Tuesday, March 28, 2017

கண்ணாடி

கண்ணாடியின் முன்னாடி
நான் என்னுடன் விளையாடி
என் கண்களுடன் உறவாடி
என் உண்மையென்ன என்று தேடி

அறிந்த பின்னும் அறியாமல்
பார்ப்பதெல்லாம் புரியாமல்
தவறுகள் சிலது  தெரியாமல்
அதைச் சகிக்க முடியாமல்

விழுந்தது கண்களில் திரை
நாடகம் அதில் பல வகை
தினம் ஒரு புதுக்  கதை
அதற்கும் இருந்தனர் பல ரசிகை

நிழலே நிஜமாக
பொய்யே மெய்யாக
பிம்பம்  தடுமாற
உயிர்  ஊசலாட

கண்ணாடி பொய்யாகுமா?
கண்கள் தடுமாறுமா?
கற்பனை உண்மையாகுமா?
தன்னையே ஏமாற்றமுடியுமா?

மனதும் தெளிந்தது
திரையும் கிழிந்தது
கண்ணும் கண்ணும் சந்தித்தது
புது நம்பிக்கை பிறந்தது

இதுவே நான்
நானே தான்
என் நிஜம் இதுதான்
இதில் எனக்கு பெருமைதான். 

அகமும் முகமும் ஒன்றே
நிஜத்தால் பொய்யைய் வென்றே
நம்பிக்கையுடன் முன்னே சென்றே
வாழ்வேன் இனி நன்றே 

Tuesday, March 21, 2017

நினைவுகள் விலைபோகும்

டாக்ஸியிலிருந்து மல்லிகா இறங்கினாள். வீட்டைப் பார்க்கும் பொழுது இடி விழுந்தது போல் தோன்றியது. ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் எந்த வித பராமரிப்பும் இல்லாமல் பழுது படிந்து, பாழடைந்து கிடந்தது. கண்ணில் தேம்பி நின்று கண்ணீரை மறைக்க முயன்று, டிரைவருக்குக் காசை கொடுத்து அனுப்பிவிட்டு, பெட்டியைத்தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். பையிலிருந்து சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தாள். உள்ளே தூசி படிந்திருந்தது. மூக்கை மூடிக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு, பெட்டியை வாச அறையில் வைத்து, துடைப்பம் இருக்க வேண்டிய இடத்திற்கு சென்றாள். ட்ரெயினில் வந்த கிளைப்பு, மேலும் பூமியிலிருந்து எழும் தூசி... அப்படியே போட்டுவிட்டு வெளியே வந்தாள். எல்லோருக்கும் முன்னாடி வர வேண்டிய அவசியமென்ன? மூத்த மகள், பொறுப்பெடுத்து பழகி விட்டது.