Sunday, January 20, 2019

தங்கமே தங்கம்

மதுக்கு வேலைக்கு ஆள் அமைந்தது ஒரு பெரிய திருப்தி. புது இடத்துக்கு வந்த பிறகு அது தான் முதல் கவலை. அக்கம் பக்கத்தில் வேலை செய்பவர்களுடைய நேரம் ஒத்து வரவில்லை.  எப்படியோ வலைவீசி சிக்கினாள் குமுதா என்று ஒருவள். சற்று தள்ளி வீடு என்பதால் ஒரே வேளைதான் வருவாள், சற்று தாமதமாக வந்து, இருந்து முடித்துவிட்டு போவதாகச் சொன்னாள். ஏதோ ஒன்று, வேலை நடந்தால் போதும் என்றிருந்தது. வயதான தாயுடன் தனியாக இருக்கும் மது எனும் மதுவந்திக்கு அறுபது வயதில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது கடினமாக இருந்தது.



அடுத்ததாக ட்யூஷன் ஆரம்பித்தாள். எதிர் வீட்டில் இருக்கும் பதினைந்து வயது பிரக்யா தான் முதல் மாணவி. 'மாமி,  மாமி' என்று சுற்றி வரத்தொடங்கினாள். மதுக்கு அவளிடம் பணம் வாங்க மனம் வரவில்லை. "யூ ஆர் சோ ஸ்வீட், மாமி," என்று மதுவைக் கட்டிக்கொண்டாள்.

ட்யூஷன் நேரம் தவிர மற்ற நேரங்களிலும் இங்கேயே இருப்பாள். அவள் வயது பெண்கள் யாரும் அவர்கள் வசிக்கும் இடத்தில் இல்லை. வயதானவர்கள் தான் என்பதால் அந்தப் பெண் எப்பொழுதும் வீட்டிலேயே அடைந்து கிடந்தாளோ என்னவோ. மதுவிடம் அப்படி அன்பாகப் பழக ஆரம்பித்தாள். சில நேரங்களில் கட்டிக்கொள்வாள். அன்புக்கு ஏங்குவதாகத் தோன்றியது மதுக்கு.

பணம் கொடுக்காததனாலோ அல்லது அன்பினாலோ வீட்டு வேலைகளில் உதவியும் செய்தாள். மதுக்கு பலமாக இருந்ததில் அவளுக்கும் அந்தப் பெண் மீது அன்பு அதிகரித்தது. சேர்ந்து வெளியே செல்வது, படங்களுக்கு போவது, ஷாப்பிங் செய்வது...

குழந்தைத்தனம் மாறாத குணம் பிரக்யாக்கு. மது எது செய்தாலும் வியந்து போவாள். மதுவுடைய இறந்து போன கணவன், தொலைவில் இருக்கும் மகள் என்று எல்லோரைப் பற்றியம்  அவளுக்குக் கேட்க மிகவும் பிடிக்கும்.

மதுவும் பிரக்யா வரவை எதிர்பார்க்கத் தொடங்கினாள். ப்ரக்யாவின் தாய் நர்மதாவும் நன்றி எண்ணத்தில் பொங்கி வந்தாள். "வயதுக்கு வந்த பெண். தவறான பழக்கத்துனால ஏடாகூடமா ஏதாவது செய்வாளோன்னு பயந்துகிட்டிருந்தேன். உங்க கூட இருக்கறது எனக்கு பரம திருப்தி," என்றாள். "உற்சாகமா இருக்கா... முன்னெல்லாம் எப்பவும் எதையோ பறிகொடுத்தவள் போல இருப்பாள்," என்று குறலைத் தாழ்த்தி நர்மதா கூறினாள்.

"அம்மா, கிளம்பட்டமா?" என்று தன் வேலையை முடித்த குமுதா குரல் கொடுத்தாள்.

"மாடி உள்ள சுத்தம் செஞ்சியா? ஒரு நிமிஷம், காபி கொண்டு வரேன், நர்மதா," என்று பேசிக்கொண்டே மது சமயலறைக்குச் சென்றாள். "குமுதா, கேக்க மறந்துட்டேன் பார். என்னுடைய துப்பட்டா ஒண்ணு  நேத்து கிடைக்கல. பச்சை கலர். பெருக்கறச்சே பார்த்தியா?"

குமுதா முகம் லேசாக மாறியது. "இல்லை," என்ற ஒரே சொல்லுடன் நிறுத்திக் கொண்டாள்.

"பிரக்யா வந்தா கொஞ்சம் தேடித் தர சொல்லு, நர்மதா. நான் கை மறதியா வெக்கறத எல்லாம் பிரக்யா தான் தேடி தரா," என்று கூறினாள் மது. "வயசாக ஆக மரதி ஜாஸ்தி ஆயிடறது..."

"அப்ப நான் கிளம்பட்டமா மா?" என்று குமுதா மீண்டும் கேட்டாள்.

"ம்ம்ம் சரி..." என்று மது அவளை அனுப்பி, கதவைப் பூட்டினாள். காபியைத்  தன் தாய்க்கு கொடுத்து, பின் நர்மதாவுடன் அவளும் அருந்தினாள். "வேற ஆள் பார்க்கணுமான்னு தெரியல. கொஞ்ச நாளா நிறைய சின்ன சின்ன பொருள்கள் கூட தேட வேண்டியிருக்கு - காபி தூளே சீக்கிரம் தீந்துடறது. அதைவிட ரெண்டு மூணு மோதிரங்களும் சங்கிலியும் காணோம்."

நர்மதா பதற்றமடைந்தாள். "என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றேள்!"

"எல்லாம் பீத்த பொறுக்கு தான். தங்கமோ வைரமோ இல்லை. ஆனா காணல, அது தான் முக்கியம்... காணோம்னு சொல்லவும் முடியல. ஏன்னா, ஒண்ணு ரெண்டு நாள்ல கிடைச்சிடறது. போட்டுண்டு திருப்பி வைக்கறாளான்னு தெரியல. இல்ல நான்தான் கைமறதியா வெக்கறேனா, ஒண்ணும் புரியல. வேல நன்னா செய்யறா அதனால அவசர பட்டு ஒண்ணும் சொல்ல வேண்டாம்னு பார்க்கறேன்."

"அதுவும் சரிதான். வேலைக்கு ஆள் கிடைக்கறதே கஷ்டமா இருக்கு," என்று நர்மதாவும் ஆமாம் பாட்டு பாடினாள். "பிரக்யாவை  நான் என்ன அனுப்பறது? அவளே வீட்டுக்குள்ள நுழையறது கூட கிடையாது," என்று சிரித்துக்கொண்டே கிளம்பினாள்.

பிரக்யா சிறிது நேரத்திலே வந்தாள். "துப்பட்டா காணமா? இதோ தேடறேன்," என்று கூறி மாடி உள்ளுக்குச் சென்றாள். ஆனால் நன்றாக அலசியும் அது கிடைக்கவில்லை. "பட்டா, மாமி? புடவைகளோட இருக்குமா?"

"அங்க வைக்கறதுக்கு வாய்ப்பே இல்லையே," என்று மது கூறிவிட்டு, "சரி வா. அடை சாப்பிடறயா?" என்று கீழே அழைத்து வந்தாள்.

"கிடைச்சுதாம்மா?" என்று மறுநாள் குமுதா கேட்டாள்.

"இல்லை.... நீ பெருக்கறச்சே மறுபடியும் பாரேன்."

சிறிது நேரத்தில் குமுதா கீழே வந்தாள், "இடுக்குல இருந்துச்சு. இதுவா பாருங்க?" என்று கேட்டாள்.

"ஆமாம்... பிரக்யா கூட தேடினாளே..." என்று கூறினாள். அவளுக்கு குமுதாவே திருப்பி எடுத்து வந்து கிடைத்ததாக நடிக்கிறாளோ என்று தோன்றியது. ஒரு பொருள் கிடைக்கவில்லை என்று தேடியதால் கிடைத்தது. தான் கவனிக்காமல் எவ்வளவு பொருட்கள் போயே போச்சோ என்ற சந்தேகம் தோன்றியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெதுவாக உள்ளை சரி செய்யும் சாக்கில் ஆராய ஆரம்பித்தாள். ஆனால் எல்லாம் நினைவும் இருப்பதில்லையே! சில நேரங்களில் ஒரு பொருளை எடுத்தால் பழைய நினைவுகளால் மிதந்து செய்ய வந்ததை வேறு மறந்துவிடுவாள். சில மறந்து போன பொருட்கள் அதிசயமாக முன்னே வர, மேலே ஏறி வர முடியாத தாயிடம் எடுத்துச் சென்று பேசுவதில் அன்றைய பொழுது கழிந்துவிடும். டியூஷனுக்கு மாணவர்கள் வந்த உடன், அவர்களுடன் உட்கார்ந்தது, பின் இரவு சாப்பாடு. மாடி ஏறி போகும் போது உள் களேபரமாக இருக்கும். அப்படியே நகர்த்தி வைத்து தூங்குவாள். காலையில் குமுதா வரும் முன் எல்லாவற்றையும் ஒழிக்க முடியாது, அதனால் முடிந்ததை சரி பார்த்து, மீதியை அலமாரியில் அவசரமாக அடைப்பாள். இப்படி செய்யும் போது எதை எல்லாம் துலைக்கிறோமோ என்ற நினைப்பு வந்து அதை செய்வதை நிறுத்தினாள். போனது போனதுதான், இனியாவது எல்லாவற்றையும் ஒழுங்காக வைப்போம் என்று நினைத்துக்கொண்டாள்.

ஆனாலும், ஒரு நாள் ஒரு தங்கச் சங்கிலியை காணவில்லை. இன்னொரு நாள் ஒரு மோதிரம் துலைந்தது. பிரக்யாவும் அவளும் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. குமுதாவிடம் கேட்ட பொது அவளுக்கு கோபம் வந்தது. "நான் பத்து  வருஷமா வீட்டு வேலை செய்து வரேன், ஒரு நாளும் என் மேல சந்தேகம் வந்ததில்லை. இனிமேல் நான் வர மாட்டேன்," என்று போக இருந்தவளை கராறாகத் தடுத்தாள். "வீட்டு அட்ரெஸ்ஸ குடுத்துட்டு போ. போலீஸ் வரும்," என்றாள் மது. "இப்படி வீராப்பா பேசி நழுவலாம்னு நினைக்காத. முன்னால எப்படி பொருட்களை எனக்கு தெரியாம திருப்பி கொண்டு வந்தையோ, அப்படியே இதையும் செய்."

குமுதா அழ தொடங்கினாள். "ஏழைங்கறதுனால என்ன இப்படி நீங்க சந்தேகப்  படறது சரியில்லை."

ஆனால் மது மனம் இறங்கவில்லை. "நாளைக்கு நீ வர, எடுத்துட்டு வர. அப்புறம் வேலைலேர்ந்து நின்னுக்கோ. ஆனா வரலைன்னா நிச்சயமா போலீஸ் தான்."

குமுதா ஒப்பாரி வைத்தாள், "இல்லாததை கொண்டுவான்னா எப்படி கொண்டு வருவேன்..."

"அதுக்குள்ள வித்துட்டயா?"

தலையில் அடித்துக்கொண்டாள் குமுதா. மதுக்கு கோபம் அதிகரித்தது. "இந்த நாடகம் எல்லாம் வேண்டாம்!" என்று விரட்டினாள்.

மறுநாள் அவள்  வருவாள் என்று மது எதிர்பார்க்கவில்லை. "நான் ஒன்றும் செய்யவில்லை. உங்களுக்கே கிடைக்கும். கிடைச்சா சொல்லுங்க, நான் வேலைய விட்டு நின்னுடுவேன்," என்றாள் குமுதா.

கிடைத்தாலும் இவள்தானே கொண்டுவந்து வைப்பாள் என்று நினைத்துக் கொண்டாள் மது. நாம் விழிப்புடன் இருக்கிறோம் என்று அறிந்து ஜாக்கிரதையாக இருப்பாள்.

பிரக்யா மெதுவாகக் கேட்டாள், "நான் பார்க்கட்டுமா மாமி?"

"அவளே சொல்லுவா, விடு," என்று மது அவளைத் தடுத்தாள். தினம் 'கிடைத்துவிட்டது,' என்று குமுதா கூறுவாள் என்று எதிர்பார்த்தாள் மது. குமுதா சஞ்சலப்படுவது தெரிந்தது ஆனால் எதிர்பார்த்த செய்தி வரவில்லை. கடைசியில் போலீஸைக் கூப்பிடுவதா வேண்டாமா என்று குழம்பி நர்மதாவிடம்  தன் குழப்பத்தைப் பகிர்ந்தாள்.

"போலீசுக்கு சொல்றது நல்லது... இல்லைன்னா அடுத்த வீட்டுக்கு போய் மறுபடியும் திருடுவா..." என்று நர்மதாவும் தூண்டிவிட்டாள்.

ஆனால் அதிசயமாக அவளுடைய தாய் தடுத்தாள். "உன் தவறுதான். இப்ப போலீஸ் வேண்டாம்...சும்மா இரு," என்றாள். மகளுக்கும் தாய்க்கும் வாக்குவாதம் வளரவே, நர்மதா மௌனமாக வெளியேறினாள். "ரெண்டு நாள் பொறுத்திரு, இதப்பத்தி பேசாத. கிடைக்கறதா இல்லையா பார்."

அவள் தாய் சொன்னது போலவே ஒரு சில நாட்களில் நகை கிடைத்தும் விட்டது. சாதாரண நகைகள் வைக்கும் இடத்தில் இருந்தது. குழம்பிபோய் தன் தாயிடம் கேட்டாள் மது, "உனக்கு தெரியுமா இது வீட்டுக்குள்ளதான் இருந்ததுன்னு?"

"இது வீட்டுக்குள்ள இல்ல. இன்னிக்குதான் வந்திருக்கு."

"என்னம்மா சொல்றே? உனக்கு எப்படி தெரியும்?"

"உனக்கு தெரியாது தான். மாமி, மாமின்னு உன்ன சுத்தி சுத்தி வந்து மயக்கிட்டா," என்று அவளுடைய தாய் சொன்னது மதுவை ஒரு நொடி குழப்பியது. "சின்ன சின்ன பொருள்தானேன்னு சொல்லாம இருந்தேன்... ஆனா இப்ப தங்கத்தையே திருடினா, அதுனால அவளை எச்சரித்தேன். இனிமே இங்க வர மாட்டான்னு நினைக்கிறேன்."

மது கண்கள் நிரம்பின. "போலீஸ்?"

"சின்ன பொண்ணு, விட்டுடு," என்று தாய் கூறினாள். "அவ அம்மாகிட்ட சொல்லி அவளை கவனிக்கச் சொல்லு, போதும்..."

தங்கம் கிடைத்துவிட்டது, ஆனால் அதில் இழந்தது அதைவிட மேலான ஒன்று, நம்பிக்கை. நன்றாக வேலை செய்யும் குமுதாவை துலைத்தாள், ஆனால் அதைவிட, அநியாயமாக பழி சுமற்றி வாழ்நாள் முழுதும் மனதில் குற்ற உணர்வை சுமையாகப் பெற்றாள்.



1 comment:

  1. இந்த சிறுகதை படித்தவுடன் என்னுடைய பழய கதை ஒன்று ஞாபகம் வந்தது. மது மாதிரியே ஒரு மீனாட்சி மாமி என் அப்பா அம்மா வீட்டின் எதிரே இருந்தார். அவா வீட்டிலும் ஒரு வெள்ளி பாத்திரம் யாரோ ஒரு சின்ன பய்யன் திருடிட்டேன். போலீஸ் வந்து தகராறு. அந்த பயனை மீனாட்சி மாமி மன்னித்து விட்டு, சாந்தமா உபதேசம் போட்டு சொன்னார்.

    இன்னும் பசுமை நிறைந்த அந்த நினைவுகள்.

    ஒரு பெரு கதை எழுதுங்கோ மீரா அம்மாஜி.

    🙏🙏🙏🙏

    ReplyDelete