Tuesday, February 11, 2014

ஆதர்ச தம்பதி

"என்ன!" கோமதியும் விவேக்கும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். பக்கத்தில் இருந்த மற்ற போட்டியிட்ட தம்பதிகளின் கண்களில் பொறாமை தெரிந்தது. மனைவிமார்கள் தங்கள் கணவர்களைபார்த்து முணுமுணுத்தார்கள், "கவனிச்சாத் தானே எனக்குப் பிடிச்சது என்னன்னு  தெரியும்! வேல, இல்ல பாழாபோன நியூஸ் பேப்பர், இல்ல டிவி - இதுலயே சொழண்டுன்றிருந்தா எப்படி!"

சில கணவர்கள் முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது. "மக்காவே இரு! எப்போதும் சமயக்கட்டு, கொழந்தைங்க, ஊர் வம்பு...! ஒரு நாளாவது எனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு கவனிச்சிருக்கயா?" மனைவிகளைக் கண்டித்தனர்.

எல்லார் மனதிலும் ஒரே கேள்வி - இந்த தம்பதிகள் மட்டும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்துகொண்டிருக்கிறார்கள்! ஒரு கேள்விக்குக்கூட தவறாக  பதில் சொல்லவில்லையே!

பரிசு வாங்கிக்கொண்டு கோமதியும் விவேக்கும் வெளியேறினார்கள். மற்றவர்கள் முன்னிருந்த புன்னகை மறைந்தது. "இது நமக்கு இப்போ தேவையா?" விவேக் அலுத்துக்கொண்டான்.

"எல்லாம் உங்க வேலைதான்!" கோமதி நறுக்கென்று பதிலளித்தாள். "இப்போ இந்த தம்பதிகளுக்கான விடுமுறை பரிசுத் தொகைய என்ன செய்யறது? உங்க தங்கச்சிக்கு வேணும்னா குடுத்துடுங்க," என்ற கேள்வியும் கேட்டு பதிலும் சொன்னாள்.

விவேக் மௌனம் சாதித்தான். திடீரென்று ஏதோ தோணி நகைத்தான். "நம்ப எந்த விஷயத்துக்கெல்லாம் சண்டை போடுவோமோ, அதையே வெச்சு கேள்விகள் வந்தது ஆச்சர்யம் தான்."

கோமதியும் சிரித்தாள். "இல்லன்னா உங்களுக்கு என்ன தெரியும் என்னப்பத்தி."

"குத்திக்காட்டணமா இப்போ? அதுதான் பிரியறதுன்னு முடிவு செஞ்சிட்டோமே!"

"என்னமோ நான் மட்டும் தான் டிவோர்ஸ் கேட்டா மாதிரியும், உங்களுக்கு ரொம்ப என் கூட குடும்பம் நடத்த இஷ்டம் போலவும் சொல்லாதீங்க!" எச்சரித்தாள் கோமதி.

'உன் தொல்ல தாங்காம கேட்டேன்னு' சொன்னால் வண்டியிலேயே கொன்றுபபோட்டு விடுவாள் என்று அறிந்த அவன் வாயை மூடிக்கொண்டு கோமதியை அவள் பிறந்த வீட்டில் விட்டு விட்டு, "லாயர் இன்னும் ஒரு மாசத்துல டிவோர்ஸ் வந்திடும்னு சொல்லிட்டார்," என்றான். "அப்போ இந்த விடுமுறைப் பரிச என் தங்கைக்குக் கொ டுத்துடட்டுமா?" என்று கேட்டு, அவள் அனுமதிபபெற்று கிளம்பினான்.



2 comments:

  1. So sad. Your stories always portray ground realities. But this one is too shocking and sad to believe.

    ReplyDelete
    Replies
    1. Thank you for your feedback. Unfortunately, this story is also inspired by a true story. It differs in details but not in the actual underlying concept.

      Delete