Saturday, January 18, 2025

துரோகம்

 "கலை, நான் நம்ப கிராமத்துக்கு திரும்பிடலாமான்னு யோசிக்கறேன். சிவா அண்ணனோட தயவுல உன் பள்ளி படிப்பு முடிஞ்சிடுச்சு. ஆனா இதுக்கும் மேல அவர்மேல பாரமா இருக்க விரும்பல," ஆனந்தி ஒருநாள் தன் மகள் காளியிடம் சொன்னாள்.

கலை அதிர்ந்தாள். "கிராமமா? அங்கலாம் என்னால வர முடியாது! எனக்கு இன்னும் மேல படிச்சி, கை நிறைய சம்பாதிக்கணம். நீயும்  தையல் இல்லை சாப்பாடு செஞ்சி வித்தன்னா இப்படி நாம அவரோட தயவுல இருக்க வேண்டாம் இல்ல?" என்று தன் தையாய்ப் பார்த்து கடிந்து கொண்டாள்.

சிவாவும் அவளுக்கு அப்படி ஒரு யோசனையை பல முறை கொடுத்திருந்தார், ஆனால் விதவையாகி தனித்து நிற்கும் ஆனந்திக்கு, தன்னுடைய நிலமையை யாராவது தவறாக பயன் படுத்த முயர்வார்களோ என்று பயந்தாள். அவள் தனி மனுஷியாக இருந்திருந்தால், இதை பற்றி கவலை பட்டிருக்க மாட்டாள். ஆனால் வயதுக்கு வந்த பெண் ஒருத்தி இருக்கும்போது, அவளுடைய பயம் அதிகரித்தது. கிராமத்தில் உறவினர் இருப்பதனால் அந்த பிரச்னை இருக்காது, அளவாக செலவும் ஆகும் என்று கணக்கிட்டாள்.

வாசலில் ஒரு வண்டி வரும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். இளைஞன் ஒருவன் வண்டியிலிருந்து இறங்கி, அவள் இருக்குமிடத்திற்கு வந்தான். "ஆன்டி, என் பேர் மணி, நான் சிவாவுடைய மகன். அப்பா உங்ககிட்ட இத கொடுக்க சொன்னார்," என்று ஒரு காகிதத்தை நீட்டினான். அதில் பணம் இருக்கும் என்று ஆனந்திக்குத் தெரியும். அதை வாங்கி வைத்துக்கொண்டு, "உள்ள வாப்பா, காபி தரேன்," என்றாள்.

"இல்லை, ஆன்டி, அம்மா உடனே வீடு திரும்ப சொன்னாங்க. ஏதோ வேலை இருக்காம்," என்றான்.

சரி என்று தலையாட்டி அவனுக்கு விடை கொடுத்தாள். அவன் வண்டியில் அமரும்போது அவனிடம் கேட்டாள், "நீ என்னப்பா செய்யற?"

"காலேஜ் படிக்கிறேன் ஆன்டி. மத்த வேளைல அப்பாக்கும் அம்மாக்கும் உதவியா இருப்பேன்."

பொறுப்புள்ளவனாகத் தெரிந்தான் அவன். அவன் கிளம்பியவுடன் கலை வெளியே எட்டுப் பார்த்தாள். "சிவா அங்களோட மகனா? பயங்கரமா மாறிட்டான்! ஒரே பொறுக்கியா இருப்பான் ஸ்கூல் படிக்கறச்ச."

ஆனந்தி தலையாட்டினாள். செல்வா மறைந்தபின் பல விஷயங்கள் மிகவும் மாறிவிட்டிருந்தது. ஆனால் கலைதான் இன்னும் மாறாமல் இருந்தாள். வீட்டு சுழ்நிலை அறிந்திருந்தும் சௌகரியங்கள் குறையாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள், சதா ஆனந்தியுடன் குறைப்பட்டுக்கொண்டு சண்டை போடுவாள். அவளுக்கு மற்றவர்களைப்போல் தானும் அழகழகாக ட்ரெஸ் செஞ்சிக்க வேணும், மாட்சிங்கா பையும் ஷுவும் வேண்டும், போன் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். சிவா கொடுப்பதிலும் தன் குடும்பத்தினர் உதவுவதையும் வைத்து இவ்வளவு ஆடம்பரம் முடியாது என்பது கலைக்கு ஒரு பெரிய குறை. கிராமத்திற்கு போய்விட்டால், இந்த மோகம் சற்று குறையுமோ என்னவோ.

கலை தனது அறைக்குச் சென்று ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள். பிறகு அழகாக ட்ரெஸ் செய்துகொண்டு வெளியே கிளம்பினாள். "காலேஜ் விஷயமா போகிறேன்," என்று மேற்போக்காக சொல்லிவிட்டு சென்றாள். அவளுடைய போன் அடித்தது. அசோக்கிடமிருந்து கால். ஏதோ யோசித்தவள் அதை கண்டுகொள்ளாமல் போனை பையில் வைத்து சிவாவுடைய கடையை நோக்கி நடந்தாள். கையில் ஒரு பையில் அம்மாவுடைய ஓர் அழகான புடவை. 

சிவாவின் மனைவி கனகா தன்னுடைய கடையில் தையல் வேளையில் மும்முரமாக இருந்தாள். கலையை பார்த்ததும் புன்னகையுடன் வரவேற்றாள். "என்னடா இங்க?" என்று கேட்டாள்.

"ஆண்ட்டி, ஒரு ட்ரெஸ் தைக்க கொடுக்கணும்," என்று புடவைய நீட்டினாள். கனகா சற்று ஆச்சர்யம் அடைந்தாள். இந்த இரண்டு மூன்று வருடங்களில் ஆனந்தியோ களையோ இந்த கடைக்கு வந்ததில்லை. "கொடு," என்று தன்னை சுதாரித்துக்கொண்டு துணியை வாங்கிகொண்டாள். அளவு எடுத்த பின், டிசைன் காண்பித்து, ஒன்றை நிர்ணயித்தப்பின், "ஒரு வாரம் கழித்து வந்து வாங்கிக்கொள்," என்றாள்.

துணி தைக்கக் கொடுக்கும் காரணத்தைச் சொல்லி கலை பல முறை அவர்கள் கடைக்கு வந்தாள் ஆனால் மணியை அதிகம் பார்க்க முடியவில்லை. ஒரு சில முறை பார்த்தபோதும் அவன் அவளை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றுவிடுவான். கனகா அதிகம் அவளிடம் பேசிச்சு கொடுக்காததனால் அவளால் மணியைப் பற்றி விசாரிக்க முடியவில்லை. ஒருமுறை சிவா கடைக்குச் சென்று, பேச்சு கொடுத்து, தனக்கு காலேஜ் படிப்பில் உதவி வேண்டும் என்பது போல் நடித்தாள். அவளுக்கு உதவி தேவைதான், ஆனால் அதை பற்றி அவளுக்கு கவலை இல்லை. அவளுடைய பெரிய கனவுகளுக்கு படிப்பு உதவாது என்பது அவளுடைய கருத்து.

"நல்லா படிச்சா நல்ல முன்னேறலாம். நான் வேணும்னா மணியை உனக்கு சொல்லிக்கொடுக்க சொல்கிறேன்," என்று சிவா கூறியது அவளுடைய காதுகளில் தேன் பாய்வதுபோல் இனிமையாக இருந்தது. 

கனகாவுக்கு இதில் துளிகூட இஷ்டம் இல்லை. "இப்பாத்தான் அவனே ஒரு நல்ல வழிக்கு வந்து பொறுப்பா இருக்கான். இப்பப் போய் ஒரு பெண்ணோட, வயசு வந்த பெண்ணோட, நேரம் கழிக்க சொல்ரீங்களே," என்று ஜாடையாக சொல்லிப் பார்த்தாள்.

"அட, நீ வேற! அவளும் நல்ல பொண்ணு, படிக்க ஆசை படறா, இவனுக்கும் சொல்லிக்கொடுத்தா மனசுல இன்னும் நல்லா பதியும். அவ நல்லா படிச்சு, நல்ல உத்யோகத்துக்கு போனா அவங்க குடும்பமும் தலை நிமிரும். நமக்கும் பெருமை," என்று உற்சாகத்துடன் சொன்னான்.

 மணிக்கு இதில் எந்த உற்சாகமும் இல்லை. "அப்பா! எனக்கே படிக்கறதுக்கு நேரம் பத்த மாட்டேங்குது. கடை வேலை, காலேஜ், அது தவிர சி ஏக்கு படிக்கறது விளையாட்டா?" என்று அழுத்துக் கொண்டான்.

"நீ செஞ்சுடுவா, பிள்ள," என்று சிவன் அவனை தட்டிக் கொடுத்தார்.

வேண்டா வெறுப்பாக அவன் கலைக்கு அவர்கள் வீட்டுக்குச் சென்று படிப்பு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தான். ஆனந்திக்கு இதில் திருப்தி... தன் மகள் குடும்பத்தை மேன்படுத்துவாள் என்று நம்பினாள். மணி வரும்போதெல்லாம் அவள் சமையல் அறையிலிருந்து கவனித்து வருவாள். "நல்ல தங்கமான பையன். பொறுமையாக சொல்லிக்கொடுக்கிறான்," என்று பார்ப்பபவர்களிடமெல்லாம் சொன்னாள்.

கலைக்குத்தான் ஏமாற்றம். படிப்பு சொல்லிக்கொடுப்பது தவிர அவன் அவளிடம் வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேசவில்லை. சொன்ன நேரத்திற்கு வருவான், ஒரு மணி நேரத்தில் சொல்லிக்கொடுத்துவிட்டு சென்று விடுவான்.  

அவள் அன்று கல்லூரியிலிருந்து உற்சாகமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். முதன்முறையாக ஒரு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். இன்று அம்மாவிடம் சொல்லி இதை கொண்டாட வேண்டும், எப்படியாவது மணியை சிறிது நேரத்திற்காவது ஈர்த்து, தன்னை அவன் கவனிக்கும்படி செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தாள். 

அவனுக்காக அவள் தன்னுடைய மற்ற நண்பர்களை எல்லாம் ஒதுக்கி இருந்தாள். கடைசியாக அவள் திருட்டுத்தனமாக சந்தித்துக்கொண்டிருக்கும் அசோக்குக்கு அவள் மீது கோபம். அவன் அவளுக்காக கேட்ட பொருளை எல்லாம் வாங்கி  கொடுப்பான். இனி இன்னொரு ஆளை பார்க்க விருப்பமில்லாத படி அவளை வசீகரிக்கப் பார்த்தான். அது கைகூடி வரும்போல இருந்த நேரத்தில் மணி எப்படி புகுந்தான் என்று அசோக்குக்கு புரியவில்லை. அவனிடம் தன்னளவுக்கு வசதி கூட இல்லை. அவனுடைய அழகைப் பார்த்தா மயங்கினாள்?    

"ஏய் என்ன, என்ன கண்டுக்காம போற. போன், ட்ரெஸ்ஸெல்லாம் வேணுங்கறச்ச வந்து வழிஞ்சு இல்ல!" என்று அவளை அன்று அவன் வழி மறித்தான்.

"சீ போ! அவனால நான் இன்னிக்கு பாஸ் ஆயிட்டேன். நீ செலவழிக்கறது உங்கப்பன் காசு. அவன் பாரு, அவனுடைய அப்பாவை விட அதிகமா சம்பாதிப்பான்," என்று அவள் அவனை தூக்கி எறிந்து பேசியது அவனுக்கு பிடிக்கவில்லை.  மேலே பாய்ந்து கட்டி பிடிக்கப் பார்த்தான். அவள் அவனைத் தள்ளும்போது அவளுடைய சட்டை பட்டன் வெளியே வந்தது. அவனை ஓர் அறை விட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள். "இப்படி சீப்பா நடந்துக்கற உன்னோட நான் எப்படி இத்தனை நாள் பழகினேன்னு எனக்கு தெரியல. ஆனா இனிமே ஒரு நாள் கூட என்ன பார்க்க முயற்சி செய்யாத."

உடல் நடுங்க, மனம் துடிக்க அவள் வீட்டு பக்கம் ஓடினாள்.  பூஜைல கரடி புகுந்தாற்போல் இதென்ன அபசகுனம் என்று நினைத்தவள், தன்னை நிதானப்படுத்திக்கொண்டு உள்ளே சென்று அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டாள். "நல்ல மார்க் வாங்கியிருக்கேன்மா!"

ஆனந்திக்கு சந்தோசம் தாங்கவில்லை. "இரு, இனிப்பு ஏதாவது செய்யறேன்," என்று சொன்னாள்.

"அம்மா, மணி வந்துகிட்டிருப்பார். நீ கடைக்கு போய் சாப்பிட இனிப்பும் காரம் வாங்கிட்டு வாயேன்," என்று தாயை வெளியே அனுப்பினாள். வேகமாக ஆடையை மாற்றிக்கொண்டு, சற்று வாடிய முகத்துடன் அவனுக்காக காத்திருந்தாள். 

மணி அடித்தாற்போல் மணி வந்து நின்றான். அவன் வந்ததும் முகத்தில் புன்னகை புத்தத்து, ஆனால் சேர்ந்து கண்ணீரும் வழிந்தது. அவனை கட்டிப் பிடித்துக்கொண்டாள். திகைத்த அவன், "என்ன, என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டான். "தெருவுல நல்ல மார்க்ஸ் வரலையா?" என்று கேட்டான்.

இல்லை என்று தலையாட்டி, விசும்பிக்கொண்டே, "நல்லாத்தான் வாங்கினேன்... ஆனா, ஆனா, வழில அசோக் என்கிட்டே தவறா நடந்துகிட்டான்," என்றால்.

மணிக்கு ஒன்றும் புரியவில்லை. சமாதானம் செய்வதற்கு அவளை தடவிக்கொடுத்துக்கொண்டே, "இரு, உங்க அம்மா எங்க? அவங்க கிட்ட சொன்னயா?" என்று கேட்கும்போதே வாசற் கதவை திறந்து ஆனந்தி உள்ளே நுழைந்தாள்.

சந்தோசமாக இருந்த மகள் இப்படி மணியின் பிடியில் அழுதுகொண்டிருப்பதை பார்த்து அவளுடைய வயிறு கலக்கியது. " ஏய், என்ன?" என்று சீறினாள்.

"ஆண்ட்டி, அவகிட்ட," என்று அவன் சொல்வதற்கு முன்.

"அம்மா! காப்பாத்து," என்று கலை தாயிடம் ஓடினாள்.

ஸ்தம்பித்து போனான் மணி. "கலை, என்ன செய்யற?"

"நீ இல்லையான்னு கேட்டான். இல்லைன்னதும்..." என்று கலை அழத்தொடங்கினாள்.

மணி தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அவனுடைய பெற்றோர்கள் வந்து கண் விரித்து, வாய் பொத்தி நின்றனர். "டேய்!" என்று சிவா சுய நினைவு வந்து அவனை அடிக்க ஓடினான். கனகா தடுத்தாள். "இருங்க, விசாரிக்கலாம்," என்றாள்.

"நாங்க போய் சொல்றோமா?" என்று ஆனந்தி சீறினாள்.

சிவா அவள் காலில் விழுந்தான். "சின்னான் சிறுசுங்க. அவன் தெரியாம  பண்ணியிருப்பான்.இப்ப இத பெரிசு படுத்தினா அவனோட வாழ்க்கையே நாசமா போயிடும்..." என்று கெஞ்சினான்.

ஆனந்தியும் அழைத்த தொடங்கினாள். "உங்கள தெய்வமா நெனச்சு கும்பிட்டேன். இப்படி பாம்ப வளர்த்திருக்கிங்களே," என்றாள்.

"தூக்கி போட்டுடறேன்மா... ஆனா, அடிச்சு கொன்னுடாதீங்க" என்றான் சிவா.

"கலை..." என்று மணி கலையைப் பார்த்து கெஞ்சினான்.

"அவ பேர சொல்லாதேடா!" என்று சிவா கடிந்த்தான். காலை சுவரில் சாய்ந்து சறுக்கி கீழே அமர்ந்தாள். தான் இதை எதிர்பார்க்கவில்லை. சினிமாவில் நடப்பதுபோல் அவர்களை இணைத்து வைப்பார்கள் என்று எதிர்பார்த்தாள் . கதை இப்படி திக்கு மாறியது, அவளையும் திணற வைத்தது.

  (தொடரும்)

`திருப்புமுனைகள்

Wednesday, January 1, 2025

திருப்புமுனைகள்

செல்வாவின் மறைவு அவனுடைய குடும்பத்தை பாதித்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அந்த கம்பெனியையே குலுக்கிவிட்டது. அவனுடன் அந்த சூதில் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்று கண்டுபிடித்து, மேலதிகாரிகள் உட்பட பலர் சிறைக்குச் சென்றனர். தன் வினை தன்னைச் சுடும் என் பதுபோலிருந்து அந்த மேலதிகாரிக்கு - அவர்தான் செல்வன் தப்பித்து வேறு வேலையில் செர்ந்து தங்களை மாட்டிவிடுவானோ என்ற பயத்தில் போலீசுக்கு அநாமதேயனாக புகார் கொடுத்திருந்தான். இப்பொழுது அவனால் தான்தான் புகார் செய்தோம் என்பதை நிரூபிக்க முடியாததனால் அவனுக்கு தண்டனையில் சலுகையும் கிடைக்கவில்லை.

மற்ற தொழிலாளிகளும் நிர்வாகிகளும் கையைப் பிசைந்து நின்றனர். "ஒரு சிலர் செய்யும் தவறினால் நாம் மாட்டிக் கொண்டோம்," என்று அலுத்துக் கொண்டனர். இப்பேர்ப்பட்ட நிறுவனத்திலிருந்து வருபவர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை - எத்தனை பேர்கள் தவறு செய்து தப்பித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழவே, மற்ற தொழிலதிபர்கள் அவர்களை தங்களுடைய நிறுவனத்தில் ஏற்றுக்கொள்ள தயங்கினர்.

சிவாவும் இந்த நிலைமையில் நான்கைந்து மாதங்கள் வேலையில்லாமல் திண்டாடினான். அவன் இந்த சதிகளில் கலந்துகொள்ளாததற்கு வீட்டில் அவனுக்கு தினம் இளக்காரமும் அவமானங்களும் தான் பரிசாக கிடைத்தது. "கலையோட அப்பா இதெல்லாம் செய்து தன்னுடைய குடும்பத்தோட தரத்தையாவது உயர்த்தினார்!" என்று மகன் குறைபட்டுக்கொண்டான். "புது போன் என்ன, வண்டி என்ன! பிரெண்ட்ஸோட ஊர் சுத்தரா. ஜாலியா இருக்கா. நான் தான் என் பிரெண்ட்ஸோட எங்கையும் போக முடியாம தவிக்கறேன்." 

அவன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதும், மனைவி அவனுக்கு பரிந்து இவனை வைவதுமாக சிவாவின் வாழ்க்கையே நரகமாக மாறியது. இதில் கடன் கொடுத்தவர்கள் வந்து கதவைத் தட்டும்போது அவன் மனமில்லாமல் ஆனால் வேறு வழியும் இல்லாமல் ஓடி மறைய வேண்டிய கட்டாயம் அவனுக்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. இதைக் கூட புரிந்துகொள்ளாத மனைவியையும் மகனையும் நினைக்கும்போது அவன் மேலும் குறுகிப்போனான்.  மிகவும் வருந்தினான்.

அவனுடைய தந்தை தினம் குடித்து வந்து வீட்டில் ரகளை செய்வார். அவனுடைய தாய்தான் ஓர் எக்ஸ்போர்ட் கம்பனியில் வேலை செய்து அவனது குடும்பத்தைகே காப்பாற்றினாள். எப்படியோ சிவா மற்றும் அவனுடைய தங்கையை படிக்க வைத்தாள். தன்னைப் போல் தன்னுடைய மகளின் வாழ்க்கை கண்ணீரில் கரைந்துவிடக் கூடாது, அவள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று மகளுக்கும் மகனளவுக்கு சுதந்திரத்தை அளித்தாள். சிவாவின் தங்கை பவானி ஒரு நல்ல வேளையில் சேர்ந்து, தனக்கு பிடித்த ஒருவனை திருமணம் செய்துகொண்டு நன்றாக வாழ்ந்து வந்தாள்.

கட்டுப்பாடுடன் வாழ்வது சிவாவின் இரத்தத்தில் ஊறி இருந்தது. தந்தையின் அன்புக்கு ஏங்கிய அவன் தன் மகனை ராஜாபோல் வளர்க்கவேண்டும் என்று உழைத்தான். மகனுக்கு ராஜா என்றே பெயரும் வைத்தான். அவன் கேட்பதற்கு முன் அவனுக்கு பொருள்களை வாங்கி வழங்கினான். 

இன்று அதுவே வினையாக மாறியது. தான் கேட்டதெல்லாம் நினைத்த நேரத்தில் கிடைக்கவேண்டும் என்று தன் மகன் எதிர்பார்க்கிறான் என்பது இத்தனை நாட்கள் வரை சிவாவுக்கு புரியவில்லை. இப்பொழுது, பண நெருக்கடி இருக்கும்போதும் அவன் தன்னை மாற்றிக்கொள்ளாதது சிவாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சிவா சிறு வயதிலிருந்து வீட்டு நிலைமையை புரிந்து தனது தேவைகளை கட்டுக்குள் வைத்து வளர்ந்தவன். மனைவியும் மகனுக்கு பரிந்து பேசுவது அவனுக்கு தான் தனித்து நிற்பது போல் இருந்தது. அவனுடைய மனைவி, மகன், இருவருக்கும் அவன் பணம் சம்பாதிக்கும் இயந்திரமா?

  

இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று அடிக்கடி அருகில் இருந்த கிணற்றடியை நோக்கிச் செல்வான். வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்று கீழே எட்டிப் பார்ப்பான். தற்பாதுகாப்பே அவனுடைய இயல்பான  குணமாகியதனால், இப்பொழுதும் அவன் தன் கஷ்டங்களிலிருந்து ஓடி ஒழிய பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கு புரிந்தது. ஆனால் என்ன செய்வது?

'எப்படி செல்வா? எப்படி துணிஞ்ச? எப்படி ஏமாத்தி பொழைக்கணும்னு தோணித்து? இப்பகூட என்னால முடியலையே!'

'ஒழைக்கனம், புதுமையா சிந்திக்கனம்,' என்று சிவா அன்று சொன்னது அவனுக்கு நினைவிற்கு வந்தது. 

 அவனுடைய சிந்தனையின் போக்கை மாற்றியது. அவன் என்றும் உழைக்க தயங்கியது இல்ல. ஆனால் புதுமையாக சிந்திப்பது என்றால்? செல்வாவின் புதுமையான சிந்தனையினால்தானே அவனுடைய வாழ்க்கையை இழந்தான்?

"இல்லை!" என்று தனக்குத்தானே சிவா பேசினான். "தவறான வழியை கைப்பற்றியதனால் தான் அந்த முடிவை சந்தித்தான். ஆனால் அவன் ஆரம்பித்த திட்டம் நல்ல திட்டம் தான். ஒழுங்காக தரத்தை உயர்த்துவதில் கவனத்தை செலுத்தியிருந்தால் அவர்களுடைய பொருள்களின் தரம் உயர்ந்து அவர்கள் பல நன்மைகளை அடைந்திருக்கலாம், அல்லவா?"

ஒரு வித உற்சாகத்துடன் சிவா எழுந்தான்.  உடலில் ஒரு பரபரப்பு தெரிந்தது, ஆனால் வீட்டை அடைவதற்கு முன் அந்த பரபரப்பு அடங்கியது. எந்த வித புதுமையான, தொழிலுக்கேற்ப யோசனையும் அவனுடைய மனதில் எழ வில்லை. இருந்தாலும், புதிதாக ஒன்றை செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு அவன் மனதில் ஒரு நம்பிக்கையை உருவாக்கியது. தனக்குத் தெரிந்தவற்றையும், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். 

அவன் வாழ்ந்த குடியிருப்பிலேயே அவனுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவனுடைய இன்ஜினியரிங் படிப்பு இதுக்குதானா என்று ஒரு நிமிடம் கூட சிந்தித்திருந்தால் அவனை அதை வீழ்த்தியிருக்கும். இதுக்காகவாவது பயன் படுகிறதே என்று வீட்டு பொருள்களை பழுது பார்க்க ஆரம்பித்தான். மின் விசிறி, மிக்சி, டிவி என்று சதா ஏதோ ஒரு தேவை இருந்து கொண்டே இருந்தது. முதலில் குடியிருப்பு மக்களிடம் மட்டும்தான் அவனுடைய உதவியை ஆரம்பித்தான். போகேப் போக அவர்களின் சிபாரிசில் வெளியிலிருந்தும் அவனை தேடி வந்தார்கள். ஒரு சின்ன கடை வைத்ததன் பிறகு இன்னும் பலர் வந்தனர்.

மனைவிக்கு தையல் நன்றாக வரும் என்பதால் அவளுக்கும் தனது கடையில் ஓர் இடம் ஒதுக்கி தையல் தொழில் செய்ய வற்புறுத்தினான். வேண்டா வெறுப்பாகத் தான் ஒப்புக்கொண்டாள், ஆனால் கையில் காசு வரவே அவளுடைய உற்சாகமும் அதிகரித்தது.

இதில் இன்னொரு ஆச்சரியமும் நடந்தது! அவள் சம்பாதிக்க ஆரம்பித்த உடன், கணக்காக இருக்க ஆரம்பித்தாள். மகனை கண்டிக்க ஆரம்பித்தாள். அவனுடைய ஊதாரித்தனத்திற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தாள். சில நேரங்களில் அவனிடமும் வேலை வாங்கினாள். "நாலு காசு சம்பத்திச்சாத்தான் அதோட அருமை தெரியும்," என்று அவனுக்கு புத்திமதி வேறு!.

நேர்மையாகவும் தலை நிமிர்ந்து வாழ முடியும். செல்வா அளவுக்கு துணிச்சல் இல்லாததனால் வியக்கும் அளவுக்கு புதுமை செய்ய முடியவில்லைத்தான். அவனளுக்கு செல்வாக்கு அதிகரிக்கவில்லைத்தான். ஆனால், மெதுவாக, ஸ்திரமாக அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

நன்றி கடனாக ஆனந்திக்கும் கலைக்கும் அவனால் முடிந்த உதவிய செய்து, அவர்கள் வாழ்க்கையிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினான்.

தினம் காலை, கடவுளை வணங்கும்போது, செல்வாவுக்கும் நன்றி சொல்ல தவற மாட்டான். 

  

செல்வத்தைத் தேடி 

துரோகம்