Saturday, December 7, 2019

இறுதியில் தொடக்கம்

அலைகளை நோக்கி நின்றாள் லயா. அவளுடைய மனதில் எழும் அலைகள் கடல் அலைகளை விட பெரிதாகத் தெரிந்தன.  தொண்டையை அடைக்கும் துக்கம் கடலை விட ஆழமாக இருந்தது. அவளை ஆழ்த்தி மூழ்க்கிவிடும் அளவுக்கு அதில் வேகம் இருந்தது. அதற்கு முன் கடல் அலைகள் விளையாட்டுப் பிள்ளைகள் போல தெரிந்தன. 

மெதுவாக கடலுக்குள் நடக்கலானாள். அமாவாசை இருட்டில் அவளை அந்த தனிமையான இடத்தில் யாராலும் பார்க்க முடியாது என்று அறிந்து நடந்தாள். ஒரு நொடி, ஒரே ஒரு நொடி, யாராவது அழைக்க மாட்டார்களா என்ற ஏக்கம் அவளை நிற்கச் செய்தது. ஆனால் அலைகள் தான் ஓ வென்று சத்தம் செய்கின்றன என்று அறிந்து மீண்டும் நடந்தாள்.

கண்களில் பெருகி வழியும் நீர் கடல் நீரின் அளவை விட பன்மடங்கு அதிகம் என்று கணித்தாள். கண்களை மறைத்தது. தடுமாறினாள். ஏதோ காலை தடுக்கவே இடறி விழுந்தாள். மூச்சு திணறி, அப்படியே சமாளித்து எழுந்து நின்றாள். கையில் எதையோ பற்றிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். பயத்தில் அலறிக்கொண்டே மீண்டும்  விழ இருந்தாள். எப்படியோ சமாளித்து கையில் பற்றிக்கொண்டிருப்பதை அமைதியுடன் கவனித்தாள். 

ஒரு கை. அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உடல் அலைகளில் ஆடி தன்  கால்கள் மீது இடிப்பதை உணர்ந்தாள். நடுக்கம் கொண்டாள். அதை உதறிவிட்டு ஓட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் மனிதாபிமானம் தடுத்தது. 

அது ஒரு பெண்ணின் உடல். லயா மரணத்தில் நிபுணம் பெற்றவள் இல்லை ஆனால் அந்தப் பெண் இறந்து சில நேரமே  ஆகியிருக்கும் என்று எண்ணினாள். அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

கடல். அவள். அந்த உடல். 

மனதில் மோதும் அலைகள்   மறைந்து, கண்ணீர் உறைந்து அவள் அப்படியே நின்றாள். 

மௌனம். நிசப்தம். அமைதி.

மனதில் கூச்சலிட்டுக்கொண்டிருந்த புலம்பல்கள் அடங்கிவிட்டு வெறுமை தோன்றியது. துருவித்துருவி எடுத்த துயரம் தூசு போல் பறந்துவிட்டது. 

சில்லென்ற அந்தக்கையின் சொந்தக்காரி மீது லயாவுக்கு அனுதாபம் ஏற்பட்டது. விபத்தா, தற்கொலையா? குடும்பம் இருந்ததா? காதல்? குழந்தைகள்? 

அப்படி எந்த சம்பவம் இப்படி  அநாதை பிணமாக அப்பெண்ணை கடலில் மிதக்க வைத்தது? போராடியிருக்கலாமே? வாழ்க்கையில் எந்த சம்பவம் இப்படி ஒரு முடிவிற்கு தள்ளியது அவளை? சற்று பொறுத்திருந்தால் காலத்தின் சூழலில் வேறு மாதிரி மாறியிருக்கலாமே? சற்று தேடியிருந்தால் சரியான துணை கிடைத்திருக்குமே?

மீண்டும் கண்ணீர் நிரம்பி வழிந்தது. வானத்தை நோக்கினாள். இறைவனை சந்திக்கும்போது கேட்க பல கேள்விகள் இருந்தன. கீழே நோக்கும் போது அங்கு நீரில் மிதப்பது தான்தான் என்ற  புரிதல் ஏற்பட்டது. 

கரையை நோக்கி நடந்தாள்.

இந்த உலகத்தில், கூட்டத்திலும்  தனித்து நிற்கும் உணர்ச்சி அவளை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளியது. 

தனிமையில் நின்று மரணத்தைச் சந்தித்தபோது தனக்கு வாழ்வதற்கு பல காரணங்கள் இருப்பதுபோல் தோன்றியது.