Tuesday, December 30, 2014

புகலிடம்

"ஆஆ... அம்மா!" அலறினாள் பானு.

"என்னடா?" என்றுப் பதறிக்கொண்டு ஓடி வந்தாள் சந்த்யா.

"பூச்சி!" கையை நீட்டினாள் 10-வயது மகள்.

"சீ!" என்ற சந்த்யாவின் உடல் சிலிர்த்தது. பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து அதை வேகமாக அடித்துக் கொன்றாள்.

அவள் மகள் முகம் சுளித்தாள். "ஏன்தான் இவ்வளவு பூசிகள் இந்த புது வீட்ல வரதோ!"

"சுத்தி நறைய மரங்கள் இருக்கறதுனாலத்தான்!" அவள் அம்மா சுற்றும் முற்றும் பார்த்தாள். சின்னச சின்ன பூச்சிகள் இரவில் வீட்டிற்குள் நுழைவதால் ஜன்னக்கதவுகளை மாலை நேரங்களில் மூடி வைக்க வேண்டியிருந்தது.ஒரு முறை ஒரு வௌவால் கூட வந்து இவர்களை ஆட்டி வைத்தது. புறா மொட்டை மாடியை தன இருப்பிடமாகக்கொண்டிருந்தது. நாள் முழுக்க பறவைகளின் சச்சரவு அமைதியை கெடுத்தது.  இரவில் ஒருமுறை ஆந்தை ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வந்ததை மறந்தே விட்டாளே!

இதில்  காலையில் அவர்கள் வீடு இருந்த குடியிருப்பு சமுதாயத்தில் பாம்பு பார்த்ததாக வதந்தியா நிஜமா என்று வேற தெரியவில்லை.

நகரத்தைவிட்டு தள்ளி இருக்கலாம் என்று இங்கு வந்தால் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்கும் இடையில் வாழ வேண்டியிருக்கே என்று ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது சந்த்யாவிற்கு.

அந்த வாரமே அந்த சமுதாயத்தில் பொது சந்திப்பில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசி எப்படி இந்த உபத்ரவத்தை எப்படி சரி செய்வது என்று கலந்தாலோசித்தாள்.

தாங்கள் இருக்குமிடத்தை ஆக்கிரமித்து தங்களையே இருப்பிடம் இல்லாமல் செய்வது மட்டுமில்லாமல் உயிரையே பிடுங்கும் இந்த மனிதர்களின் உபத்ரவத்தை எப்படி சரி செய்வதென்று இந்த பூச்சிப்பொட்டுகளுக்கும் வனவிலங்குகளுக்கும் தெரியவில்லையே! இன்று புகலிடமே இல்லாமல், சிமன்ட் தரைகளில் அவஸ்தை படும் இந்தப் பிராணிகளும் ஒரு மாநாடு போட்டால்...?