Saturday, November 8, 2014

விட விட தொடரும்

"நேரம் ஆறது. கிளம்பலாமா?" அனுராதா கணவன் சரவணனைக் கேட்டாள்.

தோழன் வீட்டிற்கு ஒரு பார்ட்டிக்கு வந்திருந்தார்கள். "என்ன அவசரம்?" சரவணன் முணுமுணுத்தான்.

திடீறென்று ஒரு புது வரவினால் மற்றவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டா மாதிரி இருந்தது. சரவணனும் எட்டிப்பார்த்தான். அட, ஷ்ரேயாவா இது என்று ஆச்சர்யத்துடன் பார்த்தான். "காக்கா மாதிரி இருந்த நீ எப்போ கிளியா மாறின?" என்று நேராகவே கேட்டுவிட்டான்.

அவன் தோளை ஆசையாக குத்திவிட்ட ஷ்ரேயா, "நீ மட்டும் என்னாவாம்? ஒட்டட குச்சி மாதிரி இருப்ப, இப்ப நல்ல ஆஜானுபாஹுவா ஆயிட்ட?" என்று பதிலுக்கு கிண்டலடித்தாள்.

அனுராதா கண்ணை உருட்டினாள். அவர்கள் பேசும் தோரணையைப் பார்த்தால் இன்று அவர்கள் வார்தாலாபம் முடியும் என்று தோணவில்லை.

சரவணனுக்கு போரவில்லைத்தான்! ஷ்ரேயாவின் நம்பர் வாங்கிக்கொண்டான். தொடர்பு கொண்டான். சந்தித்தார்கள். நட்பு வளர்ந்தது. அது வளர வளர காதலா அல்ல ஆசையா - இனம் தெரியாத ஒன்றும் கூடவே வளர்ந்தது.

தனியாக இருக்கும் ஷ்ரேயாவின் வீடு சந்திப்புகளிற்கு சௌகரியமாக அமைந்தது. தொட தொட தொடரும் ஆசையில் சரவணன் மூழ்கினான். வீட்டில் மனைவி, மகன், அப்பா, அம்மா எல்லாரும் எதிரிகளாகத் தென்பட்டனர்.

"எங்கேயாவது போய்டலாம் வா," ஷ்ரேயாவும் தூண்டி விட்டாள். கொழும்பில் சந்தோசமாக இருக்கும் தருணம், அனுராதா - அவன் ஆபிஸ் வேலையாக பொயிருக்கிறான் என்ற நம்பிக்கையில் - மெசேஜ் அனுப்பினாள், "அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. உடனே கிளம்பி வரவும்."

அனு சந்தேகப்படுகிறாளோ? இது இவனைப் பிடிப்பதற்கு சூழ்ச்சியோ என்றுக்கூட அவன் ஒரு நிமிடம் நினைத்தான். அதுதான் உண்மை, தந்தைக்கு பக்கவாதம் என்று தெரிந்ததும், தலை தெறிக்க சென்னைக்கு திரும்பினான்.

அடுத்த சில மாதங்கள், அவன் வாழ்க்கை தந்தையின் உடல் நிலையை சுற்றியே அமைந்தது. அதில் ஒரே வடிகால் அவன் ஷ்ரேயாவுடன் இருக்கும் சில நேரங்கள் தான்.

அனுவோ படுக்கையில் தலை வைக்கும்முன்னே தூங்கி விடுவாள். அவள் தலையை வருடிக்கொடுக்க அவனுக்கு ஒரு சில நேரம் தோன்றும். ஆனால் கடந்த சில மாதங்களில் உறவே இல்லாததால் புதுமையாக இருந்தது. அவள் இருவருக்கும் நடுவில் தாம்பத்திய உறவு இல்லாததைப்பற்றி வருந்துவதாகக்  கூட தெரியவில்லை.

இந்த நினைப்பு வரும்பொழுது, அவள் மீது எரிச்சல் கூட வரும். பேசாமல் ஷ்ரேயாவுடனேயே போய் இருக்கலாமா என்றுகூட தோண ஆரம்பித்தது.

ஷ்ரேயாவிடம் கேட்டே விட்டான். அவள் மௌனமாக இருந்தாள். அவன் அவளை உற்று நோக்கினான். "என்ன, நான் சொன்னது பிடிக்கலையா?"

"அனு தன் அலுப்ப போக்க எங்க போவாங்க?"

அவள் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

"போங்க சரவணன், வீட்டுக்கு போங்க. சந்தோசத்துல பங்கேற்பவங்கள விட கஷ்டத்துல கை கொடுக்கரவங்கதான் மேல். இந்த நேரத்துல அனு உங்க பாரத்த சுமக்கறாங்க. நீங்க அங்கிருந்து தப்பிக்க இங்க வந்துட்டீங்கன்னா உங்களுக்கே உங்க மேல மதிப்பு இருக்காது."

அவள் சொல்வதிலுள்ள உண்மையை அறிந்த சரவணன் முதலில் தன் கடமைகளை சுமக்க கிளம்பி விட்டான்.