Saturday, July 26, 2014

சிதறியப் பூக்கள் - பாகம் 3

"ஹாய் காவ்யா! என்ன, ஜாக்பாட் அடிச்சிருக்க போல இருக்கு?" என்று நயனா கேட்டாள். அவள் மகள் கீர்தி அதிதியின் வகுப்பில் படித்தாள். என்ன என்பதுபோல காவ்யா பார்த்தாள். "ஐ, ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கற பார்த்தயா? நீங்கெல்லாம் அமெரிக்கா லீவ்ல போறதா அதிதி சொன்னா?"

காவ்யா முழித்தாள். "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே..." கேதார் ஏதாவது உளறினானோ அதிதியிடம் என்று யோசித்தாள். "என்னடா, அமெரிக்கா போகப்போறதா சொன்னயாமே?" என்று தன் மகளை அன்றிரவு மெதுவாகக் கேட்டாள் அவள்.

"சும்மா தமாஷுக்கு" என்று அதிதி சொன்னதும் நிம்மதியாயிற்று.

ஆனால் இந்த சின்னப் பொய்கள் துளிர் விட்டு பெரிய மரமாகுவதை அவள் முதலில் கவனிக்கவில்லை. சிறிய பெரிய புகார்கள் வர ஆரம்பித்தன. வீட்டில் சண்டைகள் அதிகரித்தன. இப்பொழுது அதிதிக்கு 10 வயது. விவரம் புரிய ஆரம்பிக்கும் வயது. பொய்களின் மாளிகையோ அவள் வயதிற்கு மீறியவையாக வளரவே காவ்யா திக்குமுக்காடினாள். படிப்பிலோ சறுக்கு மரம் போல விளையாடினாள். ஒரு முறை மதிப்பெண் ஏறினாள், மறுமுறை அதள பாதாளம் தான்! படிக்க வைப்பதைவிட இமாலய மலை ஏறி விடலாம்.

அப்படி மோசமாக ஏதாவது நடக்கும் நேரத்தில் கேதார் பேசினால் அன்று முழுவதும் ஏதோ ஒரு சச்சரவு, சொல்ல முடியாத கோபம். சின்னச்சின்ன விஷயங்களிற்கு அழுகை, எரிந்து விழுதல், கூச்சல், சண்டை.

 விசாரிக்கக் கூட பயந்தாள். அதிதியை விட்டு  கேதார் தாராவிடம் பேச ஆரம்பிக்கும் பொழுது விஷயத்தை ஊகித்துக்கொண்டாள் காவ்யா.

அப்பவும் பெரிய மகளிடம் பேசத் தயங்கினாள். எப்படி விபரீதமாக போகமோ என்று பயந்தாள்.

ஆசிரியர்கள் அழைத்துப் பேசினார்கள். "கிளாஸ்ல கவனிக்க மாட்டேங்கறா, மத்தப்பசங்களையும் தொந்தரவு பண்ணறா."

"இந்த மாதிரி மக்கு நம்ப குடும்பத்துல இருந்ததே இல்ல. அந்த தறுதலையன் கொடுத்த சொத்து," என்று தந்தையும் சேர்ந்து தன் மகளைத் திட்டும் பொழுது உடைந்து போனாள் காவ்யா.

வேறு வழி இன்றி மகளை இது அது என்று ஏதோ விஷயங்களைத்தொட்டு என்ன பிரச்னை என்று தயங்கித்தயங்கி பேச்சைத்தொடங்கினாள்.

"அப்பா ராணி ஆண்டிய அம்மான்னு கூப்ட சொல்றாங்க. நான் மாட்டேன்னு சொன்னதுனால என்கூட பேச மாட்டேன்னு சொன்னார்," அதிதி சொல்லி முடிப்பதற்குள் தாரா அங்கு வந்தாள்.

"அம்மா, ராணி ஆன்டிய அம்மான்னு சொன்னா அப்பா என்ன அமெரிக்கா கூட்டிட்டு போறேன்னு சொன்னார். நான் சும்மா வெளையாட்டுக்கு சொல்லிட்டேன் அப்பாவும் என்ன கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டார்," என்று சந்தோஷத்தில் பூரித்துவரும் தாராவை அணைத்துக்கொள்வதா  இல்லை மடியில் சாய்ந்து விக்கி விக்கி அழும்  அதிதியை சமாதானப்படுத்துவதா என்று காவ்யாவிற்கு புரியவில்லை.

பாகம் 1
பாகம் 2





No comments:

Post a Comment