Sunday, January 14, 2018

சோதனை

பொங்கி வரும் எண்ணங்களில் சிக்கிக் கொண்டு நின்றாள் பிரபா. அவளுடைய உயிர் தோழி கமலாவை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம், ஆனால் இப்பொழுது அவளை எந்த முகத்துடன் சந்திக்கப் போகிறோம் என்ற பயம் மறுபக்கம். பேசாமல் வந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் நழுவி விடலாமா என்று கூட ஒரு நொடி யோசித்து வெளியேறும் நோக்கத்துடன் சபையின் வாசற் கதவை ஏக்கத்துடன் பார்த்தாள். கமலா தன்னை பார்ப்பதற்கு முன் மெதுவாக வெளியேறிவிடலாம் என்று முற்படவும் செய்தாள்.


"ஹேய் பிரபா, நீ எங்கே இருந்தாய்? உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். . கமலா மகள் மிகவும் நன்றாக ஆடினாள், இல்லை?" என்று பாரதி உற்சாகத்துடன் கேட்டாள்.

"ம்ம்ம்" என்று பிரபா சிரித்துக்கொண்டே மழுப்பி, "எங்கே கமலா?" என்று சமாளித்தாள்.

"அதோ இருக்கிறாள் பார்," என்று பாரதி முன்னே விரைந்தாள். கமலாவும் பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் தன்  தோழிகளைப் பார்த்து ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

"நன்றி, வந்ததற்கு," என்று கூறி, தன் மகளைக் கூப்பிட்டு அறிமுகப் படுத்தினாள் . "இவர்கள் இருவரும் என் பள்ளி காலத்திலிருந்து தோழிகள். பிரபாவும் நடனம் ஆடுவாள். இப்பொழுது நடனப்பள்ளி நடத்துகிறாள். நமஸ்காரம் செய்," என்றாள்.

வெளிநாட்டில் வளர்ந்திருந்தாலும் கமலாவின் மகள் ஆஹனாவிற்கு பண்பு தெரிந்திருந்தது. உடனே பிரபாவுக்கு வணங்க ஆயத்தம் ஆனாள்.

"ஐயோ, பரவாயில்லை... நானும் உனக்கு அம்மா மாதிரிதான்," என்று அன்புடன் ஆஹ்னாவைத் தடவிக் கொடுத்தாள்  பிரபா.

"எனக்கு நடனம் என்றாலே என்ன என்று தெரியாது. ஆனால் நீ ஆடுவதைப் பார்க்கும் பொழுது உற்சாகமாக இருக்கும். எனக்கு மகள் பிறந்தால் உன்னைப் போல ஆட வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் எப்பொழுதும் இருந்தது... இவள் பிறந்ததும், நிச்சயமாக என் கனவை நிறைவேற்றி விட வேண்டும் என்ற வெறிதான், பிரபா," என்று கமலா கூறும் பொழுது பிரபாவிற்கு சங்கடமாக இருந்தது. "எப்படி ஆடினாள்," என்று பிரபா எந்தக் கேள்விக்கு பயந்து இங்கிருந்து விரையப் பார்த்தாளோ அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டாள் கமலா.

முகத்தில் புன்னகை மாறாமல், "மேலே மேலே நிறைய உழைத்து நன்றாக வரவேண்டும்," என்று பதில் சொல்லாமல் சொல்லிப் பிழைத்துக் கொண்டாள் பிரபா. தாயும் மகளும் புன்னகை புரிந்த விதத்தில் அவர்களுக்கு இந்த பதில் திருப்தி அளித்ததை நினைத்து நிம்மதி மூச்சு விட்டாள் .

என்ன செய்ய? எல்லோரும் புகழும் பொழுது "இன்னும் மேடை ஏறும் அளவுக்கு உனக்குபயிற்சி போறாது," என்று கூறினால் இவள் பொறாமையில் பேசுவது போல் தானே தோன்றும்? தன் தோழியின் மனதையும் புண் படுத்தும்.

அதே நேரத்தில் பொய்யாகப் புகழ வாய் வரவில்லையே! தான் நினைத்ததை ஆசியாக மாற்றி, தன் பொறுப்பையும் நிறைவேற்றி, அதே நேரத்தில் மனஸ்தாபம் ஏற்படுத்தாமல் இந்த நிலைமையிலிருந்து வெளியே வந்ததற்குத் தன்னையே பாராட்டிக் கொண்டாள்.






2 comments:

  1. சவாலை சமாளிக்கும் சாமர்த்தியம்; நேர்மறை உளவியல்!!

    ReplyDelete