Sunday, August 7, 2016

தாய்வீடு

மேகலா அலாரம் அடிப்பதை கேட்டு பெருமூச்சு விட்டாள். அதற்குள் விடிந்துவிட்டதா!

ஒரு ஐந்து நிமிடம் படுக்கையில் சோம்பி, பின் எழுந்து பரபரப்பாக காலைச்சடங்குகளை முடித்து, சமையல் வேலைகளை கவனிக்கலானாள்.

கணவன் சிவா எழும் ஓசை கேட்டு, காபி போட்டு மேசை மீது வைத்தாள். சின்ன மகள் நிம்மிக்கு பாலும்,  பெரியவன் தினேஷிற்கு ஜூசும் தயார் செய்தாள். இருவரையும் எழுப்புவது ஒரு பெரும் ஜோலி. அதையும் சமையலுக்கு இடையில் செய்தாள். சிவாவிடம் சொன்னால் இன்னி முழுக்க அவன் கொஞ்சி எழுப்புவதில் சென்றுவிடும், அவர்கள் பள்ளிக்கு லேட்டாகத் தான் போவார்கள். ஆகையால் அவளே இந்த பணியை தானே செய்தாள். தன்  மத்திய உணவை சிவா எடுத்து வைத்துக்கொள்வதுதான் அவளுக்கு பெரிய உதவி.

ஒரு வழியாக எல்லோரும் கிளம்பி விட்ட பின் அவள் அரை மணி நேரத்திற்கு யோகா செய்தாள். பிறகு காலை சிற்றுண்டி உண்டு, வெளியில் சென்று முடிக்க வேலைகளை முடித்து வந்து, மத்திய உணவிற்கு பிறகு குழந்தைகளுக்கு பள்ளியிலிருந்து திரும்பும் நேரத்தில் உண்ண ஒரு டிபன். அவரகள் வீட்டில் நுழையும்பொழுதே நடக்கும் போர்களுக்கு சமாதானம். அவர்களை படிக்க வைக்க, வெவ்வேறு கிளாஸ்களுக்கு கூட்டிச்சென்று, அழைத்து வரும் பொறுப்பு, மறுபடியும் வீட்டு வேலைகள்...படுக்கும் பொழுது அப்பாடா என்று ஆகி விடும்.

இதே சக்ரவியூஹத்தில் இன்னும் எத்தனை நாட்கள் சுழலப்போகிறோம் என்ற பயம் ஒரு பக்கம்; கணவன், மக்களிடமிருந்து உதவி எதிர்பார்க்க முடியாத தவிப்பு; அவர்களும்தான் சுழலில் சிக்கியிருக்கிறார்கள் என்ற அனுதாபம்; அவர்களுடைய படிப்பு, கணவன் வேலையில் சந்திக்கும் சவால்கள், வண்டி ஓட்டுவதில் படும் அவஸ்தைகள்... அந்த கவலைகளும் தான் சேர்ந்து அவள் மேல் பாரமாக இருந்தன. தான் புலம்பினால் இந்த குடும்பம் சுக்குநூறாகி விடும் என்ற உணர்வு அவளை பல்லைக்கடித்துக்கொண்டு, ஏன், சிரித்துக்கொண்டே கூட, இந்த வாழ்க்கையை ஓட்ட கட்டாயப்படுத்தின.

அந்த வார கடைசியில் தன் தாய் வீட்டில் சென்று வாச அறையில் உட்கார்ந்தாள் மேகலா. அவள் தாய் ஜானகியிடம் அவளுடைய குழந்தைகள், "இன்னிக்கு என்ன பாட்டி ஸ்பெஷல்," என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றனர்.

வாச அறையில், சோஃபா மீது காலை தூக்கி வைத்து கண் அயர்ந்த மேகலாவிற்கு சில நேரங்களுக்கு இந்திரலோகம் சென்ற சுகம். தன் பாரம் எல்லாம் நீங்கி, தானும் ஒரு குழந்தைபோல், கவலைகள் இன்றி கனவு லோகத்தில் உலாவினாள்.

அந்த அரை மணி நேர உறக்கம் வைட்டமின் டோஸ் போல இவளுக்கு இன்னும் ஒரு வாரம் சுழலில் போராட பலம் கொடுத்தது.





No comments:

Post a Comment