Thursday, March 26, 2015

கள்ளக் காதல்

"அடுத்த சந்திப்பு எப்போ?" விஜயன் கேட்டான்.

"இது என்ன கேள்வி! வேலன் அடுத்த தடவ ஊருக்கு போகரச்சே தான்..." என்று சொல்லி ராதா படுக்கையை விட்டு எழுந்தாள்.

அவள் பின்னழகை ரசித்தவாறே விஜயன் பெரு மூச்சு விட்டான். "இப்படி மாசத்துக்கொரு தடவ சந்திக்கறது கஷ்டமா இருக்கு."

"என் மீது காதல் கொண்டாயோ என் மன்னவனே?" என்று ராதா நகைத்தாள்.

அவன் ஒரே எட்டில் எழுந்து அவள் மீது பாய்ந்து அவளைப் பின்னாடியில் இருந்து கட்டிப்பிடித்தான். "என்ன பேர் வேண்ணா வெச்சுக்கோ. இப்போல்லாம் வீட்ல கூட உன் ஞாபகம் தான்."

எதிரே இருந்த கண்ணாடியில் கண்கள் சந்தித்தன. "எசகு பிசகா எதையாவது செஞ்சு வேச்சிடாதே," ராதா சிரித்துக்கொண்டே எச்சரித்தாள். "உமாக்கு சந்தேகம் வரக்கூடாது."

"பேசாம எங்கேயாவது ஓடி போய்டலாம்."

"சீ! ஓடற வயசா இது!" என்று சிரித்தாள்.

"என்ன வயசாயிடுத்து இப்போ உனக்கு? உன் டீனேஜ் பொண்ணுக்கு அக்கா மாதிரி இருக்க," என்று சீண்டினான்.

மனதுக்கு இதமாக இருந்தது இந்தப்பேச்சு. "இப்படியே பேசிண்டிருந்தா நீ உன் மீட்டிங்குக்கு போனா மாதிரி தான்." அவனைத் தள்ளி விட்டு உடைகளை அணிந்து கிளம்பினாள் ராதா.

தனித்தனியாக வெளியேறினார்கள். போன இரண்டு வருடங்களில் எப்படி எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் சந்திப்பது என்பதற்கு நிறைய வழிகள் கண்டுபிடித்தவர்கள் இவர்கள். ஒரு புத்தகமே போடலாம். குடும்ப நண்பர்கள், அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள் - குடும்பத்துடன். எங்கேயோ, எப்பவோ, அவர்கள் மனங்கள் பிணைந்து விட்டன - கவற்ச்சியில். அது இப்படி உருவம் எடுத்தது. குடும்பத்தை விடவும் இஷ்டமில்லை, இந்த உறவை அறுக்க மனதும் இல்லை. உல்லாசம் ஒன்றுதான் இப்பொழுதிற்கு ஓங்கி நின்ற குறிகோள்.

நடக்கற வரைக்கும் நடக்கட்டும் என்ற மனப்பான்மை.

**

எப்பவும் போல் அந்த ஞாயிறு ராதாவின் கணவன் வேலன் ஊரிலிருந்து திரும்பிய பின் குடும்பங்களுடன் சந்தித்தனர். விஜயன் மகன் ஆதியும், ராதா  மகள் பூஜாவும் தான் இந்த முறை எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.

"அம்மா, அப்பா," என்று குசல விசாரணைக்குப் பிறகு ஆதி ஆரம்பித்தான். "அங்கிள் ஆண்டி," என்று ராதவையும் வேலனையும் பார்த்துச்சொன்னான்.

"என்ன, பீடிகை பலமா இருக்கு," என்று வேலன் சிரித்தான்.

"ஆமாம்பா," என்று பூஜா ஆதி பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். ராதா மனம் சஞ்சலப்பட்டது.

"நானும் ஆதியும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறோம்," என்று பூஜா தைர்யமாக பேசினாள். ராதாக்கு தலை சுற்றியது. "பூஜா. உனக்கு இப்போதான் 18 வயது முடிந்திருக்கு!"

"கவலப்படாதம்மா, நாங்க நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கணம்னு சொல்லல! ஆனா, எங்களுக்குள்ள இருக்கற காதல வச்சு நாங்க கல்யாணத்த நிச்சயம் பண்ணிக்கலாம்னு நினைக்கறோம். போன இரண்டு வருஷமா எங்களுக்குள்ள ஏற்பட்ட காதல் இப்போ வளர்ந்து எங்கள வாட்டுது. ஆனா நாங்க அவசர பட விரும்பல. கல்யாணம் நாங்க படிச்சு முடிச்சப்பறம்தான்," என்று சிரித்துக்கொண்டே பூஜா சொன்னாள்.

ராதாவும் விஜயனும் தலையில் விழிந்த இடியை பொறுக்கவும் முடியாமல், வலியை சொல்லவும் முடியாமல் திணறினர்.