Saturday, July 19, 2014

சிதறிய பூக்கள் - சிறுகதை - பாகம் 2


காவ்யா குழந்தைகளை தன் தந்தை வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்தாள். கேதாருக்கு அன்று மாலை தொலைபேசியில் தகவல் சொன்னாள்.

"என்ன? உன் தந்தை வீட்டிற்கா? அதான் உறவு இல்லைன்னு முருக்கிகிட்டார் இல்ல? இப்போ என்ன கரிசனம்?"

"நீங்க ராணியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரப்ப நான் எங்க போவேன்?" என்று அவள் சுட்டிக்காட்டினாள்.

"இங்கேயே பக்கத்துல எங்கையாவது வீடு பாத்துக்க. எனக்கு குழந்தைகள வாரத்துல ஒரு நாள் பார்க்கறத்துக்கு அனுமதி உண்டு. அத நான் உன் அப்பன் வீட்டில வந்து பார்க்க மாட்டேன்."

காவ்யா ச்தம்பித்துவிட்டாள். "நான் கூட்டிட்டு வரேன்."

கேதார் முதலில் மௌனமாக இருந்தான். "உங்கப்பனையே செலவுகளையும் பார்த்துக்க சொல்லு," என்று கூறி தொடர்பை துண்டித்தான்.

காவ்யா பிரமித்துப்போனாள். அவள் விவாகரத்திற்கு பிறகு எங்கே வாழ வேண்டும் என்ற சுதந்திரம் கூட போய் விட்டதா? தன் தந்தைக்கு உடனே விஷயத்தைச் சொன்னாள்.

அவர் கோபம் இன்னும் பயத்தைக் கொடுத்தது. "என்ன! அவன் இதை சாக்காக  காட்டி தப்பிக்க பார்க்கிறான்! நீ வா. அப்படி ஏதாவது பிரச்சன பண்ணினான்னா கோர்ட்ல பாத்துக்கலாம்."

தன் தந்தை சொன்ன வார்த்தைகள் ஆறுதலை கொடுத்தாலும், கேதார் ஏதோ திட்டத்தோடு செயல் படுவது புரிந்தது காவ்யாவிற்கு.  அவன்  ஏன் மாறிவிட்டான்?  இல்லை, அவன் எப்பவுமே இப்படித்தான். ஆனால் விட்டுக்கொடுத்து பழகிவிட்டதால் அது பெரிய விஷயமாக அப்பொழுது தெரியவில்லை. இப்பவும் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பி வாழ்க்கையை தொடர்ந்தாள்.

அவன் மிரட்டினாற்போல் பள்ளிக்கூடத்தில் பணம் கட்ட மறுத்தப்பொழுது அவள் தந்தை வானம் பூமி ஒன்றாக்கி, நீதிமன்றம் மூலம் அவனை மடக்கினார். இது எப்படி பாதிக்குமோ என்று நினைத்த காவ்யாவிற்கு பதில் மறுநாளே கிடைத்தது. "அதிதி இடம் போன குடு," என்று அந்த எட்டு வயது குழந்தையை தூதாக உபயோகிக்க ஆரம்பித்தான்.

சுர்ரென்று மனதில் பொறாமை தலை எடுத்தது. ச்சீ! மகளிடம் பொறாமையா? "என்ன சொன்னார் அப்பா?" அதிதி போனை வைத்தப்பின் கேட்டாள், "ஒண்ணுமில்லை," என்று அந்தப்பெண் தந்தை தனக்கு கொடுத்த பொறுப்பில் பூரித்து மிதப்பாள். தாய் வாய் திறந்து ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.

தாயிடம், "ரொம்ப குண்டா இருக்க, அதுனாலத்தான் அப்பா நம்மை விட்டு போயிட்டார்," என்று ஒரு நாள் அவள் சொன்னதும் அதிர்ச்சியடைந்தாள். மகளிடம் சொல்லவேண்டிய விஷயமா இது? "அம்மா, நீ ஒடம்ப கொரச்சா அப்பா திரும்பிவந்திடுவாங்களா?" என்று தெனாவட்டாக போன மகள் பரிதாபமாக கேட்கும் பொழுது மனம் உருகினாள். என்ன சொல்லி இந்த பிஞ்சு மனதைத்  தேற்றி விடுவது என்று அறியாமல் தன் மகளை மார்புடன் அணைத்துக்கொண்டாள்.

பாகம் 1
பாகம் 3


No comments:

Post a Comment