Sunday, September 15, 2019

ஒரு பூரான் பாம்பாகிறது

"என் கால் மேல இன்னிக்கு ஒரு பூரான் ஏறிச்சு," என்று சேகர் மனைவி அனுவிடம் கூறினான்.

"அயோ அப்படியா?" என்று கேட்ட அனு தரையை ஆராய்ந்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.


"எங்கே போச்சு?" என்று பன்னிரண்டு வயது மகன் அசோக் கேட்டான்.

"தெரியல," என்று சேகர் கூறிவிட்டு குளியறைக்குள் நுழைந்தான்.

அனுவை மூத்த மகன் அனுப்பிய செய்தி வாட்டி எடுத்தது - 'இந்த பரீக்ஷை எழுதியே தீரணமா? எனக்கு மலைப்பாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட்டு எங்கேயாவது ஓடி விடலாம் போல தோன்றுகிறது.'

சேகரிடம் காட்டிய போது அவனும் கலங்கி விட்டான். "எதையாவது செய்துகொள்ள போறான். படிச்சது போதும், வீட்டுக்கு வரச் சொல்லு," என்றான்.

"இவ்வளவு செலவு செஞ்சி அனுப்பிச்சிருக்கோம்..." என்று அனு தயக்கத்துடன் இழுத்தாள்.

"பணமா முக்கியம்?" என்று சேகர் கடிந்துகொண்டான்.

பணம் முக்கியமில்லைதான், ஆனால் ரவி ஆசைப்பட்டு சேர்ந்த மேல் படிப்பிற்கான பயிற்சி இது. இன்று மலைப்பினால் அதை விட்டால் நாளை கடினமான சூழ்நிலைகளை எப்படி சந்திப்பான்? இல்லை, நினைத்ததை சாதிக்கவில்லை என்ற ஏமாற்றம் அவனை பிற்காலத்தில் எப்படி தாக்கும் என்று யாருக்குத் தெரியும்?

அவசரப்பட்டு பதில் போட வேண்டாம் என்று அனு தயங்கினாள். இப்பவும் அவனை எப்படி தேற்றி விடுவது என்ற கவலை அவளை மூழ்த்தியது. காரில் நான்கே மணி நேரத்தில் போய் விடலாம். போனில் இரண்டு நிமிடம் கூட ஆகாது அவனுக்கு ஆறுதல் சொல்ல. ஆனால் தழுவி அணைக்க துடித்த மனதிற்கு இந்த தூரம் அதிகமாகத் தோன்றியது.

இரண்டாவது மகன் தன் தந்தையுடன் பூரான் ஆராய்ச்சியில் இறங்கியது கேட்டு எட்டிப் பார்த்தாள்.

"பாத்ரூம்ல பூரான் இன்னும் இருக்கா?"

"அந்த பாத்ரூம்ல ஒரு ஓட்டைக்குள்ள ஓடிச்சு, பார்த்தேன். பூச்சி மருந்து கொடு, அசோக்," என்று தன் மகனைக் கேட்டான்.

மகன் ஓடிச்சென்று பூச்சிக்கொல்லி மருந்தை தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு, "நான் இங்கேருந்து பார்க்கறேன், அது வெளியே வந்தா சொல்றேன்," என்றான்.

"குட்," என்று தன் மகனைத் தட்டிக்கொடுத்துவிட்டு சேகர் மருந்து அடித்தான். எந்த பூச்சியும் வெளியே வரவில்லை.

"நேரம் ஆகிறது, கிளம்ப வேண்டாமா?" அனு குரல் கொடுத்தாள்.

"ஓடு, அம்மா திட்டறதுக்கு முன்னாடி குளிச்சிட்டுவா," என்று சேகர் அசோக்கைப் பார்த்து கண் சிமிட்டினான். அசோக் விரைந்து தன் டவலை எடுத்துக்கொண்டு  என்றும்  உபயோகப்படுத்தாத பொது குளியறையுள் நுழைந்தான்.

"ஏண்டா அங்க போற?" என்று சேகர் கேட்டான்.

"சும்மா, அந்த ரூமையும் உபயோகப் படுத்தலாமேன்னு தான்," என்று அசோக் சொன்னதைக் கேட்ட அனுவும் சேகரும் சிரித்தனர்.

"பூரான் பயம்தானே?" சேகர் கேலி செய்தான்.

"அயோ, இல்லை," என்று பெரும் வீரன் போல் அசோக் நடித்தான்.

"அது என்ன செய்யும்? உன்ன பார்த்து பயந்து ஒளியும்."

அசோக் எதற்கும் படியவில்லை, பொது பாத்ரூமுக்குள் நுழைந்தான். "பெரிய பாம்பை பார்த்த மாதிரி பயப்படறானே! அதை எதிர்த்து நின்னாத்தானே தெரியும், வெறும் பூரானா பாம்பான்னு?"

சேகர் சொன்னதில் அனுவின்  மனம் தெளிந்தது. ரவிக்கு பதில் போட்டாள், "உன் மனதில் பரீக்ஷை மலைபோல் தெரிகிறது. அது மலையா குன்றா என்று அதை எதிர்கொண்டால்தானே தெரியும்? நீ வெல்கிறாயா, தோல்வி அடைகிறாயா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் தைரியமாக இந்தக் கட்டத்தைத் தாண்டு. நாங்கள் உன்னுடனிருக்கிறோம்."

அவனிடமிருந்து வெறும் "நன்றி" என்கிற பதில் மட்டுமே வந்தது. பரீக்ஷைக்கு கிளம்புகிறான், அதனால் நேரம் இருக்காது என்று உணர்ந்து அமைதியாக இருந்தாள்.

மத்தியம் இரண்டு மணிக்கு அவன் போனில் தொடர்பு கொண்டான். "அம்மா, நீ சரியாகத்தான் சொன்னாய். பரீக்ஷை எழுதியதே பாரம் இறங்கியது போல் இருக்கிறது... வெற்றி கிடைக்குமா என்று தெரியாது, ஆனால் கிடைக்கவில்லை  என்றால் இன்னொரு முறை முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது."

அமைதியடைந்த தாய், மாலை அசோக் பள்ளியிலிருந்து வந்த பின் பூரான் பயத்தை எப்படி வெல்வது என்ற சூழ்ச்சியில் மூழ்கினாள்.

No comments:

Post a Comment