Saturday, November 18, 2017

பேசுவதும் கலை

"கொஞ்சம் நேரமாவது வாயை மூடேன்," என்று அம்மா கெஞ்சினாள் மகள் அஞ்சுவிடம்.

"இல்லைம்மா, இதை மட்டும் சொல்லிடறேன்...கேளேன்," என்று எதற்கும் மசியாத அஞ்சு தொடர்ந்தாள். தன்னையும் மிஞ்சி அம்மா சிரித்து விட்டாள். அதற்கு மேல், மகள் விளாவரியாக விளக்கி வரும் விஷயத்தை அதிகம் காது  கொடுத்துக்  கேட்கவில்லை ஆனால் புரிந்துகொண்டாள்.  "சரி, சரி, இப்பொழுதாவது உன் வேலையை கவனி," என்று அனுப்பிவைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் போனில் தன் தோழி ஒருத்தியுடன் முடிவே இல்லாமல் பேசுவதைக் கேட்டு, "போறாதா! நிறுத்து, படி," என்று இருந்த இடத்திலிருந்தே கூறினாள்.



தினம் நடக்கும் விஷயம் தான்.  முதல் பொழுதுபோக்கு என்ன என்று கேட்டால் அஞ்சு பளிச்சென்று, 'பேசுவது' என்றுதான் கூறுவாள். திருமணம் ஆகியும் அந்த குணம் மாறவில்லை. பாவம், கணவன் சுரேஷ் அதிகம் பேச மாட்டான். பாவம் என்று சொல்லக்கூடாது. பேசாமல் இருப்பது அவன் குணம், ஆனால்  அதற்காக பாவம் என்று ஆகி விடுமா என்ன? தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதைச் சொல்லாமல் சொல்லக்கூடியவன். அஞ்சு பேசுவாளே தவிர, விட்டுக்கொடுக்கும் சுபாவம். அவர்களுக்கு ஒத்துப்போனதற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் அவள் அதிகம் பேசுவதனால் அவன் பாவம் என்பது பொது எண்ணம். அவள் பேசுவதை அவனும் கூட குறைக்கப் பார்த்தான். "எதற்காக அதிகம் பேச வேண்டும்? அதனால் எத்தனை மனஸ்தாபங்கள்."

"என்னுடனா? யாருக்கு?" என்று அவள் முழிப்பாள். மனஸ்தாபங்கள் இல்லை என்று நிரூபிக்க முடியாது. ஆனால் அவளுக்கு அது தெரிந்து விட்டால் உடனே சமாதானம் செய்துகொண்டு விடுவாள். பிடிக்காவதர்களைத் தவிர்ப்பாளே தவிர சண்டைப் போடுவது அவள் பழக்கம் இல்லை. அதனால் சுரேஷ் இப்படி கூறும் பொழுது ஒன்றும் புரியாமல் முழிப்பாள்.

பக்கத்து வீட்டுப் பையன் இவளைப் பார்க்கும் போதெல்லாம் நின்று பேசுவான். அதுவும் சுரேஷுக்குப் பிடிக்காது. "ஜொள்ளு விடுகிறான்," என்று முகம் சுளிப்பான். "நீ அவனிடம் எதற்கு பேச்சு கொடுக்கிறாய்? நீ பேசுவதனால்தான் அவனும் உன்னுடன் பேசுகிறான். இந்த ஆண்பிள்ளைகளே இப்படித்தான்."

கல்யாணம் ஆன புதுசில் இப்படி ஏதாவது அவன் கூறினால் அவமானமாக இருக்கும். தான் தப்பு செய்கிறோமோ என்று தோணியிருக்கும். பத்து வருடங்களுக்குப் பிறகு என்ன கவலை? "நீயும் அப்படித்தானா?" என்று நமுட்டு சிரிப்புடன் கேட்டாள்.

"நான் என்றைக்கு இப்படிப் பேசியிருக்கிறேன்?" என்று அவனும் குறுநகையுடன் பதில் கொடுத்தான். "நீயும் கொறைத்துக்கொள் என்று தானே சொன்னேன்."

இதற்கு என்ன சொல்வது? மூச்சு விடுவதை நிறுத்து என்று சொன்னால் காதலில் கூட முடியாது? குடும்பம் நடத்திய இத்தனை வருடங்கள் கழித்து எதை எதிர்பார்ப்பது என்று தெரிய வேண்டாமா?

"அக்கா," என்று ஒரு நாள் அந்தப் பையன் வந்தான். சுரேஷ் அவளை நக்கலாகப்  பார்த்துவிட்டு உள்ளே சென்றான். "எனக்கு ஒரு உதவி வேண்டும்."

"சொல்லேன் பா," என்றாள்.

"எங்க ஆபீஸில் வெளிநாட்டிலிருந்து சிலர் வேலை விஷயமாக வந்திருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம். நடன நிகழ்ச்சி - நாட்டுப்புற ஆடல்கள். அதற்கு தொகுப்பாளி வேண்டும். சற்று விளக்க வேண்டும். சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும். நீங்கள் நன்றாகப்  பேசுகிறேள். உங்களால் முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது... செய்கிறீர்களா? சன்மானமாக எங்களால் முடிந்ததைக் கொடுப்போம்."

 சுரேஷ் இதைக் கேட்கிறானா என்று உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, "நிச்சயமாக," என்றாள்.

"இதெல்லாம் உனக்கெதற்கு? ஆயிரம் இரண்டாயிரத்திற்கு நீ இதை செய்ய வேண்டுமா என்ன?" என்று சுரேஷ் கேட்டான்.

ஆமாம் நீ சொல்வது சரிதான் என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, அவள் நடன நிகழ்ச்சியை நடத்தும் ஆடலாசிரியரைப் பார்த்து, அவர்கள் ஆடப்போகும் பாடல்களைப் பற்றிக் கேட்டுக்கொண்டு, அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து, அதை  அழகாகத் தொடுத்தாள்.

நிகழ்ச்சி முடிந்த பின் வெளி நாட்டைச் சேர்ந்த விருந்தாளி அவள் கயைக் குலுக்கி, "நீங்கள் விளக்கினதனால்தான் எங்களுக்கு இந்த நடனங்கள் அருமை புரிந்தது," என்று அவளைத் தனியாக வாழ்த்தினான்.

அந்த நடன ஆசிரியர் அஞ்சுவை அடிக்கடி தன் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அழைத்தான், சன்மானமாக அதற்கு தொகையும் கொடுத்தான்.

இனி யாராவது 'நீ அதிகம் பேசுகிறாய் என்றுதான் சொல்லிப் பார்க்கட்டுமே. "அதற்கு ஏற்ற மாதிரி சம்பாதிக்கவும் செய்கிறேன்," என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வாள்.

2 comments: