நான் நம் இலக்கியத்திலிருந்தும் நம் புராண கதைகளிருந்தும் கற்றுக்கொண்டவை - அதிதி தேவோ பவ; பெண்கள் தாய், லக்ஷ்மி; கண்ணியமும் கட்டுப்பாடும் நம் இலக்கணங்கள்.
ஆனால், இன்று ஹிந்து பேப்பரில் ஒரு வெளிநாட்டுப்பெண்மணி எழுதி இருக்கும் ஒரு கட்டுரையை படிக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. அவர் தன் தோழிகளிடம் நம் நாட்டில் வரும் பொழுது எழும் எண்ணங்களைப் பற்றி கேட்டார். அதற்க்கு அவர் தோழிகள் சொன்னது, இந்தியாவில் வரவேற்பு பிரமாதம். பலர் மிக பணிவுடனும் அக்கறையுடனும் அவர்களை வரவேற்கிறார்கள். ஆனால், பொது இடங்களில் அவர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகிறது. ஆண்பிள்ளைகள் அவர்களுடன் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்னாள் நம் மத்திய அரசு ஆமிர் கானை வைத்து இந்த அதிதி தேவோ அவ என்ற நம்முடைய கலாச்சாரத்தை நினைவூட்டினார்கள். அதில் ஏதும் பயன் இருந்ததாக தெரியவில்லை.
அது மட்டுமின்றி, நான் யோசித்துப்பார்த்தேன். அப்படியே நான் இந்த மாதிரி சம்பவத்தின் பொழுது அங்கு இருந்து தடுத்து நிறுத்துப்பார்த்தால், எனக்கு என்ன கதியாகும்?
இப்படிப்பட்ட பயமும் தயக்கமும் ஏன்? ஏனென்றால் பல வருடங்களாக இந்திய பெண்களுக்கே இப்படிப்பட்ட கீழ்த்தரமான நபர்களை பொது இடங்களில் எதிர்க்க வேண்டியிருக்கு. அந்த மாதிரி சமயங்களில் மற்றவர்கள் ஒரு தெருகூத்து நடக்கும் ஆர்வத்துடன் அதை கண்டு கழிக்கிறார்களே தவிர, கூட நின்று எதிர்ப்பதில்லை.
இதுவே இந்திய கலாசாரமாகிவிட்டது என்று கூட சொல்லலாம். தெருவில் கண்ட அநாதையான் ரூபாயை கூட நாம் எடுத்துக்கொள்ள தயங்கி கோவில் உண்டியலில் போடும் பொழுது, ஒரு பெண்ணை நாம் அவள் உடை, நடை என்று எடை போட்டு அவளை சீண்டி, வேதனை படுத்தலாமா?
இதை எப்படி மாற்றுவது? இதற்க்கு அரசு தவிர நாம் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய வேண்டும்? இது ஒவ்வொரு இந்தியரும் யோசிக்க வேண்டிய விஷயம்.