"அப்பா, என் பிரெண்ட்ஸ் எல்லாரும் போன் வெச்சிருக்காங்கப்பா. எனக்கு மட்டும்தான் இல்லை," என்று 14-வயது கலை அழுவதை செல்வனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாழாகப்போன வருமை என்றைக்குத்தான் அவர்களை விடுமோ. எவ்வளவு உழைத்தாலும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கே பத்தவில்லை. இதில் கடன் வேறு. கடன் கொடுத்தவர்களைக் கண்டு ஓடிக்கொண்டே இருப்பதில் வாழ்க்கையே முடிந்துவிடுமோ என்று செல்வனுக்கு வெறுப்பாக இருந்தது.
விருட்டென்று எழுந்து வெளியே சென்றான்.
"ஏண்டி, எப்பப் பார்த்தாலும் இத வாங்கி தா, அத வாங்கி தான்னு கேட்டுகிட்டே இருக்கணுமா? பாரு, அப்பா மனம் நொந்து போறார்," என்று மனைவி ஆனந்தி தனக்குப் பரிந்து பேசுவது காதில் விழுந்தது. தனக்கு சாதகமாக பேசினாலும், தன்னுடைய கையாலாகததைச் சுட்டிக் காட்டுவது போல் அவளுடைய வார்த்தைகள் வேல்போல் அவன் மனத்தைத் துளைத்தன.
அடுத்த சில நாட்கள் அவன் மனம் கலைக்கு போன் வாங்கி தரும் அளவுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்ற கணக்கிலேயே சுழன்றுகொண்டிருந்தது. தான் வேலை செய்யும் தொழிற்சாலையில் கடன் வாங்கலாமா என்று நினைக்கக் கூட முடியாத நிலைமை. ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க மாதம் ஆயிரம் ரூபாய் அவனுடைய சம்பளத்திலிருந்து போய் கொண்டிருந்தது.
அடிக்கடி தலைவலி வேறு வந்து அவனை பாதித்துக்கொண்டிருந்தது. "என்ன செல்வா, இப்போ எல்லாம் எப்போதும் ஏதோ யோசனை செஞ்சிக்கிட்டிருக்க?" என்று அவனுடைய சக ஊழியனும் நண்பனுமான சிவா கேட்டான்.
"ஒண்ணுமில்லடா... கலை போன் கேட்டா. வாங்கி கொடுக்க வக்கில்லை," என்று செல்வா அலுத்துக் கொண்டான்.
சிவா அவனருகில் அமர்ந்தான். "புரியுதுடா. என் வீட்லயும் அப்படித்தான் கதை. போனில்ல, பிரெண்ட்ஸோட வெளியூர் போக பணம் கேட்டான் அறிவு, என்னால அதுக்கு வழி செய்ய முடியல..."
இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர். பிறகு, ஒவ்வொன்றாக பல திட்டங்களை சிந்தித்து, "பணம் இருந்தா இன்னும் எவ்வளவோ செய்யலாம். புதுசா தொழிலை ஆரம்பிக்கக் கூட முதலா பணத்தைத்தானே போட வேண்டியிருக்கு. அதுக்குக் கூட வழியில்லையே," என்று தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறினர்.
ஆனால் கலையின் வாடிய முகத்தை எண்ணிய செல்வனுக்கு இந்த விஷயத்தை அப்படியே விட முடியவில்லை. இன்று போனும் ஓர் அடிப்படை தேவையாகிவிட்டதல்லவா?
இத்தனை நாட்கள் தோன்றாத சில தில்லுமுல்லுகளை செய்து மெதுவாக பணத்தை சேர்க்க ஆரம்பித்தான். தன் மனைவிக்கும் தெரியாமல் இங்கும் அங்கும் பணத்தை ஒளித்து வைத்தான்.
"பக்கத்து வீட்டு அம்மா இன்னிக்கு அவங்க மகன் பன்னிரண்டாவது தேர்வுல நல்ல மார்க்ஸ் எடுத்திருக்கான்னு இனிப்பு கொடுத்துட்டு போச்சு," என்று இனிப்பை ஆனந்தி நீட்டினாள். ஆவலாக எடுத்த அவனிடம், "கொடுத்த கடன் எப்ப கிடைக்குனு கேட்டுச்சு. நீ வந்ததும் கேட்டு சொல்றேன்னு சொன்னேன்," என்றதும் பின் வாங்கினான்.
அவனுடைய மனம் அவனைத் தூற்றியது. இப்படி ஒரு மானம் கெட்ட வாழ்க்கையிலிருந்து வெளியே வர வழியே இல்லையா?
தூக்கம் கெட்டது. உணவில் மனம் செல்லவில்லை. ஒரே ஒரு குறிக்கோள்தான் மனதில் தலையோங்கி நின்றது -- அதிகம் சம்பாதிக்க வேண்டும்.
அலுமினியம் பாத்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்திலேயே அவன் பல வருடங்களாக வேலை செய்துகொண்டிருந்தான். வருடத்துக்கு ஒரு முறை சம்பள உயர்வு இருந்தாலும், அதிகம் இல்லை.
அதைவிட, அவர்கள் அவனுடைய அனுபவத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை. பல முறை அவன் அந்த நிறுவனத்தில் திருட்டுப் போவதையும், உற்பத்தி செய்யப் பட்ட பொருள்களில் தரத்தின் அளவுகோலை அடையாத பொருள்களை வெளியே திருட்டுத் தனமாக விற்கப் படுவதையும் பற்றி அவன் தன்னுடைய நிற்வாகிகளிடமும் மேற்பார்வையாளர்களிடமும் கூறி இருந்தான். அவனுக்கு ஒரு சபாஷ் கூறி அதைப் பற்றி எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்காமல் இருந்தனர்.
தான் நேர்மையாக இருக்கவேண்டும் என்று அவன் ஒரு கொள்கையுடன் வாழ்ந்தவன் என்று கூற முடியாது, அது அவனுக்கு இயல்பாக வந்ததொன்று. அந்த பாதையை விட அவனுக்கு பயம் என்று கூட கூறலாம்.
ஆனால் இப்பொழுது, ஒரு இனிப்பைக் கூட ருசிக்க முடியாத நிலமைக்குத் தான் தள்ளப் பட்டதை அவன் உணர்ந்தான். இந்த நேர்மையினால் என்ன பயன்? அவனுக்கு யாரெல்லாம் திருடுகிறார்கள் என்று தெரியும், எப்படி திருடுகிறார்கள் என்றும் தெரியும். தரத்திற்கு சரியான செயல்பாடுகளும் வரைமுறைகளை இல்லாததனால்தான் அவர்களால் இதைத் துணிந்து செய்ய முடிந்தது. மற்றும், அந்த தரக்குறைவான பொருள்கள் ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் விற்கப்படுவதனால் யாரும் அதை பற்றி புகாரும் செய்யவில்லை.
இன்னும் அதிக ஆவலுடன் அவர்களை அவன் கவனித்து வந்தான். இதில் சில மேலதிகாரிகளுக்கு உடந்தை என்பதை அறிந்தான். தானும் மிகவும் கச்சிதமாக நுழைந்து கொண்டான். பயமாக இருந்தது. ஆனால் இதில் பெரிய பெருச்சாளிகள் இருப்பதனால் தனக்கு ஆபத்து அதிகம் இல்லை என்று உணர்ந்தான். இருந்தாலும், போன் வாங்கியவுடன் இதிலிருந்து விலகுவது மட்டுமல்லாமல் வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றும் உறுதி செய்துகொண்டான்.
ஒரு சில நாட்களிலேயே மெதுவாக பணத்தை சேர்க்க ஆரம்பித்தான். தான் சேர்த்து வைத்த பணத்தை கணக்குப் பார்த்தான். ஐயாயிரத்து சொச்சம் இருந்தது. தான் கலைக்கு வாங்க நினைக்கும் போனின் விலை ஐயாயிரம். இந்தப் பணம் அதற்கு சரியாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்டான். போனை பார்க்கும்போது அவள் எப்படியெல்லாம் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துவால் என்ற நினைப்பே அவனுக்கு இன்பத்தை அளித்தது.
யாரோ வாசலில் வருவதை உணர்ந்து, நிமிர்ந்து பார்த்தான். பக்கத்து வீட்டு அம்மா. "பூஜை நேரத்துல கரடி புகுறரா மாதிரி இந்த அம்மா ஏன் இப்ப இங்கே வந்திருக்கு? கையில பணத்தைப் பார்த்தா தன் கடனை திருப்பி கொடுக்க கேக்கும்," என்று நினைத்தபடியே அவன் சமையலறைக்குள் நுழைந்து அங்கு மேலோடு இருந்தது சிறிய டப்பா ஒன்றில் பணத்தை வைத்தான்.
"ஆனந்தி, ஆனந்தி," என்று குரல் கொடுத்தாள் அந்த அம்மாள். இவன் வெளியே எட்டிப் பார்த்ததும், "ஆனந்தி இல்லையா? உன்ன பார்த்ததும் நல்லதா போச்சு. வாங்கின கடன எப்ப திருப்பி கொடுக்கற? என் மகனுக்கு காலேஜ்ல பீஸ் கட்டணும்," என்று கெஞ்சிக் கேட்டாள்.
"அதான் தரேன்னு சொல்லிட்டேன் இல்ல? எங்க, ஓடவா போகறேன்?" என்று அலட்சியமாக பதில் சொல்ல, ஆனந்தியும் அப்பொழுது வீட்டுக்குள் வரவே, அவன் அங்கிருந்து நழுவி வெளியே சென்றான்.
சிறிது நேரத்திற்கு பிறகு, பக்கத்து வீட்டுக்காரி சென்று விட்டாள் என்பதை உறுதி செய்து, மீண்டும் வீட்டில் சமயலறைக்குச் சென்றான். அங்கே அவன் பணம் வைத்திருந்த டப்பாவைக் காணவில்லை.
"ஆனந்தி, செல்வா," என்று மீண்டும் அந்த அம்மாள் அங்கு வந்தாள். வாய் நிறைய பல்லாக நின்றாள். "நல்ல குசும்பையா உனக்கு. பணத்தை கேட்டா விட்டேத்தியா பேசின ஆனா சொளையா மொத்தப் பணத்தையும் இப்படி எனக்கு கொடுத்துட்ட! நான் எதிர்பார்க்கலப்பா. மகராசனா இரு," என்று அவள் வாழ்த்தினாள். அவள் கையில் அவன் பணம் ஒளித்து வைத்த டப்பா இருந்தது. "இனிப்பு கொடுத்த டப்பா கேட்டு வாங்கிட்டு போலாம்னு வந்தேன். அங்க இப்படி எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும்னு எதிர்பார்க்கல," என்று கூறிக்கொண்டே விடைபெற்றுக்கொண்டாள்.
அவன் தலைமேல் இடி விழுந்தவன் போல் கீழே சரிந்து விழுந்தான்.
விழுந்தால் எழுந்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன வழி?
சரிந்து உட்கார்ந்தவன் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்தான். இந்த மாதமே இந்த திருட்டுப் பசங்களுடைய நட்பை உதறிவிட்டு, புதிய ஒரு வேலையில் சேர வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் ஆனால் அதற்கு இன்னும் நேரம் வரவில்லை போலிருக்கிறது! மீண்டும் கொஞ்சம் சம்பாதித்து, இன்னும் மற்ற கடன்களையும் அடைத்துவிட்டப் பிறகு நேர்மை வழியைப் பற்றி யோசிக்கலாம் என்று அவனுடைய மனம் கூறியது. இன்று நடந்த சம்பவம் அவனுக்கு இந்த செய்தியாகி சொல்வதாகவே தோன்றியது. இத்தனை நாள் தவறு செய்வதை பற்றிய பயம்கூட மறைய ஆரம்பித்ததுபோல் தோன்றியது.
இந்த சிந்தனை சற்று உற்சாகத்தைக் கூட அளித்தது. கடனிலிருந்து வெளியே மீண்டு வரவே முடியாது என்று எண்ணிய அவனுக்கு இது ஒரு கலங்கரை விளக்கமாகத் தோன்றி, வழி காட்டுவது போல் இருந்தது. பெண்ணுக்கு ஐயாயிர ரூபாய் போன் ஏன், இன்னும் விலை மதிப்புள்ளதைக் கூட வாங்கித் தரலாமே! தான் பாடிய பஞ்சப்பாட்டையே மகளுக்கும் கற்றுக்கொடுப்பானேன்?
ஆனந்திகூடத்தான், இவனை மணந்து எந்த சுகத்தைக் கண்டாள்? பற்றாக்குறைக்கு அவனுக்காக பலருடன் போராடித்தான் வந்தாள். கடனளித்தவர்கள், அவளுடைய பிறந்த வீட்டினர், மளிகை கடை, மின் வாரியம் என்று எங்கும் அவள்தான் கெஞ்சி கூத்தாடி குடும்பத்தை காப்பாற்றினாள் - அவன் இருந்த மன நிலைக்கு அவள் பாண்டிய அரசனிடன் நீதி கேட்டு வாதம் செய்த கண்ணகியைப்போல் தோன்றினாள்.
அதற்குள் ஆனந்தியே உள்ளே வந்தாள். "எப்படி செல்வா? எப்படி பக்கத்து வீட்டு அம்மா கடனை அடைச்சீங்க?"
"ஏதோ, கையில கொஞ்சம் வந்தது. அவங்க அன்னைக்கு இனிப்பு கொடுக்கறச்சேயும் காசு கேட்டாங்கனு சொன்ன இல்ல?"
ஆனந்த கண்ணை திறந்து வாயடைத்து நின்றாள். சற்று பெருமையாக இருந்தது செல்வாக்கு. 'எப்படி?' என்பதை போல் பார்த்தான்.
"மளிகை கடை, ட்யூஷன் பீஸ்னு அவ்வளவு எடத்துல கடன், என்ன கேக்காம எதுக்கு இப்ப அவங்களுக்கு காசு கொடுத்த?" என்று அவள் எரிந்து விழுவாள் என்று அவன் துளிகூட எதிர்பார்க்கவில்லை.
"இல்ல... பையன் படிப்புக்கு..."
"நம்ம பொண்ணு படிப்பைப்பத்தி மொதல்ல பார்ப்போமா இல்ல பக்கத்து வீட்டையோ? அவ மேல என்ன அவ்வளவு கரிசனம்," என்று அவள் அவன் மீது பாய்ந்தது அவனை கத்தி கலங்க வைத்தது.
"சீ போ!" என்று அவளை உதறி விட்டு அவன் வெளியேறினான்.
"மத்த கடனை அடைக்க வழி செஞ்சிட்டு வீட்டுக்கு வா," என்று பின்னாலேயே வந்து கத்தினாள்.
அன்று இரவு, அவன் வீடு திரும்பிய பின் ஆனந்தி அவனிடம் கேட்டாள், “உனக்கு எப்படியா இவ்வளவு பண்ம கிடைத்தது? எங்கேயும் திருடலையே?”
“போடி,” என்று அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தம், ‘எதுவும் கேட்காதே.’
ஆனால் அவள் கேட்டது, ‘போடி, நான் அப்படி செய்வேனா,’ என்று. இருவரும் திருப்தியடைந்தனர்.
மறுநாள் அவன் தன்னுடைய மேலதிகாரியிடம் சென்று ஒரு யோசனையைப் பிரஸ்தாபித்தான். “ஐயா, இப்போ நாம ரிஜெக்ட் செய்யப் பட்டப் பொருள்னால சம்பாதிக்கிறது கொஞ்சம் தான். தரத்தை இன்னும் உயர்த்தினால், அந்த தரத்தை சந்திக்க சில நாட்கள் எடுக்கும். அந்த நேரத்தில் நாம் இன்னும் நிறைய பாத்திரங்களை வெளியே மார்க்கெட்டுக்கு திருப்பிவிடலாம்.”
மேலதிகாரியின் கண்கள் பளிச்சென்று மின்னின. “எங்ககூட நீ மின்னையே சேர்ந்திருக்கலாம். இன்னும் நிறையவே, குறுகிய காலத்துல சம்பாதிச்சிருக்கலாம்…”
செல்வாவுக்குப் பெருமையாக இருந்தது.
“ஆனா இத எப்படி நாம செயல்படுத்தறது?” என்று அவர் கேட்டார்.
“கவலை படாதீங்க… அத நான் பார்த்துக்கறேன்,” என்று அவன் அவரை ஆசுவாசப்படுத்தி, தன் அறைக்குச் சென்றான். தன்னுடைய கம்ப்யூட்டரைத் திறந்து ஒரு திட்டத்தை உருவாக்கினான். அதை கம்பனியின் முதலாளியிடம் போய் காண்பித்தான்.
“ஸார், நம்ம கம்பனியின் பொருளோட தர குறைவப் பத்தி நான் உங்க கிட்ட முன்னாடியும் சொல்லியிருக்கேன். இதுனால நாம நிறைய நஷ்டம் அடையறோம். ஒரு சில மாற்றங்கள கொண்டுவந்தா, அத நாம குறைக்கலாம்.”
தன்னுடைய திட்டத்தை முதலாளியிடம் காண்பித்தான். அவன் எதிர்பார்த்தது போலவே அந்த முதலாளிக்கு விவரம் பற்றாது என்பது உறுதியாயிற்று. முதலாளி என்றால் அவன் முதலாளியின் மகன், அவருடைய அகால மரணத்தினால், காலேஜ் முடிந்த உடன் அவர் இடத்தில் வேறு வழியில்லாமல் வந்து அமர்ந்தான். ஏதோ வண்டி ஓடுகிறது, வேலை செய்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பினான். செல்வன் கொடுத்த திட்டமும் சரியாகத் தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அதற்கு பச்சைக் கொடி காட்டினான்.
கணக்கு வழக்கு பார்ப்பவர், “இந்த திட்டத்துக்காக செலவு என்று கொடுக்கப்பட்ட கணக்கு நமக்கு செலவழிப்பது விவேகமில்லை,” என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் மற்ற மேரல்திகாரிகள் செல்வனின் திட்டத்தை ஆமோதித்ததனால், வேறு வழியின்றி அவரும் தலையை ஆட்டினார்.
அந்த புதிய தர வரையரைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர மூன்று நாங்கு மாதங்கள் ஆகும். அதற்குள் செல்வன் பல சிறிய பெரிய வகைகளில் தனக்கு நியாயமாகவும் தவறான வழிகளிலும் பணம் சேர்க்க ஆரம்பித்தான்.
இது மற்றவர்களுடைய கண்ணிலும் பட்டது, அவனுக்கு பலருடைய கண்ணும்பட்டது.
“பரவாயில்லடா, நேத்து வந்தவன், இன்னிக்கு இந்த கேமுக்கே ராஜாவாகிட்ட!” என்று மேலதிகாரி அவனை சிலாகிக்கிறாரா இல்லை அவனைக் கண்டு பொறாமை படுகிறாரா என்று அவனுக்கு புரியவில்லை.
அவனுடைய நண்பன் சிவாவுக்கும் செல்வாவின் போக்கும் அவனுடைய வாழ்க்கை மாறிய விதமும் சற்று கலக்கத்தை உண்டாக்கியது. “செல்வா, ஒரு சில மாசங்களுக்கு முன்னாடி கலைக்கு ஃபோன் கூட வாங்கி தர முடியாம தவச்சிகிட்டிருந்த. இப்ப, நீ அவளுக்கு வண்டி கூட வாங்கி தந்துட்ட! எப்படிடா?”
“ஒழைக்கனம், புதுமையா சிந்திக்கனம்,” என்று செல்வா சொன்ன பதிலில் சிவாவுக்கு திருப்தி இல்லை.
மேலதிகாரியும் சிவாவும் அவனை கேள்வி கேட்டது, தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று செல்வாவை உஷார் படுத்தியது. வேறு வேலை தேட ஆரம்பித்தான்.
“இன்டர்வ்யூ எல்லாம் நல்லா போச்சா செல்வா,” என்று அவனுடைய மேலதிகாரி அவன் புது வேலை தேடலில் மும்முராக இருந்த ஒரு நாள் கேட்டார். அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் புன்னகைத்த விதம் அவனுடைய வயிற்றைக் கலக்கியது. புது கம்பனியில் தனக்கு வேலை கிடைத்துவிடும் என்று ஆவலாக காத்திருந்தான்.
ஆனால் அவன் வீட்டுக் கதவைத் தட்டியது தபால் அல்ல, போலீஸ். தான் உச்சத்தில் பறக்கிறோம், தடைகளைத் தாண்டிவிட்டோம் என்று அவன் நினைத்து பெருமிதப்பட்டுக்கொண்டிருந்த அவனுக்கு வேடன் குறி பார்த்துத் தன்னை வீழ்த்தியது போல் தரையில் விழுந்தான். இந்த முறை அவனால் எழ முடியவில்லை. துக்கம் மற்றும் அவமானம் அவன் இதயத்தைச் சிறைப் படுத்தி மாறடைப்பாக மாறியது. சம்பாத்தித்த காசு மருத்துவத்திற்குக் கூட உபயோகமில்லாமல் போயிற்று.