Sunday, March 23, 2014

குடும்பத்தில் ஒருவன்


"இன்னிக்கு லேட் ஆயிடும் ஆபிச்ல. உனக்கெப்படி? குட்டிய ஸ்கூல்லேர்ந்து பிக் அப் பண்ணிக்கறையா?" சௌம்யா ரகுவைக்கேட்டாள்.

"ஒரு கால் இருக்கு. பரவா இல்ல. வீட்லேர்ந்து நான் மானேஜ் பண்ணிக்கறேன்," அவன் ஆசுவாசம் கொடுத்தான்.

இன்றைக்கும் வெளிச்சாப்பாடுதான் என்று நொந்துக்கொண்டாள் சௌம்யா. ஆனால் காலையில் நேரம் இல்லை இரவுக்கும் சேர்த்து சமைக்க.

"நீயும் ஒரு சாதமாவது பண்ண கத்துகோயேன், சௌகரியமா இருக்கும்," என்று இரவு ரகுவிடம் பிரஸ்தாபித்தாள். அவன் முறைத்தான். "நான் என்ன சப்பாத்தியா பண்ண சொல்றேன்," என்று முகம் சுளித்தாள்.

மறுநாள் தன் தோழியிடம் இதைச்சொன்ன பொழுது, அவள் விளையாட்டாக இடித்டுக்கேட்டாள், "ஏய், ரொம்பதாண்டி உனக்கு! இவ்வளவு தூரம் ஒத்தாசையா இருக்காரே! சந்தோசப்படு. ரொம்ப ஆசைய வளர்த்துக்காதே! என் வீட்டுக்காரர்ட்ட இப்படி வேலைகள சொன்னா, பேசாம வேலைய விடுன்னு அடக்கிடுவார்."

இப்படியும் உலகம் இருக்கும் என்று தெரியாதவள் இல்லை சௌம்யா. அதனால்தான் நல்ல வேலையில் இருக்கும் அவள் தனக்கு கல்யாணமே வேண்டாம் என்றிருந்தாள். ரகு அவள் கட்டிய கோட்டையையே உடைத்து உள்ளே புகுர்ந்தது மட்டுமில்லாமல், அவள் பயப்பட்டதற்கு மாறாக, அவளுக்கு ஒரு பெரிய ஊன்றுக்கொலாக இருந்தான். அவன் சமைக்காதது அவளை ஒன்றும் பெரியதாக பாதிக்கவில்லை, ஆனால் அடிக்கடி வெளியில் சாப்பிடுவதை தடுக்கலாமே என்பதுதான் அவள் எண்ணம்.

அவன் நிஜமாகவே சமையல் கற்றுக்கொள்வான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. ஒரு நாள் காலை அவள் தாமதமாக எழுந்துக்கொண்டு பார்த்தால், அவன் அடுப்படியில் நின்றுக்கொண்டு தோசை சுட்டுக்கொண்டிருந்தான்! "நேத்து சௌம்யா ரொம்ப லேட்டா வந்து படுத்தாள். அதான் நான் இன்னிக்கு சன்டே ஆச்சே, ஒரு இனிய அதிர்ச்சி தரலாம்னு ப்ரெக்பச்ட் செஞ்சின்டிருக்கேன்னு," யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தான். இவள் வருவதைப்பார்த்து, "இந்தா, சௌம்யா வந்துட்டா. நீ அவள்ட்டயே பேசு," என்று போனை சௌம்யாவிடம் கொடுத்து, 'அம்மா' என்று வாயசைத்தான்.

"சொல்லுங்க அத்தை," என்று சௌம்யா சந்தோசமாக பேச, "நன்னா இருக்குடி! என் மகன், அவன் கம்பெனில பெரிய போஸ்ட்ல இருக்கான். வீட்ல அவன சமையக்காரனாக்கிட்டயே !" என்று மாமியார் நறுக்கென்று கேட்பாள் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. கண்களில் நீர் பொங்கியது. அதை கவனித்த ரகு, "அப்பறம் பேசறேன்," என்று போனை வைத்தான்.

அவன் முகத்தில் எழுந்த கேள்விக்குறிக்கு அவள் பதில் என்ன சொல்வதென்றரியாமல் திணற, அவனே யூகித்துக்கொண்டான்.

"மொத்தத்துல என்னை என் வீட்லயே விருந்தாளியா இருக்கசொல்றாங்க அம்மா! இதையே அப்பா இப்படி இருக்கறச்சே, மனுஷன் இந்த வீட்ட சத்ரமா நினைக்கரார்னு ஏசிய நாட்களும் உண்டு. நீ விடு, தோச நன்னா வந்திருக்கான்னு சொல்லு," என்று பெருமையாக அவளுக்கு உபசரித்தான்.    


No comments:

Post a Comment