்குள் தாரா அங்கு வந்தாள்.

"அம்மா, ராணி ஆன்டிய அம்மான்னு சொன்னா அப்பா என்ன அமெரிக்கா கூட்டிட்டு போறேன்னு சொன்னார். நான் சும்மா வெளையாட்டுக்கு சொல்லிட்டேன் அப்பாவும் என்ன கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டார்," என்று சந்தோஷத்தில் பூரித்துவரும் தாராவை அணைத்துக்கொள்வதா  இல்லை மடியில் சாய்ந்து விக்கி விக்கி அழும்  அதிதியை சமாதானப்படுத்துவதா என்று காவ்யாவிற்கு புரியவில்லை.

பாகம் 1
பாகம் 2





Saturday, July 19, 2014

சிதறிய பூக்கள் - சிறுகதை - பாகம் 2


காவ்யா குழந்தைகளை தன் தந்தை வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்தாள். கேதாருக்கு அன்று மாலை தொலைபேசியில் தகவல் சொன்னாள்.

"என்ன? உன் தந்தை வீட்டிற்கா? அதான் உறவு இல்லைன்னு முருக்கிகிட்டார் இல்ல? இப்போ என்ன கரிசனம்?"

"நீங்க ராணியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரப்ப நான் எங்க போவேன்?" என்று அவள் சுட்டிக்காட்டினாள்.

"இங்கேயே பக்கத்துல எங்கையாவது வீடு பாத்துக்க. எனக்கு குழந்தைகள வாரத்துல ஒரு நாள் பார்க்கறத்துக்கு அனுமதி உண்டு. அத நான் உன் அப்பன் வீட்டில வந்து பார்க்க மாட்டேன்."

காவ்யா ச்தம்பித்துவிட்டாள். "நான் கூட்டிட்டு வரேன்."

கேதார் முதலில் மௌனமாக இருந்தான். "உங்கப்பனையே செலவுகளையும் பார்த்துக்க சொல்லு," என்று கூறி தொடர்பை துண்டித்தான்.

காவ்யா பிரமித்துப்போனாள். அவள் விவாகரத்திற்கு பிறகு எங்கே வாழ வேண்டும் என்ற சுதந்திரம் கூட போய் விட்டதா? தன் தந்தைக்கு உடனே விஷயத்தைச் சொன்னாள்.

அவர் கோபம் இன்னும் பயத்தைக் கொடுத்தது. "என்ன! அவன் இதை சாக்காக  காட்டி தப்பிக்க பார்க்கிறான்! நீ வா. அப்படி ஏதாவது பிரச்சன பண்ணினான்னா கோர்ட்ல பாத்துக்கலாம்."

தன் தந்தை சொன்ன வார்த்தைகள் ஆறுதலை கொடுத்தாலும், கேதார் ஏதோ திட்டத்தோடு செயல் படுவது புரிந்தது காவ்யாவிற்கு.  அவன்  ஏன் மாறிவிட்டான்?  இல்லை, அவன் எப்பவுமே இப்படித்தான். ஆனால் விட்டுக்கொடுத்து பழகிவிட்டதால் அது பெரிய விஷயமாக அப்பொழுது தெரியவில்லை. இப்பவும் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பி வாழ்க்கையை தொடர்ந்தாள்.

அவன் மிரட்டினாற்போல் பள்ளிக்கூடத்தில் பணம் கட்ட மறுத்தப்பொழுது அவள் தந்தை வானம் பூமி ஒன்றாக்கி, நீதிமன்றம் மூலம் அவனை மடக்கினார். இது எப்படி பாதிக்குமோ என்று நினைத்த காவ்யாவிற்கு பதில் மறுநாளே கிடைத்தது. "அதிதி இடம் போன குடு," என்று அந்த எட்டு வயது குழந்தையை தூதாக உபயோகிக்க ஆரம்பித்தான்.

சுர்ரென்று மனதில் பொறாமை தலை எடுத்தது. ச்சீ! மகளிடம் பொறாமையா? "என்ன சொன்னார் அப்பா?" அதிதி போனை வைத்தப்பின் கேட்டாள், "ஒண்ணுமில்லை," என்று அந்தப்பெண் தந்தை தனக்கு கொடுத்த பொறுப்பில் பூரித்து மிதப்பாள். தாய் வாய் திறந்து ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.

தாயிடம், "ரொம்ப குண்டா இருக்க, அதுனாலத்தான் அப்பா நம்மை விட்டு போயிட்டார்," என்று ஒரு நாள் அவள் சொன்னதும் அதிர்ச்சியடைந்தாள். மகளிடம் சொல்லவேண்டிய விஷயமா இது? "அம்மா, நீ ஒடம்ப கொரச்சா அப்பா திரும்பிவந்திடுவாங்களா?" என்று தெனாவட்டாக போன மகள் பரிதாபமாக கேட்கும் பொழுது மனம் உருகினாள். என்ன சொல்லி இந்த பிஞ்சு மனதைத்  தேற்றி விடுவது என்று அறியாமல் தன் மகளை மார்புடன் அணைத்துக்கொண்டாள்.

பாகம் 1
பாகம் 3


Friday, July 11, 2014

சிதறிய பூக்கள் - சிறுகதை - பாகம் 1

செய்தால் அவளைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் இல்லையென்றால் திருமணமே வேண்டாம் என்று கேதார் தன் பெற்றோர்களிடம் கறாராக சொல்லி விட்டான். காவ்யா வேறு சாதிப் பெண். ஆனால் பார்க்க செக்க செவேல் என்று இருந்தாள். சுமுகமாகவும் இருந்தாள். நன்றாகப்  படித்திருந்தாள். நல்ல வேலையிலும் இருந்தாள். ஏதோ மகன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைத்து தலையை ஆட்டினாள் சாவித்ரி அம்மாள்.

இதை கேட்ட காவ்யா  கண்கள் நிறம்பி வழிந்தன. "எங்க அப்பா மறுத்திட்டார்," என்று வருத்தப்பட்டாள்.

"ஓடி வந்திடு," வாய் கூசாமல் கேதார் சொன்னான். "நான் உன்னை காப்பாத்தறேன்."

எவ்வளவு மன்றாடியும் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை  என்ற நிலையில், வேறு வழி இன்றி வீட்டை விட்டு காவ்யா புறப்பட்டு விட்டாள். அழகான பூவை ஒரு ரசிகன் பறித்து ஆசையுடன் முகரும் பொழுது அந்த பூ தான் பூத்த மரத்தை எண்ணி பார்க்குமா? அல்ல, தன்னை ஆசையுடன் அங்கீகரிப்பவனை நினைத்து பூரித்து போகுமா?

காவ்யா பிறந்த வீட்டை அடியோடு மறந்து விட்டாள். அழகான புருஷன், தன்  அழகில் மயங்கிய புருஷன் என்று அறிந்து, ஒரு கொடி மரத்தைச்சுற்றி வளருவதுபோல அவனை தன் ஊன்றுகோலாக எண்ணி அவனை சுற்றியே படர்ந்தாள். இரு அழகிய மகள்கள் அவர்களுக்கு - இரு கண்மணிகளாக கருதினாள். அவள் உலகம் நிறைந்திருந்தது. திருமணம்தான் வேர், கேதார்தான் மரம், அவள் கொடி, மகள்கள் மொட்டுக்கள். அவள் மனதில் வீசியது தென்றல்.

அந்த சந்தோஷத்தில் பூரித்து போன அவள், ஒரு மரம் போலவே காட்சி அளிக்க ஆரம்பித்தாள். முதலில் செல்லமாக சீண்டிய அவன், நாளடைவில்  கேலி செய்ய ஆரம்பித்தான். "ஏய் குண்டு," என்று தான் அவளை கூப்பிட்டான். அது போரடித்தால் பீப்பாய் என்று நக்கலடித்தான்.

அவளும் என்னென்னமோ எல்லாம் செய்து பார்த்தாள் ஆனால் வீட்டுப்பொருப்பு, குழந்தைகளை வளர்ப்பது - இதுவே சரியாக இருந்தது.

அவன் விலகுவது கூட தெரியவில்லையே. அவன் அவள் தோழி ராணியை புகழ்ந்து பேசும்பொழுது கூட கவனிக்கவில்லை. "அவளுக்கு குடும்பமா பொறுப்பா?" என்று சுட்டிக்காட்டினாள்.

ராணி அழகு என்று சொல்ல முடியாது ஆனால் சிம்பு போல உடல், மேற்கத்திய உடைகளில் கச்சிதமாக இருப்பாள். அடிக்கடி வந்து போவதால் வீட்டில் அனைவருக்கும் பழக்கம். "நீங்க ஏன்பா அவங்களுக்கு முத்தம் கொடுத்தீங்க?" என்று பெரிய மகள் அதிதி கேட்டாள். கேதார் முகத்தில் ஈ ஆடவில்லை. ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டு தன் மகளை உள்ளே அனுப்பினான்.

காவ்யா அவனை கண்கொட்டாமல் பார்த்தாள். ஏதோ தவறு நடந்து விட்டது, மன்னித்து விடு என்று கேட்டுக்கொள்வான் என்று எண்ணியவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. விவாகரத்து வேண்டும் என்று சொல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

"நாம மறுபடியும் ஆரம்ப..."

அவளை எதுவும் சொல்ல விடாமல் தடுத்தான். அவன் ஆசைகளுக்கு என்றும் இடம் கொடுத்து பழகியவள் இன்று மற்றும் என்ன புதுசாக எதிர்க்கப்போகிறாள்! அலுத்து விட்டதாம் அவளுடன் வாழ்க்கை. கூட நடந்தால் அக்காவா என்று எல்லோரும் விசாரிக்கராங்களாம். எப்படி இந்த வார்த்தைகளை தாங்கிக்கொண்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. எல்லாம் தன் குழந்தைகளுக்காகத்தான்.

ஆனால் இடி விவாகரத்தில் இல்லை, அதற்குப் பிறகுதான் என்று, ஒவ்வொரு நாளும் அவன் தயவுக்கு காத்திருந்த அவள் அறிய ஆரம்பித்தாள். குழந்தைகள் அவளிடம் வளர்ந்தன, ஆனால் அவர்களுடைய எல்லா செலவுகளையும் அவன் ஏற்க வேண்டய சூழல். பெரிய மகளினால் இந்த நிலமை என்று அவளைக் குற்றவாளியாக கூண்டில் நிற்கவைக்காத குறைதான் - கேதாருக்கு அவள் மீது அவ்வளவு கடுப்பு.

எங்கே போவதென்று தெரியாமல் நிற்கும் நேரத்தில் தந்தை வந்து நின்றார். "கேள்விப்பட்டேன். வீட்டுக்கு வா," என்று வலுகட்டாயமாக அழைத்துச்சென்றார்.

பறிக்கப்பட்டு கசக்கிபோட்ட பூ மறுபடியும் செடியில் ஒட்ட வைக்க முடியுமா?

ஆனால் தனக்காவது தன் ரணத்தை ஆற்ற வளர்த்த மரத்தின் நிழல் கிடைத்தது. தன் இரு மலர்களுக்கும் சாய்ந்து கொள்ள ஒரு மரம் கூட இல்லாமல் வேரோடு அறுக்கப்பட்டு அவதிப்படுவதை பார்க்க இயலாமல் தவித்தாள்.

அவர்கலையாவது   தன்னம்பிக்கையுடன் தன் காலிலேயே நிற்க கற்றுக்கொடுக்க முற்பட்டாள்.

பாகம் 2
பாகம் 3