Sunday, October 11, 2015

என்றும் காதல்

பதினாறே வயதுதான் தேவியிற்கு. அதற்குள் ஒரு ஏமாற்றம் - படிப்பை நிறுத்தி அவளுக்கு திருமணம் முடிக்கப்போறதாக அவளுடைய தந்தை அறிவித்தார்.

தாய்மாமனுடந்தான் என்ற அடுத்த கனவு உடைந்தது. "உன்னோட அத்தப்பையன் உன்னத்தான் பண்ணிப்பேன்னு ஒத்தக்கால்ல நிக்கறானாம்," என்று தாய் சொன்னாள். முகத்தில் ஒரு உணர்வும்  இல்லை. கணவனை எதிர்த்துப் பேசும் துணிச்சலும் இல்லை. மகளுக்கு எங்கிருந்து வரும்? வருத்தத்தில் தலையை குனிந்தாள். அது நாணம் என்று பாட்டி சிரித்துக்கொண்டே அதற்கு பெயர் சூட்டினாள்.

மாமனாவது கேட்டிருக்கிலாம்.  அவனும் இவளில்லை என்று அறிந்தவுடன் வேறொருத்தியை மணந்து கொண்டான்.

அதாவது அவள் வலியை குறைத்ததா? இல்லையே!

மணம் முடிந்த மூன்றாவது மாதம் உண்டாகினாள். சந்தோசத்தில் உதித்த கரு இல்லை அது. கடமையால் பிறந்தது. அங்கு மாமனுக்கும் ஒரு மகள் பிறந்தாள். சின்னதாக இருந்த வீடு இரண்டு மாடி கட்டிடமாக மாறியது. "உடம்புதான் எப்பவும் படுத்திண்டே இருக்கு தம்பிக்கு," என்று அவள் தாய் வருத்தத்துடன் சொன்னாள்.

"சந்தோசமா இருக்காறா?" தயக்கத்துடன் கேட்டாள் அவள்.

மௌனம் சாதித்தாள் தாய். ஏக்கம் அவள் மனதை துளைத்தது. அவளும் மௌனத்தில் அதை மறக்க முயற்ச்சித்தாள். இரண்டாவது குழந்தையும் பிறக்கப் போகும் தருணத்தில் வேற்றாரை நினைப்பது தவறல்லவோ?

அந்த வருடத்தில் மாமாவின் வீடு இன்னும் பெரிதாகி விட்டது ஆனால் குடும்பம் அதே அளவாக தான் இருந்தது. பூஜைக்கு சென்றிருந்த போது மாமாவை வீல்சேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். "என்ன மாமா?" என்று தன்னையும் மிஞ்சி கேட்டு விட்டாள் .

அவளை நிமிர்ந்து பார்த்தான் அவள் மாமன். "ஒண்ணுமில்லமா, முந்தா நேத்து வண்டிலேர்ந்து விழுந்து அடி பட்டிடிச்சு."

"அம்மா உனக்கு உடம்பு சரியா இல்லன்னு சொன்னாங்க."

"வந்து பார்க்கணம்னு தோணலையா?" அவளையே உற்றுப்பார்த்துக் கேட்டான்.

"வரேன்..." அவள் மெதுவாக பதில் அளித்தாள்.

போய் பார்க்கவேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் கடவுள் வேறு கணக்கு போட்டிருந்தார். திட்டீரென்று அவள் கணவன் இறந்து விட்டான். தன் சிறு குழந்தைகளை அழைத்து அவள் தாய் வீட்டிற்கு திரும்பினாள்.

வயது 20. விதவை என்ற பட்டம், முயற்சி எடுக்காமலேயே அவள் தலையில் விழுந்த பட்டம்! அவள் வாழ்க்கையை இருட்டறையில் பூட்டிய பட்டம். இந்த காலத்திலா என்று ஆச்சர்யப்  படுவர் சிலர். ஆனால் அது நிஜம். முடங்கி விட்டாள் அவள். தந்தை அவளை, "நான் காப்பாத்துகிறேன்," என்றும் அவளை, "குழந்தைகளை பார்த்துக்கோ போரும்," என்றும் சொல்லிவிட்டார்.

"மேல படிக்கிறேன்பா, வேலைக்கு போறேன்," என்று கேட்டுப்பார்த்தாள்.

"நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன்," என்று அவளை அடக்கி விட்டார்.

ஒரு அறை, அது ஒரு சிறை. அவளை பாதுகாப்பதின் பேரில் உருவாக்கப்பட்ட ஒரு திறை. 

அதை மிஞ்சி வர தைரியம் இல்லாத, அதற்கு வழி அறியாத ஒரு பேதையாக அவளை வளர்த்த தந்தைதான் அவளுக்கு காவலர்.

குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் அவளுடைய வாழ்க்கையில் மட்டும் கடிகார முள் நின்று விட்டது போல் இருந்தது.

ஒரே பொழுதுபோக்கு, பக்கவாதம் வந்து அவளைப்போலவே முடங்கி கிடந்த அவள் மாமனுக்கு பணிவிடை செய்வதுதான். மாமி வெளியே போகும் நேரங்களில் அவருடன் மனது விட்டு பேசி இன்னும் தன் மனதில் அடங்கி இருக்கும் தன் காதலுக்காவது ஒரு புது வாழ்க்கை  கிடைத்ததே என்று பெருமிதம் அடைந்தாள் அவள்.