Sunday, July 24, 2016

இருதய பரிமாற்றம்

சரிகா போனை கீழே வைத்தாள். முகம் வாடியது. கதிரின்  போன் இன்னும் தொடர்பு எல்லைக்கு வெளியேவோ அல்ல அணைக்கப்பட்டிருப்பதாகவோ தான்   இருந்தது. ஒரு புறம் கவலை, மறுபுறம்  ஏமாற்றம்.

நாட்டை விட்டுச் சென்றவன், உலகத்தைவிட்டு சென்று விட்டானா என்ற நினைப்பு தன்னையும் மிஞ்சி அவள் மனதில் எழுந்தது . ஆனால் உடனே தலை அசைத்தாள். தனக்கு தகவல் கிடைத்திருக்கும் என்ற ஒரு நம்பிக்கை. ஆனால் அதே நம்பிக்கை தான் ஏமாற்றத்திற்கும் காரணம். அவனைப்  பின் தொடர்ந்து சென்ற  தாய் இவளுக்கு ஒன்றும் சொல்லியிருக்க மாட்டாளா? சின்ன வயதிலிருந்து, "நீதான் என் மருமகள்," என்று அழுத்தந்திருத்தமாகச்  சொன்னவள், தன மகன் இறந்ததை இவளுக்கு நிச்சயமாகத் தெரியப்படுத்தியிருப்பாள். அப்படி ஒரு தகவலும் வராததுதான் இவளுக்குப்  பெரிய ஏமாற்றம்.

தன்னை சுதாரித்துக்கொண்டாள். என்னவிதமான நினைப்புகள் இவை! தேவை இல்லாமல். ஏதாவது காரணமிருக்கும் கதிரின் மௌனத்திற்கு என்று தன்னைத்  தானே தேற்றிக்கொண்டாள்.

வேற்றூரில் இருக்கும் தன் தாய்க்கு போன் செய்து, குசலம் விசாரித்து, ஆபிஸிற்குக் கிளம்பினாள். தான் தனியாக இருப்பது தான் இந்த வேதனைக்குக் காரணம் என்ற ஒரு உணர்வு அவளைப் பிடித்துக்கொண்டது. தோழிகள் இருந்தால் தன் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். மன பளு இறங்கும். வேலைக்காக ஊரை விட்டு ஊர் வந்த அவளுக்கு அங்கு நெருக்கமான தோழமை இன்னும் அமையவில்லை. புதிதாக சந்தித்தவர்களிடம் பகிர்ந்துகொள்ள அவளுக்கு விருப்பமில்லை.

ஆபிசில் நுழைந்ததும் ஸ்ரீனி கண்ணில் தென்பட்டான். இன்று காலை அவனுடன் ஒரு வேலை விஷயமாக சந்திக்க வேண்டும் என்று நினைவிற்கு வந்தது. தன்  மேசையிலிருந்து குறித்து வைத்துக் கொண்டிருந்ததை கையில் எடுத்துக்கொண்டு அவன் அறைக்குச் சென்றாள். அறிமுகப்படுத்திக்கொண்ட பொழுது அவன் "நான் நியூ யார்க்கிலிருந்து வருகிறேன்" என்று சொன்னதும் அவள் கண்கள் அகண்டன.

"என் நண்பர் கதிர் என்பவரும் அங்கே தான் இருக்கிறார்... ஆனால் எங்கேன்னுதான் தெரியவில்லை." கண்கள் மங்கின.

"நிறைய இந்தியர்கள், தமிழர்கள் இருக்கிறார்கள்."

சற்றென்று வேலையைப் பற்றி பேச ஆரம்பித்தாள். முடிந்த பின் எழுந்த பொழுது, ஒரு ஏக்கத்துடன் கேட்டாள், "அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் ஏதாவது வழி?"

"பேஸ்புக்கில் இல்லையா?" அவள் தலையசைத்தாள்.

"ரொம்ப நெருங்கினவரா?"

அவள் கண்கள் அவனை வருத்தத்துடன் பார்த்தன. "தொடர்புகொள்ள வழியே இல்லையென்றால் எப்படி நினைத்துக்கொள்வது என்று தெரியவில்லை," என்ற அவள் மனக்கலக்கம் அவளையும் அறியாமல் வெளியே வந்து விட்டது. "சாரி, என்னையும் அறியாமல் எதையோ உளறி விட்டேன்."
ஸ்ரீனியின் பரிவான கேள்விதான் அவளை இப்படிப் பேசச் செய்தது என்று புரிந்துகொண்டாள். அவனிடம் சிறிது ஜாக்கிரதையாகவே பழகினாள்.

ஆனால் அவன் அவ்வப்பொழுது கதிரைப்பற்றிய விவரங்கள் அவளிடம் வாங்கிக்கொண்டான். தன்னால் முடிந்த வரை அவனைத் தேடுகிறான் என்று புரிந்துகொண்டாள். "நாங்கள் சிறு வயதிலிருந்து நண்பர்கள்..." அவன்  அவளைக் கண்களில் கேள்வியுடன் பார்த்தான். "அதற்கும் மேல் என்றே எடுத்துக்கொள்ளலாம். நியூ யார்க் போன பிறகு சில நாட்கள் விடாமல் தொடர்பு கொண்டான். ஆனால் போன சில மாதங்களாக ஒரு செய்தியும் இல்லை. இங்கு இருந்த அவன் தாயும் திடீரென்று ஒரு நாள் அங்கு கிளம்பிச் சென்று விட்டாள்."

அவனிடம் பேசப்பேச, தான் எவ்வளவு முட்டாள் என்பதை அறிந்து கொண்டாள். ஸ்ரீனி அவள் சொல்வதைக் காதுக் கொடுத்து கேட்டுக்கொள்வதே அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அவன் ஒருநாள், "உன்னை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை," என்று சொன்னதும் அவளுக்கு இடி விழுந்தாற்போல் இருந்தது.

"உன்னை ஒரு நண்பனென்று தான் பழகுகிறேன்."

"கதிரையே நினைத்திருப்பதால் உனக்கு நாம் எவ்வளவு நெருங்கி விட்டோமென்று தெரியவில்லை... அவன்... இதை நான் எப்படி சொல்வது..."

அவன் என்ன சொல்லப்போகிறான் என்று யூகித்த அவள், "அவனைப் பற்றி உனக்கொன்றும் தெரியாது...! ஏதும் பேசி என் மனதைக் கலைக்கப்பார்க்காதே!" என்றாள்.

"எனக்கு அவனை நன்றாகவே தெரியும்," என்று அவன் சொன்னதும் அவள் ஆடிப்போனாள். "அவன் இப்பொழுது வேலை விஷயமாகக் கலிஃபோர்னியா சென்று ஒரு வருடம் ஆகிறது. ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறான். அவனுக்காக நீ இங்கு ஏங்கிக்கொண்டு உன் வாழ்க்கையை வீணடிக்கிறாய். அவன் தாயும் அவனுடன் தான் இருக்கிறாள் ."

தலை சுற்றியது அவளுக்கு. தண்ணீர் கொடுத்து அவளைத் தாங்கி இருந்தான் ஸ்ரீனி.

இது எதிர்பார்த்ததுதான்  என்று  அவள் உள் மனம் உறுத்தியது. ஸ்ரீனியை நெருங்கித்தான் விட்டோம் என்றும் தோன்றியது. இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் வைராக்கியம் பிறந்ததால் ஸ்ரீனியை மணந்தாள்.

சந்தோசமாக இருந்தாள்.

செய்தித்தாளில் ஒரு நாள் ஒரு இளம் பெண், சுவர்ணா, தன் காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைப் படித்துச் சலனமடைந்தாள். "நீ இருந்திருக்காவிட்டால் எனக்கும் இந்த கதிதான்," என்று ஸ்ரீனியைக் கட்டிக்கொண்டாள்.

தன் மாஜிக்காதலி சுவர்ணா இப்படி ஒரு முடிவெடுத்துக்கொள்வாள்  என்று அவன் ஒரு பொழுதும் நினைக்கவில்லை! தன் கதையையே கதிரின் கதையாக கதைத்த ஸ்ரீனி தன் போட்டோ அந்த செய்தியுடன் வராததை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

Friday, July 1, 2016

தினம் ஒரு போராட்டம்

வைரம் போல் 
ஜொலிப்பேன் 
உன் கண்களைப்   
பறிப்பேன் 
கண் கூசுமென்று 
என்னைப் பூட்டாதே 
என் சுதந்திரத்தை 
நீ பறிக்காதே