"அப்பா, என் பிரெண்ட்ஸ் எல்லாரும் போன் வெச்சிருக்காங்கப்பா. எனக்கு மட்டும்தான் இல்லை," என்று 14-வயது கலை அழுவதை செல்வனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாழாகப்போன வருமை என்றைக்குத்தான் அவர்களை விடுமோ. எவ்வளவு உழைத்தாலும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கே பத்தவில்லை. இதில் கடன் வேறு. கடன் கொடுத்தவர்களைக் கண்டு ஓடிக்கொண்டே இருப்பதில் வாழ்க்கையே முடிந்துவிடுமோ என்று செல்வனுக்கு வெறுப்பாக இருந்தது.
விருட்டென்று எழுந்து வெளியே சென்றான்.
"ஏண்டி, எப்பப் பார்த்தாலும் இத வாங்கி தா, அத வாங்கி தான்னு கேட்டுகிட்டே இருக்கணுமா? பாரு, அப்பா மனம் நொந்து போறார்," என்று மனைவி ஆனந்தி தனக்குப் பரிந்து பேசுவது காதில் விழுந்தது. தனக்கு சாதகமாக பேசினாலும், தன்னுடைய கையாலாகததைச் சுட்டிக் காட்டுவது போல் அவளுடைய வார்த்தைகள் வேல்போல் அவன் மனத்தைத் துளைத்தன.
அடுத்த சில நாட்கள் அவன் மனம் கலைக்கு போன் வாங்கி தரும் அளவுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்ற கணக்கிலேயே சுழன்றுகொண்டிருந்தது. தான் வேலை செய்யும் தொழிற்சாலையில் கடன் வாங்கலாமா என்று நினைக்கக் கூட முடியாத நிலைமை. ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க மாதம் ஆயிரம் ரூபாய் அவனுடைய சம்பளத்திலிருந்து போய் கொண்டிருந்தது.
அடிக்கடி தலைவலி வேறு வந்து அவனை பாதித்துக்கொண்டிருந்தது. "என்ன செல்வா, இப்போ எல்லாம் எப்போதும் ஏதோ யோசனை செஞ்சிக்கிட்டிருக்க?" என்று அவனுடைய சக ஊழியனும் நண்பனுமான சிவா கேட்டான்.
"ஒண்ணுமில்லடா... கலை போன் கேட்டா. வாங்கி கொடுக்க வக்கில்லை," என்று செல்வா அலுத்துக் கொண்டான்.
சிவா அவனருகில் அமர்ந்தான். "புரியுதுடா. என் வீட்லயும் அப்படித்தான் கதை. போனில்ல, பிரெண்ட்ஸோட வெளியூர் போக பணம் கேட்டான் அறிவு, என்னால அதுக்கு வழி செய்ய முடியல..."
இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர். பிறகு, ஒவ்வொன்றாக பல திட்டங்களை சிந்தித்து, "பணம் இருந்தா இன்னும் எவ்வளவோ செய்யலாம். புதுசா தொழிலை ஆரம்பிக்கக் கூட முதலா பணத்தைத்தானே போட வேண்டியிருக்கு. அதுக்குக் கூட வழியில்லையே," என்று தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறினர்.
ஆனால் கலையின் வாடிய முகத்தை எண்ணிய செல்வனுக்கு இந்த விஷயத்தை அப்படியே விட முடியவில்லை. இன்று போனும் ஓர் அடிப்படை தேவையாகிவிட்டதல்லவா?
இத்தனை நாட்கள் தோன்றாத சில தில்லுமுல்லுகளை செய்து மெதுவாக பணத்தை சேர்க்க ஆரம்பித்தான். தன் மனைவிக்கும் தெரியாமல் இங்கும் அங்கும் பணத்தை ஒளித்து வைத்தான்.
"பக்கத்து வீட்டு அம்மா இன்னிக்கு அவங்க மகன் பன்னிரண்டாவது தேர்வுல நல்ல மார்க்ஸ் எடுத்திருக்கான்னு இனிப்பு கொடுத்துட்டு போச்சு," என்று இனிப்பை ஆனந்தி நீட்டினாள். ஆவலாக எடுத்த அவனிடம், "கொடுத்த கடன் எப்ப கிடைக்குனு கேட்டுச்சு. நீ வந்ததும் கேட்டு சொல்றேன்னு சொன்னேன்," என்றதும் பின் வாங்கினான்.
ஒரு வாரம் இருக்கும். தான் சேர்த்து வைத்த பணத்தை கணக்குப் பார்த்தான். ஐயாயிரத்து சொச்சம் இருந்தது. தான் கலைக்கு வாங்க நினைக்கும் போனின் விலை ஐயாயிரம். இந்தப் பணம் அதற்கு சரியாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்டான். போனை பார்க்கும்போது அவள் எப்படியெல்லாம் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துவால் என்ற நினைப்பே அவனுக்கு இன்பத்தை அளித்தது.
யாரோ வாசலில் வருவதை உணர்ந்து, நிமிர்ந்து பார்த்தான். பக்கத்து வீட்டு அம்மா. "பூஜை நேரத்துல கரடி புகுறரா மாதிரி இந்த அம்மா ஏன் இப்ப இங்கே வந்திருக்கு? கையில பணத்தைப் பார்த்தா தன் கடனை திருப்பி கொடுக்க கேக்கும்," என்று நினைத்தபடியே அவன் சமையலறைக்குள் நுழைந்து அங்கு மேலோடு இருந்தது சிறிய டப்பா ஒன்றில் பணத்தை வைத்தான்.
"ஆனந்தி, ஆனந்தி," என்று குரல் கொடுத்தாள் அந்த அம்மாள். இவன் வெளியே எட்டிப் பார்த்ததும், "ஆனந்தி இல்லையா? உன்ன பார்த்ததும் நல்லதா போச்சு. வாங்கின கடன எப்ப திருப்பி கொடுக்கற? என் மகனுக்கு காலேஜ்ல பீஸ் கட்டணும்," என்று கெஞ்சிக் கேட்டாள்.
"அதான் தரேன்னு சொல்லிட்டேன் இல்ல? எங்க, ஓடவா போகறேன்?" என்று அலட்சியமாக பதில் சொல்ல, ஆனந்தியும் அப்பொழுது வீட்டுக்குள் வரவே, அவன் அங்கிருந்து நழுவி வெளியே சென்றான்.
சிறிது நேரத்திற்கு பிறகு, பக்கத்து வீட்டுக்காரி சென்று விட்டாள் என்பதை உறுதி செய்து, மீண்டும் வீட்டில் சமயலறைக்குச் சென்றான். அங்கே அவன் பணம் வைத்திருந்த டப்பாவைக் காணவில்லை.
"ஆனந்தி, செல்வா," என்று மீண்டும் அந்த அம்மாள் அங்கு வந்தாள். வாய் நிறைய பல்லாக நின்றாள். "நல்ல குசும்பையா உனக்கு. பணத்தை கேட்டா விட்டேத்தியா பேசின ஆனா சொளையா மொத்தப் பணத்தையும் இப்படி எனக்கு கொடுத்துட்ட! நான் எதிர்பார்க்கலப்பா. மகராசனா இரு," என்று அவள் வாழ்த்தினாள். அவள் கையில் அவன் பணம் ஒளித்து வைத்த டப்பா இருந்தது. "இனிப்பு கொடுத்த டப்பா கேட்டு வாங்கிட்டு போலாம்னு வந்தேன். அங்க இப்படி எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும்னு எதிர்பார்க்கல," என்று கூறிக்கொண்டே விடைபெற்றுக்கொண்டாள்.
அவன் தலைமேல் இடி விழுந்தவன் போல் கீழே சரிந்து விழுந்தான்.