Sunday, June 7, 2015

வாழ்க்கையின் லட்சியம்


ஒரு 22 வயதே ஆன இளைஞன், வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்க முடியாமல் மாய்ந்தான் என்ற செய்தி நம்மை ஆட்டி வைத்தது. இது வருத்தத்துக்குரிய விஷயம்தான், ஆனால் இதில் ஆச்சரியமென்ன?

இன்று நம் வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், எல்லாருமே பணம் சம்பாதித்தும் அதை செலவழிக்க வழியை தேடியும், அதை ஈடு கட்ட மேலும் இன்னும் சம்பாதிப்பதிலே தானே நேரத்தை செலவழிக்கிறோம்? டார்கெட் என்று நம் தலையில் நம் மேலாளர்கள் ஏதோ கணக்கு போட்டு ஒரு எண்ணை கட்டி விடுகிறார்கள். அது கொண்டுவந்தால் மேலும் இன்சென்டிவ் என்ற சலனத்தையும் நம் மனதில் ஊசி போல் நுழைத்து விடுகிறார்கள். வேலையில் உயர்வையும் அந்த டார்கெட்டை சந்திப்பதுடன் பிணைத்துவிடுகிறார்கள். மொத்தத்தில் பணம் செய்யும் ஒரு கருவியாகி விடும் நம் வாழ்க்கையில் அழுத்தமே நிஜமாக நிற்கிறது.

இந்த சிந்தைனைகளுடன் நான் போராடிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு வீடியோ பார்த்தேன் - ஒருவர் 2 லக்ஷம் சம்பளம் கிடைக்கும் தருணத்தில், போதுமடா சாமி உனக்கு அர்பணித்த அடிமை வாழ்க்கை என்று அந்த வேலையில் இருந்து தப்பித்து ஓடி விவசாய துறையில் இறங்கி இருக்கிறார். இப்படி பல நல்ல வேலைகளில் இருக்கும், 30இலிருந்து 50 வயதுவரையானவர்களை இண்டர்வ்யு செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தன் திறமைகளை அவர்கள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று சோஷியல் செக்டரில் இறங்குகிறார்கள்.

நம் புராணங்களில் எதையுமே அளவோடு செய் என்ற அறிவுரை ஓங்கி நிற்கிறது. சம்பாதிப்பது என்பது உடலை காத்து, மனது, ஆத்மாவுக்கு வேண்டிய நற்பணிகளையும், நல்ல சிந்தனைகளை வளர்க்கவும்  வழி தேடுவதற்கே. ஆனால் இன்று, சம்பாதிப்பதொன்றே நம் வாழ்க்கையின் குறிகோளாக மாறி விட்டது. அதை வேண்டாம் என்று ஒதுக்குபவற்களுக்கு வேண்டிய தைரியமும், வாழ வழியும் கிடைப்பது அரிது. விலைவாசியோ தாண்டவமாடுகிறது. எங்கே பார்த்தாலும் பணத்தின் ஆதிக்கம்.

ஒரு சக்கிரவ்யுஹத்தில் மாட்டிக்கொண்ட பயமே நம்மை இதை விட்டு வெளியே வர விடாமல் தடுக்கிறது. நம் குழந்தைகளையும் நாம் அதே வழியில் தள்ளுகிறோம்.

வாழ்க்கையின் லட்சியம் என்ன - இதை சிந்தித்து, சம்பாதிப்பது மட்டுமல்ல என்று அறிந்து, மற்ற மனதிற்கு இதமான, நம் ஜீவனுக்கு பயனான விஷயங்களில் ஈடுபட நாம் வழி வகுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்த 22 வயது இளைஞனை போல பல இளைஞர்களை நாம் பலியாகுவதை பார்க்கத் தான் போகிறோம். சில நாட்களில், இப்படி ஒரு செய்தி நம்மில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, என்ற பயமும் உண்டாகிறது.