Saturday, June 7, 2014

பாசத்தின் எல்லை

சவிதா முகத்தைச் சுளித்தாள். 'இதுதானா?' போல முகபாவம்.

அண்ணி லலிதா கவனித்துவிட்டாள். தன் கணவனைப் பார்த்தாள். அவனோ தன் தங்கை எது செய்தாலும் சரி என்று நினைப்பவன். அந்த முகபாவத்தை கவனித்தவன் ஒரு சலனமும் இல்லாமல் கேட்டான், "ஏன்டா, இது பிடிக்கலையா?"

"இல்லைண்ணா...இப்பல்லாம் டிசைனர் புடவைகள்தான் எல்லாரும் கட்டறாங்க. பட்டு..." என்று இழுத்தாள்.

"அவ்வளவுதானே? மாத்திட்டா போச்சு. இல்ல பில் எடுத்துண்டு போய் நீயே  மாத்திக்கோ." மனைவி தன்னை நோக்குகிறாள் என்று அறிந்தும் அவள் பக்கம் திரும்பாமல் வேதாந்த் மேலும் சொன்னான், "இந்த விலைக்கு தான்னு இல்லை, எந்த விலைக்கு வேணும்னாலும் வாங்கிக்க..."

லலிதா விருட்டென்று எழுந்துச்சென்றாள். அவளைப் பிறகு சமாதனம் செய்து விடலாம் என்ற நம்பிக்கை வேதாந்திற்கு இருந்தது. அவனுக்கு தன் தங்கையின் குணம் தெரிந்திருந்தும் ஏனோ அதை வேரோடு அறுக்காமல் அதற்கு தீனி போடுகிறாரே என்ற கோபம் அவளுக்கு வரும். ஒருநாள் இதுவே மனஸ்தாபத்திற்கு காரணமாகும் என்றும் அவனை எச்சரித்தாள். "போரும், எதுக்கெடுத்தாலும் நெகடிவா நினைக்காதே," என்று அவன் இவளை அடக்குவது சகஜம்.

அதனால் வேதாந்தின் தாய் மறைந்த பொழுது, அந்த வேதனையிலும் சவிதா நகைகளைபி பற்றி கேட்கும் பொழுது, லலிதாவிற்கு எந்த வித ஆச்சர்யமும் இல்லை. "எதை வேணும்னாலும் எடுத்துக்கொள்," என்று கணவன் சொல்லும்முன் அவளே சொல்லிவிட்டாள்.

"சரிதானே?" என்பதுபோல கணவனை பார்க்கும் பொழுது அவன் முகத்தில் எரிமலையாக கொந்தளிக்கும் கோபம் அவளை அதிரச் செய்தது.

"இப்போ இதுக்கென்ன அவசரம்? நாம என்ன அம்மா நகைய எடுத்துண்டு ஓடப்போகிறோம்னு நினைக்கிறாளா?" என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். தன்னிடம் தான் இந்த சீறல் எல்லாம் என்று எண்ணியவளுக்கு இன்னும் பெரிய ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. "அண்ணா, அண்ணிகிட்ட சொன்னேனே, நகைய பத்தி... உன்கிட்ட சொல்லலையா?" என்று மாட்டி விடுகிற மாதிரி கேட்கும் பொழுது, 'சீ போ' போல அவளை ஒரு முரை முறைத்து, "அவளுக்கு ஊர்பட்ட வேலை, அம்மாவுக்கு சடங்குகள் செய்ய. அப்படியே மறந்தாலும் என்ன?" என்று கேட்டவன் மீது மரியாதை அதிகரித்தது. தன் தாய்க்கு எங்கிருந்தோ வந்தவள் காட்டும் அக்கறை பெற்றமகளுக்கு இல்லையா என்பது அவன் சொல்லாமல் சொல்வது தங்கை வாயை அடைத்தார் போல இருந்தது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே? அது இது தானா?