Saturday, January 25, 2020

நீயா நானா

எனக்கு நிகர் யார்?
என் அறிவும் அழகும்
இதற்கு இணை உள்ளாரோ யாரும்?
இந்த பூமி எனக்கு மட்டுமே
இங்கு வியாபிக்கும் அனைவருமே
அனைத்துமே இருப்பது எனக்காகவே.


அதோ சீரும் சிங்கம்
பாயும் புலி
நீந்தும் மீன்
பறக்கும் பறவை
குலுங்கி பூக்கும் மலர்கள்
சுவையான காய் கனிகள்
வளர்ந்து நிற்கும் மரம்
பசுமையான செடி கொடிகள்
அதில் குடியிருக்கும்
பூச்சி பொட்டுகள்
தேனைச் சேகரிக்கும் தேனீ
கூட்டில் கசியும் தேன்.

இவை எல்லாம்
என் காலடியில்
நினைத்தால் அழிக்கும் வலிமை
நினைக்காமல் அழிக்கும் திறமை
ஹா! படைத்தவனையே
படைத்தவனும் நான் அல்லவோ ?

என் நம்பிக்கையே
உனக்கு  அஸ்திவாரம்
அப்படி இருக்க நீ
படைத்தவையும் என்னுடையதே
என்னுடைய உணவு
என்னுடைய ஆடை
என்னுடைய மருந்து
படைக்கப்பட்டிருப்பதும்  அதற்காகத்தானே?
அதை அழிப்பது என் பிறப்புரிமை
உச்சியில் நிற்கும்
எனக்கு மட்டுமே
சொந்தம் இந்த பூலோகம்.

இதில் வாழும் உரிமை
அளிப்பேன் நான் மட்டுமே
நான், நான் மட்டுமே...
என்னுடையது எதோ
அது மட்டுமே
உயரங்களை தொட்டவன் நான்.

உன் ஆலயத்திற்கும்
மேலே பல படிகள்
சென்றவன் நான்
உன் படைப்புகளை அழித்து
உலகெங்கும் என் கைவண்ணம்
மட்டுமே நிலைநாட்டுவேன்
உன் படைப்பிலேயே
சிறந்தவன் நான்
உன்னையும் மிஞ்சுவேன்
நீயும் நானும் ஒன்று
ஆன பின் நீ எதற்கு
என்று உன்னையும் ஒழிப்பேன்.


No comments:

Post a Comment