Sunday, September 13, 2015

அமாவாசையா பௌர்ணமியா? பாகம் 3

கல்யாண தேன்நிலா - பாகம் 1
தேய் பிறை பாகம் 2

இவனையா ஆசைப்பட்டு கல்யாணம் செய்துகொண்டோம் என்ற சந்தேகம் பிரபா மனதில் வேர் பிடித்து ஆட்டிப்படைத்தது. மணம் முடிந்த ஆரம்ப காலத்தில் இருந்த அன்பு இன்று எங்கு காணாமல் போய் விட்டது? தன் செல்வத்துடன் சிரித்து விளையாடும் நேரத்தில் கதிர் ஞாபகம் வந்தால் அப்படியே அந்தச்  சிரிப்பு மறைந்து விடும். குழந்தை மீது அந்த கோவம் பிரதிபலிக்க போகிறதே என்ற ஐயம் அவளை தன் கோவத்தை அடக்கிக்கொள்ள உதவியது. ஆனால் சில நேரங்களில், ச்சே, இதற்கு இவ்வளவு பாடு பாடுவது அவசியமா என்ற விரக்தியும் மனதை வாட்டியது.

அவன் வந்தவுடன் குழந்தையை அவனிடம் விளையாட விட்டு, வீட்டு வேலைகளில் மும்முரமாக இருப்பது போல் பாவனை செய்வாள் - சண்டைகளை தவிர்க்கத்தான். அவன் நெருங்கினால் இணங்கினாள். வெளியே அழைத்துச்சென்றால் பின் தொடர்ந்தாள். ஆனால் பாட்டை விட்டு விடு என்றால் மட்டும் மனம் ஒப்புக்கொள்ள வில்லை. அதுவே அவர்களுக்குள் நடுவில் சுவர் போல் நின்றது.

"நானும் தான் கிரிக்கெட் விளையாடின நாட்கள் உண்டு. குடும்பத்துக்காக அத விடல?" என்ற அவன் கேட்க ஆரம்பித்தான்.

"நான் விடச் சொல்லலையே," என்று அவனுக்கு அவள் நினைவூட்டினாள். "ஆசையா இருந்தால் திரும்பி போ வளையாட. நான் தடுக்கல," என்று கூட வற்புறுத்திப்பார்த்தாள்.

"என்னால் முடியாது," என்று அவன் அதை நிராகரிக்கும் பொழுது ஏமாற்றம் அதிகரித்தது.

"வெறும் வீடு, வேலைன்னு இருந்தா வாழ்க்கை எப்படி நன்னா இருக்க முடியும்? உனக்குன்னு ஒண்ணு இருக்க வேண்டாமா?" என்று மெதுவாக சுருதிப் பிடித்தாள். மனதில் ஒரு தெளிவு வந்தது. அவனைப் பற்றி தனக்கு தெரிந்தவற்றை ஆராய்ந்தாள். வேலைக்குபோகும் அவனுக்கு தன்னை பற்றிய சிந்தனை இல்லை, தான் வேலையை தவிர கூட ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்புக் கூட இல்லாமல் ஒரு யந்திரம் போலே இயங்கி வருகிறான் என்று புரிந்துக் கொண்டாள். அவன் மீது அனுதாபம் ஏற்பட்டது. விளையாட்டில் ஈடுபட்டிருந்த அவன் வாழ்க்கையில் விளையாட்டு சம்பந்தமாகவே ஏதாவது ஒரு வடிகால் இருக்க வேண்டும் என்று அவள் தீவிரமாக யோசிக்கலானாள்.

மெதுவாக அவன் கவனத்தை மரதோன் மீது ஈர்த்தாள். முதலில் ஏக்கத்துடன் அதைப் பற்றி பேசின அவனில் அதில் முயற்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தாள். பாட்டுகற்றுக்கொள்ள ஆரம்பித்த பொழுது தன்னுள் எழுந்த சந்தேகங்கள் தான் இன்று அவனையும் தயங்க செய்தது என்று நன்று அறிந்தாள். ஊக்கம் அளித்து அதில் முன்னேற அவனுக்கு அவள் தோள் கொடுத்தாள்.

சண்டை சச்சரவு இல்லாத வீடா? ஆனால் கூடவே சிரிப்பொலியும் போட்டிப்  போட்டுக்கொண்டு கேட்கும் இப்பொழுதெல்லாம் அவர்கள் வீட்டில்.

அமாவாசை போல் இருட்டிவிடுமோ அவர்கள் இல்லற வாழ்க்கை என்ற பயம் போய் பௌர்ணமிபோல் பிரகாசிக்கும் அன்பு நிலவில்  ஜொலித்தது கதிர்-பிரபா இல்லம்.

முற்றும்

No comments:

Post a Comment