மதுக்கு வேலைக்கு ஆள் அமைந்தது ஒரு பெரிய திருப்தி. புது இடத்துக்கு வந்த பிறகு அது தான் முதல் கவலை. அக்கம் பக்கத்தில் வேலை செய்பவர்களுடைய நேரம் ஒத்து வரவில்லை. எப்படியோ வலைவீசி சிக்கினாள் குமுதா என்று ஒருவள். சற்று தள்ளி வீடு என்பதால் ஒரே வேளைதான் வருவாள், சற்று தாமதமாக வந்து, இருந்து முடித்துவிட்டு போவதாகச் சொன்னாள். ஏதோ ஒன்று, வேலை நடந்தால் போதும் என்றிருந்தது. வயதான தாயுடன் தனியாக இருக்கும் மது எனும் மதுவந்திக்கு அறுபது வயதில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது கடினமாக இருந்தது.