Thursday, June 2, 2022

உணர்ச்சிகளின் மேகமூட்டம்

எங்கேயும் அவனே 
என்ற போதனை  
காது வழியே வழிந்து மனதில் 
விழும், எழும் யோசனை 

என் உள்ளிலும் 
அவன் உண்டோ 
இங்கேயும் அவனை 
இந்தக் கண்கள் கண்டோ 
இதுவும் அதுவும் 
வேறில்லை என்று 
கூறும் மறைகளும் 
தவ யோகிகளும் 

எதற்குக் கோபம் 
மன வருத்தம்
வாதம் விவாதம் 
இன்பம் சோகம்?

இருப்பதும் இல்லாததும் 
இதில் என்ன வித்தியாசம்?
பயத்தைப் போக்கிடாதோ 
ஒரு மந்தஹாசம்!

ஆஹா அறிந்தேன்
என்று துள்ளினேன் 
ஒரே சொடுக்கில் 
பயத்தில் பதுங்கினேன் 

மாயையால்  மறையும் 
இந்தப் புரிதல் 
என் நெஞ்சில் தோன்றும்  
என்றும் வேறுபாடுகள்

இதை அறிந்தும் 
அறியாமை கிளப்பும்  
உள்ளத்தில் பல 
பரபரபரப்புகள் 

அலை போல் 
சலனங்கள்
உயர்ந்து நிற்கும் 
பல சஞ்சலங்கள் 
 
மனதை இறுக்கும் 
கோடி பந்தங்கள்  
அதில் விட முடியாத 
மயிரிழைப்போல் அஹம்பாவம்  

ஆசை, துவேசம் 
பீதி, இகழ்ச்சி 
இதிலே சுழலும் 
என் உள்ளுணர்ச்சி 

மாயக் கண்ணாடி 
பார்வை மறைக்கும்  
விவேகத்தைச் சூழும்  
உணர்ச்சிகளின் மேகமூட்டம்  
    
அதை அகற்ற 
முனையும் நான் 
உறுதுணை இருப்பாய்  
ஜொலிக்கும் தேவன்   

வழிகாட்டியாக 
தோழனாக 
என்னுடன் நடக்கும் 
வழிப்போக்கனாக 

என்னுள் எரியும் 
விளக்காக  
என் மடமையை விலக்கும்
ஒளிமயமான ஜோதியாக.  

No comments:

Post a Comment