Tuesday, March 21, 2017

நினைவுகள் விலைபோகும்

டாக்ஸியிலிருந்து மல்லிகா இறங்கினாள். வீட்டைப் பார்க்கும் பொழுது இடி விழுந்தது போல் தோன்றியது. ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் எந்த வித பராமரிப்பும் இல்லாமல் பழுது படிந்து, பாழடைந்து கிடந்தது. கண்ணில் தேம்பி நின்று கண்ணீரை மறைக்க முயன்று, டிரைவருக்குக் காசை கொடுத்து அனுப்பிவிட்டு, பெட்டியைத்தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். பையிலிருந்து சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தாள். உள்ளே தூசி படிந்திருந்தது. மூக்கை மூடிக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு, பெட்டியை வாச அறையில் வைத்து, துடைப்பம் இருக்க வேண்டிய இடத்திற்கு சென்றாள். ட்ரெயினில் வந்த கிளைப்பு, மேலும் பூமியிலிருந்து எழும் தூசி... அப்படியே போட்டுவிட்டு வெளியே வந்தாள். எல்லோருக்கும் முன்னாடி வர வேண்டிய அவசியமென்ன? மூத்த மகள், பொறுப்பெடுத்து பழகி விட்டது.



எப்படியோ ஒரு ஆளைப் பிடித்து, வீட்டை சுத்தம் செய்து விட்டு, பக்கத்து ஹோட்டலுக்குச் சென்று, காலைச் சிற்றுண்டி அருந்திவிட்டு வீடு திரும்பினாள். வாச உள்ளில், சோஃபாவில் அமர்ந்தாள். சற்று கண்ணயர்ந்தாள். திடீரென்று அம்மா கூப்பிட்ட மாதிரி  இருக்கவே, "வரேன் மா," என்றபடி எழுந்தாள். உடல் சிலிர்த்தது. என்ன மடத்தனம்! சமையலறை பக்கம் சென்று எட்டிப் பார்த்தாள். அம்மா கடைசியில் புதிதாக வாங்கிக்கொண்ட அடுப்பு, அதில் தான் எத்தனை வகை வகையான தளிகை! ஒரு வருடம் முன்னாள் அவள் இறந்த பிறகு மல்லிகாதான் இருந்து, பண்டங்கள் எல்லாவற்றையும் ஒழித்து, சுத்தம் செய்தாள். இங்கிருக்கும் இரண்டு நாட்களிற்காக மறுபடியும் சாமான் வாங்க வேண்டுமா வேண்டாமா என்பதை மற்றவர்கள் வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவள், ஒவ்வொரு உள்ளாக நடந்து வந்தாள். ஒவ்வொரு மூலையிலும் ஒரு ஞாபகம் கலந்திருந்தது - சிரித்தது, அழுதது, கோபப்பட்டது, பயந்தது...

அப்பா அறை. தன் திருமணம் வரை அவள்தான் அதை சுத்தம் செய்தாள். பிறகு யார் பொறுப்பை எடுத்துக்கொண்டார்? யார் இருந்தா எடுத்துக் கொள்ள? தம்பிகள், தங்கை எல்லோரும் முன்பே வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று விட்டனர். இந்த தோட்டம், வாசல், கோலம், மாடி...முற்றம்... அத்தனை மூலை முடுக்குகளிலும்  அவள் அடையாளம் தான் பதிந்திருந்தது ...

மத்திய உணவிற்குள் தங்கை சரிகாவும் கடைக்குட்டி தினேஷும் வந்தனர். "என்ன, வீடு இப்படி இருக்கு?" என்று தினேஷ் நுழைந்த உடனே கேட்டான். பெருமூச்சுடன் தலையாட்டினாள் மல்லிகா. உணவு ஆர்டர் செய்திருந்தாள் . அதை பருகி, "உனக்கு ஞாபகமிருக்கா?" என்று வரிக்கு வரி பழைய நினைவுகளை புரட்டி, ஆராய்ந்து, பகிர்ந்து, விவாதித்து, சிரித்து... அவ்வளவு இன்பமாக பறந்தது நேரம்.

ராஜேஷ், மல்லிகாவுக்கு அடுத்து பிறந்தவன், சாயந்தரம் வந்து சேர்ந்தான்.  அவன் எப்பவுமே வித்தியாசமாகத் தான் எதையுமே செய்வான். எல்லோரும் ஒரு வழிச் சென்றால், அவன் வேறு பாதையை  தேடுவான்.  எல்லோரும் ட்ரெயினில் வந்தால், அவன் விமானத்தில் வருவான். எல்லோரும் மலைப்பிரதேசத்திற்கு லீவுக்குச் சென்றால் அவன் காடுகளுக்குச் செல்வான். எல்லோரும் அழகை ரசித்தால் அவன்  கொடிய மிருகங்களை படம் பிடிப்பான்.

இங்கு வர ஒப்புக்கொண்டதே அவர்களுக்கு ஆச்சர்யம். கடைசி நிமிடம் வரைக்கும் எந்த காரணத்தையும் காட்டி பின் வாங்காதது இன்னும் பெரிய ஆச்சர்யம் தான்.

அவன் வந்ததும், கொஞ்சம் குதூகலம் குறைந்தது, சம்ப்ரதாயம் நுழைந்தது. குசலம் விசாரித்தப் பின் டீ குடித்துக்கொண்டே மாடியில் இருந்த வராண்டாவில் அமர்ந்தனர்.

வந்த வேலையைய்  பார்ப்போம் என்கிற சூழ்நிலை படர்ந்தது.

"வீட்டை என்ன செய்வது?" மல்லிகா ஆரம்பித்தாள். "இன்று காலை வரும்பொழுது திக்கென்று இருந்தது. இப்பகூட, ஏதோ சுத்தப்படுத்தி வாங்கிக்கொண்டேனே தவிர, இன்னும் என்ன என்ன பராமரிப்பு தேவையோ."

"ஒரு முறை செய்தால் போதாதே," என்று சரிகா நினைவூட்டினாள். "மேலும் மேலும் செலவுதான். அது மட்டும் இல்லாமல், யார் பார்த்துக் கொள்வது?"

"விற்பதுதான் மேல்," என்று தினேஷ் திட்டவட்டமாகச் சொன்னான். "ரொம்ப நாள் காத்திருந்தால் வீட்டின் மதிப்பு குறைந்துவிடும்," என்று வற்புறுத்தினான்.

ராஜேஷ் அவனை ஏறெடுத்துப் பார்த்தான். "விற்பதற்கு  என்ன அவசரம்? விற்க வேண்டுமா என்ன? வாடகைக்கு விட்டுவிடலாமே?"

விற்கவேண்டும் என்ற பேச்சு எழுந்த உடன் மல்லிகா மனது கனத்தது. ராஜேஷின் இந்தப் பேச்சு சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

"மல்லிகாவைப்பற்றி தெரியாது. அவள்தான் இந்த வீட்டில் எல்லோரையும் விட அதிக நாள்  இருந்தவள். எனக்கு இது வெறும் கட்டிடம் இல்லை, ஸ்வர்கம்... இதில் என் நினைவுகள் கலந்திருக்கு. விற்பதென்பது..." ராஜேஷ் ஒருத்தி வகை பரபரப்புடன் எழுந்து நடந்தான்.

மல்லிகா அவன் அருகில் சென்று அவன் தோள் மீது ஆதரவாக கைப் போட்டாள். "உண்மைதான், ராஜேஷ். நான்தான் எல்லோரையும் விட அதிகமாக இந்த வீட்டில் இருந்தவள். நீங்களெல்லோரும் மேல் படிப்பிற்காக வெளியூர் சென்று விட்டபோதும் நான் இங்கேயே இருந்தேன். இருபத்தைந்து வயதில் என் திருமணம் நடக்கும் வரை இங்கு தான் இருந்தேன்..." அவள் குரல் தழுதழுத்தது. "ஆமாம், எனக்கும் இது கட்டிடம் இல்லை, நினைவுகளின் களஞ்சியம். இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒரு நினைவு பதிந்திருக்கிறது." நீர் பொலபொலவென்று வழியவே அவள் சற்று மௌனமானாள்.

சரிகா அவளை கட்டிக்கொண்டாள். தினேஷும் ராஜேஷும் அவர்கள் நிதானமடைவதற்காக காத்திருந்தனர்.

மல்லிகா தன்னை சுதாரித்துக்கொண்டாள். சரிகா மெதுவாகக் கேட்டாள், "இந்த ஒரு வருடத்திலேயே நம்மால் வீட்டை காப்பாத்த முடியலையே..."

"அதற்குத்தான் வாடகைக்கு விடலாமென்று நினைக்கிறேன்."

"அதில் வருவதை எப்படி பங்கிட்டு கொள்ளப் போகிறோம்?" தினேஷ் கேட்டான்.

"ஒரு வங்கியில் போட்டு வைக்கலாம். வருடக் கடைசியில், வீட்டிற்காக செலவழித்தது போக என்ன இருக்கிறதோ அதை பங்கு போட்டுக் கொள்ளலாம்," இந்த கேள்வியை எதிர்பார்த்தவன் போல் கூறினான் ராஜேஷ்.

சரிகா மெல்லிய குரலில், "எனக்கு பணம் அவசரமாகத் தேவைப் படுகிறது..." முகத்தில் சங்கடம் தெரிந்தது. தினேஷை ஆதரவு கோரிப் பார்த்தாள். அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரே வருட வித்தியாசம்தான். சிறிய வயதில் கூட அவர்கள் இணைந்தே எல்லாம் செய்வார்கள். அவன் செய்யும் லூட்டியை அவள் மறைப்பாள். அவளை யாராவது ஏதாவது சொன்னால் அவன் பாதுகாப்பாக நிற்பான்.

இந்த முறையும் அவன் தவறவில்லை. "எனக்குக் கூட," என்றான்.

"என்றைக்குத்தான் உனக்கு பணம் தேவைப் பட்டதில்லை?" என்று ராஜேஷ் இகழ்ச்சியுடன் சொன்னான்.

"என்றைக்குத் தான் நான் கடனை அடைத்ததில்லை?" என்று ரோஷமாக தினேஷ் கேட்டான்.

"வரவுக்கு ஏற்ற செலவுன்னு அப்பா எத்தனை முறை சொல்லியிருப்பார்?"

"சிலபேர் வரவுக்கு கணக்கிருக்காது, சிலபேருக்கு வேண்டிய வரவு இருக்காது," என்று தினேஷ் சலிக்காமல் பதில் கூறினான்.

"அதற்கு வேண்டிய திறனும் படிப்பும் வேண்டும்," என்றான் ஏளனமாக.

சரிகா உடனே, "ஐந்து விரலும் ஒன்று போல இல்லை, ராஜேஷ்," என்று குரலில் கடுமை தொனிக்க கூறினாள்.

அவளை நக்கலுடன் பார்த்த அவன், "இந்த விஷயத்தில் நீங்கள் இருவரும் ஒன்று போலத்தான்," என்றான்.

"யாருக்குத்தான் பணம் தேவை இல்லை? உனக்கு மட்டும் அப்படி இல்லையா?" என்று நேர கேட்டே விட்டாள்.

அவன் முகம் மாறியது. இன்னும் இரண்டு நாள் எந்த சண்டையும் இல்லாமல் கழிக்க வேண்டுமே என்பதற்காக மல்லிகா சரிகாவை அடக்க முயலுவதற்கு முன் ராஜேஷ், குரலில் என்ன பாவம் தொனிக்கறது என்று சொல்ல முடியாதபடி, பதில் சொன்னான், "உண்டு. ஆனால் இப்படித்தான் கிடைக்க வேண்டுமா?"

"வேறு வழி என்ன? இந்த மாதிரி வீட்டில் வரக்கூடியவர்கள் நல்ல வாடகை கொடுப்பார்களா என்று தெரியாது. மேலே மேலே பராமரிப்பதற்கு பணத்தை குடிக்கும். பிளாட் கட்ட வேண்டியிருக்கும். பிறகு இடம் வேண்டுமென்றால் மிஞ்சுமே தவிர நினைவுகள் காப்பாற்றப் படப்போவதில்லை," என்று துல்லியமாக கூறினாள்.

"நீ என்ன நினைக்கறே, மல்லிகா?" ராஜேஷ் கேட்டான்.

"அது மட்டுமில்லை, அம்மாவின் நகையையும் நாம் இந்த இரண்டு நாட்களில் பங்குபோட்டுக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்." சரிகா குறுக்கிட்டாள்.

மல்லிகா திடுக்கிட்டாள். ராஜேஷ் சரிகாவை ஏறெடுத்துப் பார்த்தான். தினேஷ் கூட சற்று அசந்துபோன மாதிரி இருந்தது.

"எனக்கு அம்மாவோட ஒடியோணம் வேண்டும்," என்றாள் மல்லிகா. "அதை அம்மா எனக்குத்தான் என்று நிறைய தடவை கூறியிருக்கிறாள்."

"அது நல்ல கனம்," என்று சரிகா எச்சரித்தாள்.

"பத்து சவரன்," என்றாள்  மல்லிகா. "அதற்கு ஈடா நீங்களெல்லோரும் மற்ற நகைகளை எடுத்துக்கொள்ளலாம்."

"மூத்தவள் என்பதால் எப்பவுமே நீ முதலில் வேண்டியதை எடுத்துக் கொண்டு விடுவாய்," என்று சரிகா முணுமுணுத்தாள்.

"பொறுப்புகள் உட்பட," என்று மல்லிகா சுட்டிக் காட்டினாள். "போன வருடம் அம்மா போன பிறகு நான்தான் இங்கு சரி கட்டினேன். நீங்கள் எல்லோரும் வேலையை காரணம் காட்டி ஓடி விட்டீர்கள்."

"அதை இந்த ஒரு வருடத்தில் முந்நூற்று அறுபது நாளாவது சொல்லி காட்டியிருப்ப," என்று தினேஷ் குறுக்கிட்டான்.

"கசக்கறதோ? அக்கா, பொண்டாட்டிக்கு பிரசவம் பார்க்க ஒத்தாசை வேண்டும் என்று என்னைத்தானே கூப்பிட்ட?" அவளும் விடாமல் பதில் சொன்னாள்.

"அதுவா இப்ப முக்கியம்?" ராஜேஷ் மேலும் வாதம் வளர்வதை தடுத்தான். அன்றிரவு உணவின்பொழுது அமைதி நிலைத்தது. ஆனால் வீட்டை விற்கவேண்டுமா என்ற கேள்வி திரும்பத் திரும்ப எழுந்தது.

"எனக்கு தெரிந்த ஒருவன் ஒரு கோடி வரைக்கும் கிடைக்கும் என்கிறான்," என்று தினேஷ் கூறினான். ஆளுக்கு 25 லக்ஷம். கண்களில் ஒளி வீசியது, ஆசை கிளம்பியது. "அப்படியும் இப்படியுமா 1.25 கோடிக்கு கூட விற்கப் பார்க்கலாம்," என்று அவன் மேலும் சொன்னதும், எல்லா விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.

ஒவ்வொரு நகை, பொருள், வீட்டின் மதிப்பு, அதை எப்படி பிரிப்பது... விலை போகப் போக, ஆசை வளர வளர, எதிர்பார்ப்புகள் பெறுக பெறுக, நிஜ வாழ்க்கை நடுவில் குறுக்கிட நினைவுகள் நிழல் மாதிரி மறைய மறைய... எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லும் கதைபோல கற்பனையாக மாறியது.





No comments:

Post a Comment