Saturday, April 19, 2014

சித்திரம் பேசாதடி - சிறுகதை

முகம் கழுவி நிமிர்ந்து கண்ணாடியில் பார்த்தாள் சுதா. அதில் கண்ட பிம்பத்தை மனதில் நிறுத்திக்கொண்டாள். அவள் முகம் நேரே தெரிய அவள் கணவன் ராஜின் பக்கத்தோற்றம் கண்ணாடியில் தெரிந்தது. அவர்குளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் தெளிவாக அவள் கண்ணை உறுத்தியது. அவர்களுக்கிடையே வளர்ந்து விட்ட இடைவெளி மனதைப்  புண்படுத்தியது.

அவன் அவள் மனதில் ஏற்பட்ட எந்த சலனத்தாலும் பாதிக்கப்  படாதவனாக தன் பெட்டியில் துணிகளை அடுக்கிக்கொண்டிருந்தான். இன்று ஆபிசிலிருந்து அவன் வேலை விஷயமாக வெளியூர் போய்விட்டு இரண்டு நாள் கழித்துதான் திரும்புவான். அவன் இருப்பதும் இல்லாததும் ஒன்றே. தன் நாலு வயது மகன் வேதாந்தை பார்த்துக்கொள்வதே அவள் முழுநேர வேலையாகி விட்டது. பிறக்கும் பொழுதே எதோ குறைபாடு, தாமதமான வளர்ச்சி. பெரிய மகள் கல்பனாவைக்  கூட சில சமயம் கவனிக்க முடிவதில்லை. அதனால் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளுடைய தேவைகளைப் பூர்த்திச் செய்ய முற்பட்டாள். இதில் தன்னைப்பற்றியோ தன் கணவனைப்பற்றியோ எங்கே நினைக்க நேரம்?

பாலை அடுப்பில் வைத்துக்கொண்டே மனதின் நெருப்பை தணிக்கப்பார்த்தாள். ராஜ் ஒத்துழைத்தால் இன்னும் நன்றாக சமாளிக்கலாம் என்று அறிந்திருந்தாள். ஆனால், அவள் வேலைக்கு போக இயலாத நிலையில் சம்பாதிக்கும் பொறுப்பு ராஜ் மேலே விழுந்தது மட்டுமில்லாமல், வேதாந்தின் மருத்துவ செலவு வேறே பெரிய பாரமாக இருந்தது.

"காபி ரெடியா?" ராஜ் அவள் சிந்தனைகளை உடைத்தான். அவள் காபி கொடுக்கும் பொழுது அவன் மெதுவாக சொன்னான், "நான் ஊர்லேர்ந்து வந்ததும் கொஞ்சம் பேசணம்."

"என்னோட பேசறதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணுமா என்ன?" என்று சமாளித்தாள்.

"கொஞ்சம் பொறுமையா பெசணம். வேதாந்தும் கல்பனாவும் தூங்கின பிறகு...?"

கண்களில் நீர் சுருக்கென்றது. தலையாட்டினாள். என்ன வரப்போகிறது என்று யூகிக்க முடிந்தது அவளால். எப்படி அந்த இடியை தாங்கிக் கொள்ளப்போகிறாள்? எதுவாக இருந்தாலும் அவனெதிரில் தன்  இயலாமையைக் காட்டிக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தாள். அவனை இந்த இன்பமில்லாத வாழ்க்கையில் சிறைப்படுத்தக்கூடாது என்று எண்ணினாள். செலவுகளை மட்டும் அவன் எப்பவும் போல பார்த்துக்கொண்டால் போதும் என்று பெருமூச்சு விட்டாள். வரப்போகிறவள் அதை அனுமதிப்பாளா?

அவனை பிரிவதில் வருத்தம் இருக்காதா என்ற கேள்வியை வேருடன் அழித்தாள். ஆனாலும் பொல்லாத மனது இன்னொருத்தி அவனை தன்னிடமிருந்து பிரிக்கறாளோ என்று நினைக்கச் செய்தது. வீண் சிந்தனை இது என்று தன் மகனைக் கவசமாக அணிந்து அவன் பராமரிப்பில் இறங்கினாள். ஆனால் இரவு மகன் உறங்கிய பிறகு, என்ன முயற்ச்சி செய்தும் தூக்கம் வரவில்லை. ராஜுடன் வாழ்ந்த இனிய நாட்கள் மனதைத் தீண்டியது, அவளை பலவீனப்படுத்தியது. அடக்கி இருந்த கண்ணீர் அருவியாக வழிந்தது.

*

அவன் திரும்பிய பின் வேலைகளை முடித்துக்கொண்டு வந்து உட்காருவதற்கே மணி 12. "இப்போ பெசணமா?"

அவன் மனதில் சந்தேகமே இல்லை. "அதிர்ச்சி அடையாதே சுதா," என்றான்.

இது போதாதா, அதிர்ச்சி அடைய? எதிர்பார்த்தாலும் அதிர்ச்சி அதிர்ச்சிதான். "சொல்லுங்க..." என்றாள் அரை மனதாக.

"இப்படி நாம வாழறதுல எனக்கு ஈடுபாடு இல்லை," என்றான். அவள் கண்களை தாழ்த்திக்கொண்டாள் . "கணவன் மனைவியின் இடையே உறவு - உடல் மட்டும் இல்ல, மனசளவுலையும்... நமக்குள்ள ஒண்ணுமே இல்லாம போனமாதிரி இருக்கு."

எங்கிருந்தோ ஒரு வேகம் எழுந்து, "வேதாந்த பார்த்துக்கறது நம்ப... என் பொறுப்பு."

"உன் பொறுப்பு..." அவன் மெதுவாக எதிரொலித்தான். "அப்ப நமக்குன்னு வாழ்க்கை இல்லாதது உனை பாதிக்கலையா?" அவன் குரலில் ஏதோ ஒன்று அவளைத் தயங்கச் செய்தது. அவனையே மௌனமாகப் பார்த்தாள். "நான் வேலைய ராஜினாமா செஞ்சுட்டேன்," என்றான்.

திகைத்தாள் அவள். "என்ன?"

"வேலையில் இருக்கும் பொறுப்புகளை கவனிக்கறதுல வீட்லயே விருந்தாளியா இருக்கற ஓர் உணர்வு. அதுனால சொந்தமா கன்சல்டண்டா வேலை செய்யப் போகிறேன். போன சில நாட்களா அதற்கு  வேண்டிய முயற்சி எடுத்துன்றிருந்ததுனாலத்தான் எக்கச்சக்க அலைச்சல். ஆனா இனிமே நானே ராஜா, நான் வெச்சதே சட்டம். கொஞ்ச நாளைக்கு, ஏன் நிறைய நாளைக்கு நாம ரொம்ப சிக்கனமா வாழ வேண்டியிருக்கும். ஆனா நாம மனசு வெச்சா இந்த கஷ்டத்தையும் சமாளிச்சிடுவோம். நானும் நீயும் சேர்ந்து வேதாந்தையும் பார்த்துண்டு கல்பனாக்கும் ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு சந்தோஷமா இருக்கலாம்னு நினைக்கிறேன்..."

அவள் அழத் தொடங்கினாள். அவன் திகைத்தான். "என்னடா? உன்ன கேக்காம செஞ்சது தப்புதான். ஆனா நீ தடை சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும். என்னால இப்படி விட்டேத்தியா வாழ முடியாது, சுதா. எது கிடைக்கிறதோ அதை வெச்சு பழைய இனிமையான வாழ்க்கைய அமைச்சுக்கலாம்னு நான் நினைக்கிறேன். நீயும் அப்படித்தான் நினைப்பென்னு தப்பு கணக்கு போட்டேனா?"

"ஐயோ இல்லை!" என்று அவன் மார்பில் விழுந்து அழத்தான் முடிந்தது. இதை அவள் சிறிதும் எதிர்பார்க்க வில்லை, ஆனால் இதுவும் ஒரு அதிர்ச்சி தான் - இனிய அதிர்ச்சி. அதை புரிய வைக்க முடியுமா என்ற கவலை வீண் என்று அவன் வாரி இழைத்த முத்தங்கள் கூறின.