பொங்கி வரும் எண்ணங்களில் சிக்கிக் கொண்டு நின்றாள் பிரபா. அவளுடைய உயிர் தோழி கமலாவை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம், ஆனால் இப்பொழுது அவளை எந்த முகத்துடன் சந்திக்கப் போகிறோம் என்ற பயம் மறுபக்கம். பேசாமல் வந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் நழுவி விடலாமா என்று கூட ஒரு நொடி யோசித்து வெளியேறும் நோக்கத்துடன் சபையின் வாசற் கதவை ஏக்கத்துடன் பார்த்தாள். கமலா தன்னை பார்ப்பதற்கு முன் மெதுவாக வெளியேறிவிடலாம் என்று முற்படவும் செய்தாள்.