அடுத்த வேளை நீருக்கு என்ன செய்வதென்று திணறினாள் ஈஸ்வரி. இன்று வந்த தண்ணீர் லாரியில் அவளால் இரண்டு நாளைக்கு வேண்டிய அளவுதான் பிடித்துக்கொள்ள முடிந்தது. மூன்றாவது நாள் வரவில்லையென்றால் என்ன செய்வது?
இதே கதைதான் ஊர் முழுக்க - தண்ணீர் பஞ்சம். எங்கெங்கேயோ வெள்ளம் வந்து பாதிக்கப் படுகிறார்கள் என்ற செய்தி மட்டும் வருகிறது. அந்த பாழாப்போன மழை இங்கு பெய்யக்கூடாதா?
பெருமூச்சு விட்டுக்கொண்டே, ஒவ்வொரு நொடியும் அவள் குடும்பத்தினர் செலவழிக்கும் நீரைக் கண்காணித்து வந்தாள். இரண்டு வருடமாக மழை காலை வாரி விட்டது. அதற்கு முன்னால் பெய்த மழை நீரை சரியாகச் சேகரிக்காதலால் எல்லாம் கடலில் சேர்ந்துவிட்டதாம்!
வெயில் காயும் வானத்தைக் கண்டு எத்தனை முறை, மழை வந்து தொலையக்கூ டாதா என்று கடிந்து கொண்டதுண்டு; ஐயோ பெய்ய மாட்டாயா என்று கெஞ்சியதுண்டு; ஏன் சோதிக்கிறாய் என்று கடவுளிடம் புலம்பியது உண்டு. காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைமை, இது நியாயமா !
சாலையில் செல்லும் போது நீரை இறைத்துக்கொண்டுபோகும் லாரிகளைக் கண்டாலே வயிறு பற்றி எரியும். தண்ணீர் பஞ்சம் இருக்கும் இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்கக்கூடாதா? தண்ணியை மிச்சப்ப படுத்தக்கூடாதா என்று லாரி ஓட்டுபவனை நிறுத்தி கேட்க வேண்டும் என்று தோன்றும்.
இந்த வருடமாவது பெய்யுமா என்று தினம் வானத்தைப் பார்ப்பதும், எல்லோரிடமும் அதைப் பற்றி சர்ச்சை செய்வதுமே ஜோலியாகி விட்டது.
பெய்யாது என்று சொன்ன மழை திடீரென்று அந்த நகரை விஜயம் செய்தது. ஈஸ்வரிக்கு தலைகால் புரியவில்லை. மண்வாசனை தூக்க, வெளியே ஆவலுடன் எட்டிப்பார்த்தாள். தூறல் ஆரம்பித்தவுடன் தன் குழந்தைகளுடன் வேகமாக வெளியே சென்று முதல் மழையின் இனிமையில் நனைந்தாள். இந்த முறை தண்ணீர் பிரச்னை தீரட்டும் என்று ஊர் ஜனங்களுடன் வேண்டிக்கொண்டாள்.
வீட்டுக்குள் நுழைந்தாள். கூரையிலிருந்து நீர் சொட்டியது. அதற்கடியில் பானை ஒன்றை வைத்தாள். விடா மழையில் அந்த பானையும் தான் எத்தனை தாங்கிக்கொள்ளும்? போறாததற்கு வெள்ளம் வேறு! சாலைகள் நதியாகின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன... சில இடங்களில் பாம்புகள் கூட நெளிந்து சென்றதாக வதந்திகள்.
ஐயோ, எப்படா சூரியனைப் பார்ப்போம், மழை போதுமடா சாமி! லாரியில் கூட தண்ணீர் வாங்கிவிடலாம் ஆனால் இந்த வெள்ளமாக ஓடும் நீரை சேமிக்கவும் முடியாமல் உபயோகிக்கவும் முடியாமல் திணறுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை!
ஈஸ்வரி வானத்தை நோக்கி சூரிய பகவான் அருள் புரிய வேண்டும், மறுபடியும் காட்சியளிக்க வேண்டும், மழை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் .