Sunday, August 21, 2016

வளைந்த கரண்டி

வீட்டை ஒழிப்பது, அப்பப்பா, என்ன ஒரு பெரிய வேலை! அதிலும் வீடு மாற்றும் பொழுது பல வருடங்களாக ஒளிந்து கிடக்கும் குப்பை சத்தைகளுக்கு அளவே இல்லை! அதோ, அந்த ஷர்ட் - கணவன் மணி எப்பொழுதும் போட்டுக் கொண்டு அலைவார்! எப்பொழுது இந்தப் பயில் வந்தது? அதோ, மகள் காவ்யா காணவில்லை என்று அழுது ஆகாத்தியம் செய்த டெட்டி இங்குதான் இருக்கிறதா! ஏன் இந்த பயில் வந்து சிக்கிக்கொண்டது?

ஐயோ, இப்படி ஒவ்வொரு பொருளைப்பற்றியும் ஆராய்ந்துக்கொண்டிருந்தால் வேலை முடிந்தா மாதிரி தான். அவசர அவசர மாக அந்தப்பையை தூக்கிப் போடவேண்டிய பொருட்களுடன் வைத்து விட்டு சமையலறைக்கு வந்து, இது இன்னும் சுலபமாக ஒழிக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்தாள். ஒவ்வொன்றாக பாத்திரங்களை வெளியே எடுத்து உடைசல் நெடிசல்களையெல்லாம் ஒரு  ஓரமாக வைத்தாள்.

ஒரு வளைந்த கரண்டி எட்டிப்பார்த்தது. அதைக்கண்ட அவள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டாள். அதை கையில் எடுத்துப்பார்த்தாள். அப்படியே உலகம் சுழன்று அவளை ஒரு பதினைந்து இருவது வருடங்கள் பின்னால் தள்ளியது.

"சுகுணா என்னடி செய்யற?" அவள் அம்மா சமையல் அறையிலிருந்து அவளைக் கூப்பிட்டாள்.

"வரேன்மா" என்ற சுகுணா வரவில்லை.

"அடியேய்! சீக்கிரம் வா! இங்க பார், நான் வேலையா இருக்கேன். ஒத்தாசை செய்."

"இங்க பாருமா, சஞ்ஜய் மரத்துல தொங்கிண்டிருக்கான்!"

அதோ, அம்மா ஓடி வந்தாள், இதே கரண்டியுடன் தான்! அப்படியே சஞ்ஜய்  நிமிர்ந்து தரையில் குதித்தான். "ஏண்டி அம்மாட்ட வத்தி வெக்கற?" என்றுக்  கேட்டுக்கொண்டே வாசப்பக்கம் ஓடினான்!

"சண்டாளா! ஒரு நிமிஷம் சும்மா இருக்கயா! இதோ வந்துட்டேன் பார்," என்று அம்மாவும் துரத்தினாள். அவனை எட்டித் தாவி பிடித்து, பின்புறம் அந்த கரண்டியாலையே ஒன்று வைத்தாள். சுகுணாவிற்கு  தெரியும்,அவன் போடும் நாடகம் அவன் அம்மா போட்ட அடியை விட  படு பயங்கரம் என்று. "நான் சொன்னேன் மா, மரத்துல தொங்காதேன்னு," என்று அவள் இன்னும் கொஞ்சம் தூபம் போட்டாள்.

அவளம்மா இன்னும் இரெண்டு போட்டாள் அவன் பின்புறத்தில். "ஐயோ, அம்மா," என்று அவன் குதித்த அழகும், போட்ட கூச்சலும், சுகுணாவை  சிரிக்க வைத்தன. அடி வாங்கிக்கொண்டே அவன் அவளிடம் எச்சரிக்கை செய்வது போல் விரலை ஆட்டினான்.

ஏதோ தீயும் நாற்றம் வந்தது. அம்மா, "ஈஸ்வரா," என்றுச் சொல்லிக்கொண்டே சமயலறைக்கு ஓடினாள். சஞ்ஜய்  இவளை அடிக்க துரத்த இவளும் சமயலறையில் அம்மா மடியில் சரணம் புகுந்தாள். அது செய்தது கூட அறியாமல் அடுப்பை அணைத்து அம்மா  அந்த பாத்திரத்தில் ஒட்டிக்கொண்ட வெல்லத்துடன் மன்றாடினாள். அந்த அழுத்தத்தில் இந்த கரண்டி முடங்கியது!

ஒரே கோவம். "அடேய்!" என்று மறுபடியும் இவளை சீண்டும் சஞ்ஜய் அந்த கரண்டியால் ஒரு அடி வாங்கினான்.  சஞ்ஜய் அழத்தொடங்கினான். அதை கூட கவனியாமல் அந்த வெல்லப்பாகை எப்படியோ ஒரு வகையாக கடலைப் போட்டு உருட்டி - அப்பப்பா! இன்னும் அந்த பாகின் ருசி அவள் நாக்கில் ஊறியது.

முதலில் உதை வாங்கின சஞ்ஜய்க்குத்தான் அந்த உருண்டை எடுத்துக்கொடுத்தாள் அம்மா. தாய் மனம் பித்தல்லவா? மகனை பாகின்மீது வந்த கோபத்தினால் அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவனுக்கு வயிறு வலிக்க வலிக்க அந்த வேர்க்கடலை உருண்டையை கொடுத்து பிராயச்சித்தம் செய்து போக்க நினைத்தாள்.

அந்த கரண்டியை இப்படி அப்படி செய்து எப்படியோ சரி செய்யப்பார்த்தும் அது அந்த நாளின் ஞாபகார்த்தமாக முறுக்கிக்கொண்டே இருந்தது. ஏனோ அந்த கரண்டி, தன் தாய், அண்ணன் - மூன்றுமே ஒரு இணை பிரியாத ஞாபகமாக அவள் மனதில் வ்யாபித்துக்கொண்டனர். கல்யாணம் செய்து கொண்டு மணி வீட்டிற்கு வரும் பொழுது, அந்த கரண்டியை சீதனமாக எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். மாமியார் இருக்கும் வரை அதை எடுக்காமல் இருந்தவள் அதைப் பற்றி மறந்தே போய் விட்டாள்.

அந்த ஞாபகார்த்தத்தை பத்திரமாக தன் பொட்டிக்கொள் வைத்துக்கொண்டாள். அடுத்த முறை சஞ்ஜய் வீட்டிற்கு வரும் பொழுது இதை காட்ட வேண்டும் என்று எண்ணி, தன் மறைந்த தாய்க்காக வழிந்த இரண்டு சொட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

.  

Tuesday, August 16, 2016

ஒரே நொடி

உன் பிஞ்சு உடல் கையில் தாங்கி
உன் கூக்குரல் கேட்க ஏங்கி
என் மார்புடன் அணைக்கும் போது
போவதே தெரியவில்லை பொழுது

என்னையே நம்பி வந்தாய் என்று எண்ணினேன்
என் உயிரையே உனக்காகக் கொடுக்கத் துணிந்தேன்
என் உயிர் துறந்தபின் உன் கதி  என்ன என்று பயந்தேன்
நானில்லாமலும் நீ வாழ உனக்குக் கற்பித்தேன் 

உறவுகள் தரும் சுகமடா 
நொடியில் மறையும் மாயையடா
நாம் கைகள் பிணைத்துக் கொண்டாலுமே
நம்மை பிரிக்க முனையும் காலமடா

வாழ்க்கை மிகவும் மோசமடி
எந்த நொடியும் ஏமாற்றுமடி
உன்னையே நம்பி நீ வாழடி
உன் மனதில் உரம் ஏற்றடி.




Sunday, August 7, 2016

தாய்வீடு

மேகலா அலாரம் அடிப்பதை கேட்டு பெருமூச்சு விட்டாள். அதற்குள் விடிந்துவிட்டதா!

ஒரு ஐந்து நிமிடம் படுக்கையில் சோம்பி, பின் எழுந்து பரபரப்பாக காலைச்சடங்குகளை முடித்து, சமையல் வேலைகளை கவனிக்கலானாள்.

கணவன் சிவா எழும் ஓசை கேட்டு, காபி போட்டு மேசை மீது வைத்தாள். சின்ன மகள் நிம்மிக்கு பாலும்,  பெரியவன் தினேஷிற்கு ஜூசும் தயார் செய்தாள். இருவரையும் எழுப்புவது ஒரு பெரும் ஜோலி. அதையும் சமையலுக்கு இடையில் செய்தாள். சிவாவிடம் சொன்னால் இன்னி முழுக்க அவன் கொஞ்சி எழுப்புவதில் சென்றுவிடும், அவர்கள் பள்ளிக்கு லேட்டாகத் தான் போவார்கள். ஆகையால் அவளே இந்த பணியை தானே செய்தாள். தன்  மத்திய உணவை சிவா எடுத்து வைத்துக்கொள்வதுதான் அவளுக்கு பெரிய உதவி.

ஒரு வழியாக எல்லோரும் கிளம்பி விட்ட பின் அவள் அரை மணி நேரத்திற்கு யோகா செய்தாள். பிறகு காலை சிற்றுண்டி உண்டு, வெளியில் சென்று முடிக்க வேலைகளை முடித்து வந்து, மத்திய உணவிற்கு பிறகு குழந்தைகளுக்கு பள்ளியிலிருந்து திரும்பும் நேரத்தில் உண்ண ஒரு டிபன். அவரகள் வீட்டில் நுழையும்பொழுதே நடக்கும் போர்களுக்கு சமாதானம். அவர்களை படிக்க வைக்க, வெவ்வேறு கிளாஸ்களுக்கு கூட்டிச்சென்று, அழைத்து வரும் பொறுப்பு, மறுபடியும் வீட்டு வேலைகள்...படுக்கும் பொழுது அப்பாடா என்று ஆகி விடும்.

இதே சக்ரவியூஹத்தில் இன்னும் எத்தனை நாட்கள் சுழலப்போகிறோம் என்ற பயம் ஒரு பக்கம்; கணவன், மக்களிடமிருந்து உதவி எதிர்பார்க்க முடியாத தவிப்பு; அவர்களும்தான் சுழலில் சிக்கியிருக்கிறார்கள் என்ற அனுதாபம்; அவர்களுடைய படிப்பு, கணவன் வேலையில் சந்திக்கும் சவால்கள், வண்டி ஓட்டுவதில் படும் அவஸ்தைகள்... அந்த கவலைகளும் தான் சேர்ந்து அவள் மேல் பாரமாக இருந்தன. தான் புலம்பினால் இந்த குடும்பம் சுக்குநூறாகி விடும் என்ற உணர்வு அவளை பல்லைக்கடித்துக்கொண்டு, ஏன், சிரித்துக்கொண்டே கூட, இந்த வாழ்க்கையை ஓட்ட கட்டாயப்படுத்தின.

அந்த வார கடைசியில் தன் தாய் வீட்டில் சென்று வாச அறையில் உட்கார்ந்தாள் மேகலா. அவள் தாய் ஜானகியிடம் அவளுடைய குழந்தைகள், "இன்னிக்கு என்ன பாட்டி ஸ்பெஷல்," என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றனர்.

வாச அறையில், சோஃபா மீது காலை தூக்கி வைத்து கண் அயர்ந்த மேகலாவிற்கு சில நேரங்களுக்கு இந்திரலோகம் சென்ற சுகம். தன் பாரம் எல்லாம் நீங்கி, தானும் ஒரு குழந்தைபோல், கவலைகள் இன்றி கனவு லோகத்தில் உலாவினாள்.

அந்த அரை மணி நேர உறக்கம் வைட்டமின் டோஸ் போல இவளுக்கு இன்னும் ஒரு வாரம் சுழலில் போராட பலம் கொடுத்தது.