Monday, December 25, 2017

வெளிச்சத்தில் இருட்டு

பாதை ஒன்றே
கண்ணில் தெரியும்
எது ஆரம்பம் என்று
நினைவு இல்லை
இருட்டைக் கிழித்து
வெளிச்சத்தில் இருக்கும்
பாதை ஒன்றே
கண்ணில் தெரியும்

எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை
அதை எண்ணிப் பார்க்க
நெஞ்சில் வீரம் இல்லை
எதிரே இருக்கும் இருட்டு
அதை மறந்துப் போக 
எங்கே முடியும்
என்ற நினைப்பு இல்லை  

செல்லும் வழியும்
சீராக இல்லை
கரடுமுரடாய்
முள்ளும் மலருமாய்
வறுமையும் செழிப்புமாய்
தனிமையும் இனிமையுமாய்
செல்லும் வழியும்
சீராக இல்லை

இதில் கிடைக்கும் எதுவும் 
என்னுடையது இல்லை 
காயோ கனியோ 
இனிப்போ கசப்போ 
பொருளோ சுகமோ 
புகழோ இகழ்ச்சியோ 
இதில் கிடைக்கும் எதுவும் 
என்னுடையது இல்லை 

மறக்க முயலும் முடிவு 
முடிவா தொடக்கமா?
எதிரே தெரியும் இருட்டு 
வெறும் ஒரு திரையா?
இங்கே தெரியும் வெளிச்சம் 
மெய்யா பொய்யா?
மறக்க முயலும் முடிவு 
முடிவா தொடக்கமா?

வெளிச்சம் இருந்தும் 
இருட்டில் நிற்கிறேன் நான் 
பகட்டைக் கண்டு 
சிரிக்கிறேன் நான் 
ஒளியைக் கண்டு 
பதுங்குகிறேன் நான் 
வெளிச்சம் இருந்தும் 
இருட்டில் நிற்கிறேன் நான். 



Saturday, December 2, 2017

சிறுதுளி, பெருகும் உள்ளம்

மேகங்களின் மூட்டம் கிளப்பியது
மனதில் விளங்காத குதூகலம்

ஜில்லென்ற காற்று வீச
எதிர்பார்ப்பில் துள்ளியது மனம்